215. இறை நேசர்களுக்கு அச்சமில்லை

 

இவ்வசனத்தைச் (10:62) சிலர் தவறாக விளங்கிக் கொண்டு மகான்களை வழிபடலாம் என்று நினைக்கின்றனர். ஒவ்வொருவரும் இறைநேசராக வாழ முயல வேண்டும் என்பதைத்தான் இவ்வசனம் கூறுகிறது. மகான்களை வழிபடுமாறு கூறவில்லை.

 

மேலும் அடுத்த வசனத்தில் இறைநேசர்கள் யார் என்ற இலக்கணமும் கூறப்படுகிறது. நம்பிக்கை கொள்வதும், இறைவனை அஞ்சுவதுமே அந்த இலக்கணம்.

 

ஒருவர் இறைவனை உண்மையாகவே நம்புகிறாரா? இறைவனை அஞ்சுகிறாரா? என்பதை யாராலும் அறிய முடியாது. ஏனெனில் இவ்விரு தன்மைகளும் வெளியில் தெரிபவை அல்ல. உள்ளங்களில் இருப்பவையாகும்.

 

யார் இறைநேசர்கள் என்பதை மனிதர்களால் கண்டுபிடிக்க முடியாது என்பதைத்தான் இவ்வசனங்கள் கூறுகின்றன. எனவே மகான்களைக் கொண்டாடும் பேச்சுக்கே இடமில்லை.

 

மேலும் நம்முடைய வெளிப்படையான பார்வைக்கு ஒருவர் எவ்வளவு நல்லவராகத் தெரிந்தாலும் அவர் நம்முடைய பார்வைக்குத்தான் நல்லவரே தவிர இறைவனுடைய பார்வையில் அவர் நல்லவர் தான் என்று நாம் தீர்மானிக்க இயலாது.

 

உஸ்மான் பின் மழ்வூன் என்ற நபித்தோழர் மரணித்தபோது அவரை நோக்கி "அல்லாஹ் உங்களைக் கண்ணியப்படுத்துவான்" என்று உம்முல் அலா என்ற பெண்மணி கூறினார்கள். அதைக் கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "அல்லாஹ் அவரைக் கண்ணியப்படுத்தி விட்டான் என்று உனக்கு எவ்வாறு தெரியும்" என்று கேட்டு கண்டித்தார்கள்.

பார்க்க : புகாரி 1243

 

உஸ்மான் பின் மழ்வூன் (ரலி) அவர்கள் மிகச் சிறந்த நபித்தோழர். ஹிஜ்ரத் செய்தவர். வெளிப்படையான செயல்களைப் பார்த்து ஒருவரை இறைநேசர் என்று சொல்வதாக இருந்தால் இவரைச் சொல்லலாம். ஆனாலும் இவர் மரணித்த பிறகு "அவரை அல்லாஹ் கண்ணியப்படுத்தி விட்டான்" என்று உம்முல் அலா அவர்கள் தீர்மானித்ததை நபியவர்கள் கண்டிக்கிறார்கள்.

 

போர்க்களத்தில் ஒருவர் வீரதீரத்துடன் போரிடுவதைக் கண்ட நபித்தோழர்கள் அவரை உயர்வாக மதித்து பாராட்டினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரை நரகவாசி என்றார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதை மெய்ப்பிக்கும் வகையில் அவர் போரில் ஏற்பட்ட காயத்தின் வேதனை தாளாமல் தற்கொலை செய்து கொண்டார்.

பார்க்க : புகாரி 2898

 

நபித்தோழர்கள் கூட ஒருவரை நல்லடியார் எனக் கண்டுபிடிக்க முடியாவிட்டால் நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களால் எப்படி மகான்களைக் கண்டுபிடிக்க முடியும்?

