167. தங்குமிடமும், ஒப்படைக்கப்படும் இடமும்

 

இவ்வசனத்தில் (6:98) கூறப்படும் தங்குமிடம் என்பது இந்த உலகத்தில் வாழுகின்ற பூமியைக் குறிக்கும் என்பதையும், ஒப்படைக்கப்படும் இடம் என்பது மனிதன் மண்ணுக்குள் அடக்கம் செய்யப்படும் இடம் என்பதையும் சாதாரணமாக யாரும் புரிந்து கொள்ள முடியும்.

 

ஆனால் இவ்வசனத்தில் இறைவன் பயன்படுத்தியிருக்கின்ற ஒப்படைக்கப்படும் இடம் என்ற வார்த்தை மிகப் பெரிய உண்மையைச் சொல்கிறது.

 

மனிதன் இந்த உலகில் சின்னஞ் சிறிய அளவில் பிறக்கிறான். அவன் பிறந்தபோது இருந்த அளவை விட பல மடங்கு பெரிதாக வளர்ந்து பின்னர் மரணிக்கின்றான். அவன் பிறக்கும்போது இருந்த அந்த எடை பல மடங்கு பெரிதாக எப்படி ஆனது என்றால் இந்த மண்ணிலிருந்து சத்துக்களை அவன் பெறுவதால் தான் ஆனது.

 

மண்ணிலிருந்து உற்பத்தியாகின்ற தானியங்கள், பருப்புகள், இன்னபிற சத்துக்களைப் பெற்று தன்னைப் பெரிதாக்கிக் கொண்டு பூமியின் எடையை மனிதன் குறைத்தான்.

 

50 கிலோ எடையுள்ள ஒரு மனிதன் வாழ்கிறான் என்றால் இவன் வாழ்வதனால் மண்ணிலிருந்து 50 கிலோ குறைந்து விட்டது என்பது பொருள். எங்கிருந்து இந்த 50 கிலோ எடையைப் பெற்றிருக்கின்றானோ அதனை அங்கே ஒப்படைக்க வேண்டும்.

 

ஒப்படைக்கப்படும் இடம் என்று சொன்னால் இவன் பூமிக்கு உடைமையான ஒரு பொருளாக இருக்கிறான். ஏனெனில் அங்கிருந்து தான் இவன் எடுக்கப்பட்டிருக்கின்றான் என்பது கருத்து.

 

மனிதன் பூமியிலுள்ள மண்ணை நேரடியாகச் சாப்பிடுவதில்லை. மண் வேறு பொருளாக மாறி அதனை மனிதன் சாப்பிட்டு தன் உடலை வளர்த்துக் கொண்டான் என்ற கருத்தை உள்ளடக்கி ஒப்படைக்கப்படுகின்ற இடம் என்ற சொல்லை அல்லாஹ் மிகப் பொருத்தமாகப் பயன்படுத்தியிருக்கிறான்.

 

இது தொடர்பான கூடுதல் விளக்கத்திற்கு 331வது குறிப்பைக் காண்க!

 

 








free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2019 tamilquran.in. Designed by Ahadh Media.
You 're visitors No. 257732