67. வேதத்துடன் ஞானமும் வழங்கப்பட்ட நபிகள் நாயகம்

 

இவ்வசனங்கள் (2:129, 2:151, 2:231, 3:164, 4:113, 33:34, 62:2) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வேதம் வழங்கப்பட்டதைப் பற்றி கூறும்போது வேதத்தை வழங்கினோம் என்று மட்டும் கூறாமல் வேதத்தையும், ஞானத்தையும் வழங்கியதாகக் கூறுகின்றன.

 

தக்க காரணங்களுடன் தான் இவ்வாறு கூறுகிறது.

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மட்டுமின்றி மற்ற இறைத்தூதர்களுக்கும் வேதத்துடன் ஞானமும் வழங்கப்பட்டதாக 3:48, 3:81, 4:54, 5:110 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.

 

வேதத்தை மட்டும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இறைவன் அருளவில்லை; வேதத்துடன் ஹிக்மத் எனும் ஞானத்தையும் சேர்த்து அருளி இருக்கிறான் என்பதை இவ்வசனங்களில் இருந்து புரிந்து கொள்ளலாம்.

 

"வேதத்தையும் ஞானத்தையும்'' என்ற சொற்றொடர் "ஞானமுடைய வேதம்'' என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று சிலர் உளறுகின்றனர்.

 

"ஞானமுடைய வேதம்'' என்பதை "வேதத்தையும் ஞானத்தையும்'' போன்ற வார்த்தைகளால் அறிவுடைய எவரும் கூற மாட்டார். ஞானமிக்க வேதம், ஞானம் நிரம்பிய வேதம் என்பது போன்ற வார்த்தைகளால் தான் இக்கருத்தைத் தெரிவிப்பார். வேதமும் ஞானமும் என்பது இரண்டு பொருட்களைத்தான் குறிக்கும் என்பது இவர்களுக்கு விளங்கவில்லை.

 

மேலும் மேற்கண்ட வசனங்களில் பயன்படுத்தப்பட்டுள்ள சில சொற்களும் இவர்களின் அறியாமையை எடுத்துக் காட்டும் வகையில் அமைந்துள்ளன.

 

குர்ஆனைப் பற்றிக் கூறும்போது குர்ஆனை இறக்கினோம் என்று கூறுவதுபோல் 4:113 வசனத்தில் குர்ஆனையும் இறக்கினோம்; ஞானத்தையும் இறக்கினோம் என்று அல்லாஹ் கூறுகிறான். அப்படியானால் குர்ஆன் போலவே ஞானமும் இறைவனிடமிருந்து இறக்கியருளப்பட்டது என்பது தெளிவாகிறது.

 

வேதத்துக்கு எவ்வாறு விளக்கம் அளிக்க வேண்டும் என்ற ஞானத்துடன் தான் இறைத்தூதர்கள் அனுப்பப்பட்டார்கள். அவர்கள் அளித்த விளக்கங்கள் அவர்கள் தாமாகக் கண்டுபிடித்துக் கூறியதல்ல. இறைவன் புறத்திலிருந்து அவர்களுக்கு வழங்கப்பட்டதாகும் என்பதை இவ்வசனங்கள் தெளிவாக எடுத்துரைக்கின்றன.

 

இறைத்தூதர்கள் அளித்த விளக்கமும் இறைவன் புறத்திலிருந்து கிடைத்தவை என்பதற்கு இந்த வசனங்களும் சான்றுகளாக உள்ளன. எனவே திருக்குர்ஆன் கூறும் வழிகாட்டுதலைப் பின்பற்றுவது எவ்வாறு அவசியமோ அது போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆதாரப்பூர்வமான சொற்களையும், வழிகாட்டுதலையும் பின்பற்றுவதும் அவசியம் என்பதற்கு இவ்வசனங்கள் சான்றாக அமைந்துள்ளன.

 

இது குறித்து மேலும் அறிய 18, 36, 39, 50, 55, 56, 57, 60, 72, 105, 125, 127, 128, 132, 164, 184, 244, 255, 256, 258, 286, 318, 350, 352, 358, 430 ஆகிய குறிப்புகளையும் காண்க!

 

 
free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2019 tamilquran.in. Designed by Ahadh Media.
You 're visitors No. 151667