 

மறுமையில் ஒரு உயிர் தியாகி, ஒரு அறிஞர், ஒரு செல்வந்தர் ஆகியோர் நிறுத்தப்பட்டு விசாரிக்கப்படுவார்கள். அவர்கள் செய்த நல்லறங்கள் குறித்து அல்லாஹ் விசாரிப்பான். அவர்கள் தாம் செய்த நல்லறங்களைக் கூறுவார்கள். அப்போது இறைவன் நீங்கள் உலகில் பெயர் வாங்குவதற்காகவே செய்தீர்கள். அப்பெயரை உலகில் பெற்றுவிட்டீர்கள் எனக் கூறி "இவர்களை நரகத்துக்கு இழுத்துச் செல்லுங்கள்" என்று கூறிவிடுவான் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

பார்க்க : முஸ்லிம் 3865

 

உயிர் தியாகிகள் என்றும், வள்ளல் என்றும், அறிஞர் என்றும் மக்களால் கருதப்பட்ட மூவர் அல்லாஹ்விடம் நரகவாசிகளாக உள்ளனர் என்று இந்த ஹதீஸ் கூறுகின்றது. அப்படியானால் நாம் எப்படி ஒருவரை மகான் என்று தீர்மானிக்க இயலும்?

 

ஒரு குழந்தை மரணித்தபோது ஆயிஷா (ரலி) அவர்கள் சுவனத்து சிட்டுக்குருவி என்றார்கள். எந்தப் பாவத்தையும் இக்குழந்தை செய்யவில்லை எனவும் கூறினார்கள். அவ்வாறு சொல்வதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டித்து விட்டார்கள்.

பார்க்க : முஸ்லிம் 5174, 5175

 

ஒன்றுமறியாக் குழந்தையின் நிலையைக் கூட நாம் தீர்மானிக்க இயலாது என்பதை இந்த ஹதீஸ் விளக்குகின்றது.

 

நல்லடியார்களை நாம் அறிய முடியும் என்ற கருத்தில் சில சான்றுகள் உள்ளனவே? அதன் நிலை என்ன என்ற கேள்விக்கான விளக்கத்தையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

 

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உண்மையாளர்களுடன் ஆகுங்கள்!

(திருக்குர்ஆன் 9:119)

 

இணைகற்பிக்கும் பெண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களைத் திருமணம் செய்யாதீர்கள்!

(திருக்குர்ஆன் 2:221)

 

இணை கற்பிப்போர் நரகவாசிகள் என்பது தெரிந்த பின்னர், அவர்கள் நெருங்கிய உறவினரேயானாலும் அவர்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுவது நம்பிக்கை கொண்டோருக்கும், இந்த நபிக்கும் (முஹம்மதுக்கும்) தகாது.

(திருக்குர்ஆன் 9:113)

உண்மையான முஃமின்களுடன் வாழ வேண்டும் என்றும், இணைவைக்கும் பெண்களைத் திருமணம் செய்யக் கூடாது என்றும், இணை கற்பித்தவர்களுக்குப் பாவமன்னிப்பு தேடக் கூடாது என்றும் அல்லாஹ் மேற்கண்ட வசனங்களில் கட்டளையிடுகிறான்.

 

ஒருவர் நல்லவர் என்றும், கெட்டவர் என்றும் நாம் தீர்மானித்தால் தானே மேற்கண்ட கட்டளைகளை நாம் பின்பற்ற இயலும் என்ற குழப்பம் தேவையில்லை.

 

நம்முடைய பார்வையில் இஸ்லாமியச் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு வாழ்பவர்களை நாம் நல்லவர்கள் என்றே தீர்மானிக்க வேண்டும். அதே நேரத்தில் நம்முடைய பார்வையில் நல்லவர்களாக இருப்பதால் இறைவனிடத்திலும் அவர்கள் நல்லவர்கள் தான் என்பதை நாம் தீர்மானிக்க இயலாது என்பதே இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகும்.

 

நம்முடைய பார்வையில் யார் இறை நம்பிக்கையாளராகத் தெரிகிறாரோ அத்தகைய உண்மையாளருடன் நாம் வாழவேண்டும். அதே நேரத்தில் அவர் நம்முடைய பார்வைக்குத்தான் நல்லவரே தவிர அவருடைய உண்மையான நிலையை இறைவனே அறிந்தவன் என்பதையும் நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும். இறைவனும் இவ்வாறு தான் தீர்மானிக்கச் சொல்கிறான்.

 

நம்பிக்கை கொண்டோரே! நம்பிக்கை கொண்ட பெண்கள் ஹிஜ்ரத் செய்து உங்களிடம் வந்தால் அவர்களைச் சோதித்துப் பாருங்கள்! அவர்களது நம்பிக்கையை அல்லாஹ் நன்கு அறிந்தவன். அவர்கள் நம்பிக்கை கொண்டோர் என்று நீங்கள் அறிந்தால் அவர்களை (ஏகஇறைவனை) மறுப்போரிடம் திருப்பி அனுப்பி விடாதீர்கள்!

(திருக்குர்ஆன் 60:10)

 

நம்பிக்கை கொண்ட பெண்கள் மக்காவைத் துறந்து மதீனா வந்தால் அவர்கள் இறைநம்பிக்கையாளர்கள் தாமா? அல்லது வேறு நோக்கத்தில் வந்துள்ளார்களா? என்று சோதித்து அறியுமாறு இவ்வசனம் கட்டளையிடுகிறது. இவ்வாறு சோதித்துப் பார்த்து அவர்கள் முஸ்லிம்கள் தான் என்ற முடிவுக்கு வந்தாலும் அது சரியானதாக இருக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. அவர்களின் உள்ளங்களில் இறைநம்பிக்கை உள்ளதா என்பதை அல்லாஹ் தான் அறிவான் என்ற வாக்கியத்தில் இருந்து இதை அறியலாம்.

 

நம்முடைய பார்வையில் நல்லவர்களாக இருப்பதால் இறந்த பிறகும், இறைவனிடத்திலும் அவர்கள் நல்லவர்கள் தான் என்பதை நாம் தீர்மானிக்க இயலாது என்பதைத்தான் இந்த வசனங்கள் கூறுகின்றன.

 

ஆனால் சமாதிகளை வணங்குவோர் இந்த அடிப்படையை உணராமல் மேற்கண்ட வசனங்களைச் சான்றாகக் காட்டி நம்முடைய பார்வைக்கு நல்லவர்களாகத் தெரிபவர்களை அல்லாஹ்விடத்திலும் நல்லவர்கள் என நாம் தீர்மானிக்கலாம் எனக் கூறுகின்றனர். இது அவர்களின் அறியாமையையே காட்டுகிறது.

 

மேலும் ஒருவரை நல்லவர் தான் என்று மக்கள் தீர்மானிக்க இயலும் என்பதற்குப் பின் வரும் ஹதீஸையும் சான்றாகக் காட்டுகின்றனர்.

 

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

 

ஒரு முறை, மக்கள் ஒரு ஜனாஸாவைக் கடந்து சென்றபோது, இறந்தவரின் நற்பண்புகளைப் பற்றிப் புகழ்ந்து பேசினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "உறுதியாகி விட்டது'' என்றார்கள். மற்றொரு முறை வேறொரு (ஜனாஸாவைக்) கடந்து சென்றபோது மக்கள் அதன் தீய பண்புகளைப் பற்றி இகழ்ந்து பேசலாயினர். அப்போதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "உறுதியாகி விட்டது'' எனக் கூறினார்கள். உமர் (ரலி) "எது உறுதியாகி விட்டது?'' எனக் கேட்டதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "இவர் விஷயத்தில் நல்லதைக் கூறிப் புகழ்ந்தீர்கள்; எனவே அவருக்கு சொர்க்கம் உறுதியாகி விட்டது. இவர் விஷயத்தில் தீயதைக் கூறினீர்கள்; எனவே இவருக்கு நரகம் உறுதியாகி விட்டது. ஆக நீங்களே பூமியில் அல்லாஹ்வின் சாட்சிகளாவீர்கள்'' எனக் கூறினார்கள்.

 

நூல்: புகாரி 1367

மக்கள் ஒருவரை நல்லவர் என்று புகழ்ந்தால் அவர் சொர்க்கவாசியென்றும், மக்கள் ஒருவரைக் கெட்டவர் என்று இகழ்ந்தால் அவர் நரகவாசியென்றும் தீர்மானிக்கலாம் என்பது போல் மேற்கண்ட ஹதீஸில் இருந்து தெரிகிறது.

 

மக்கள் தான் நல்லவர்கள் என்று முடிவு செய்பவர்கள் என்ற கருத்தை இந்த ஹதீஸ் தந்தாலும் யாரையும் நல்லவர் என்று தீர்மானிக்க நமக்கு உரிமை இல்லை. அதற்கான அறிவும் நமக்கு இல்லை என்ற கருத்தில் முன்னர் நாம் எடுத்துக் காட்டிய சான்றுகளுக்கு முரணாக இதன் கருத்து அமைந்துள்ளது.

 

மேலும் இது நடைமுறைக்கும் மாற்றமாக உள்ளது. இஸ்லாத்தை அப்பட்டமாக மீறி நடப்பவர்களை மகான்கள் என்று மக்கள் முடிவு செய்வதை நாம் காண்கிறோம். கஞ்சா அடிப்பவன், பீடி குடிப்பவன், குளிக்காமல் சடை வளர்த்துத் திரிபவன் எனப் பலரை நம் மக்கள் மகான்கள் பட்டியலில் சேர்த்து தர்கா கட்டியுள்ளனர். மக்கள் சரியாக முடிவு எடுப்பதில்லை என்பதற்கு இது சான்றாக உள்ளது.

 

மேலும் ஒரு மனிதனின் உள்ளத்தில் உள்ளதை யாராலும் அறிய முடியாது என்ற இஸ்லாத்தில் அடிப்படைக்கும் இது மாற்றமாக உள்ளது.

 

அப்படியானால் இந்த ஹதீஸ் வேறு கருத்தில் சொல்லப்பட்டதாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் நாம் மேலும் தேடும்போது பின்வரும் ஹதீஸில் இதற்கான விளக்கம் கிடைக்கிறது.

 

மேற்கண்ட ஹதீஸில் நபியவர்கள் கூறிய முழுமையான சில வாசகங்கள் விடுபட்டுள்ளன. இதன் காரணமாகத்தான் மக்கள் தீர்மானிக்கலாம் என்பது போன்ற கருத்து வருகிறது. நபியவர்கள் கூறிய முழுமையான வாசகங்கள் மற்ற ஹதீஸ்களில் வந்துள்ளன.

 

அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

 

நான் ஒரு தடவை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் இருந்தேன். அப்போது ஒரு ஜனாஸா கடந்து சென்றது. அப்போது நபியவர்கள், "இது யார்?'' என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், இது இன்னாருடைய ஜனாஸா; இவர் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிப்பவராக இருந்தார்; அல்லாஹ்விற்கு வழிப்பட்டு நல்லறங்கள் செய்பவராகவும், அதற்கு முயற்சிப்பவராகவும் இருந்தார் என்றும் கூறினார்கள். உடனே நபியவர்கள் "உறுதியாகி விட்டது; உறுதியாகி விட்டது; உறுதியாகி விட்டது'' என்று கூறினார்கள். பிறகு மற்றொரு ஜனாஸா கொண்டு செல்லப்பட்டது. அப்போது மக்கள், இது இன்னாருடைய ஜனாஸா; இவர் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் வெறுப்பவராக இருந்தார்; இறைவனுக்கு மாறுசெய்யும் காரியங்களைச் செய்பவராகவும் அதற்கு முயற்சிப்பவராகவும் இருந்தார் என்றும் கூறினார்கள். உடனே நபியவர்கள், "உறுதியாகி விட்டது; உறுதியாகி விட்டது; உறுதியாகி விட்டது'' என்று கூறினார்கள். அப்போது மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! முதலாவது ஜனாஸாவை மக்கள் புகழ்ந்தபோது உறுதியாகி விட்டது என்றீர்கள். மற்றொன்றை மக்கள் இகழ்ந்தபோதும் உறுதியாகி விட்டது என்றீர்கள் (அதன் விளக்கம் என்ன?)'' என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள், "பூமியில் அல்லாஹ்விற்கென்று சில வானவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஒரு மனிதன் நல்லவனா கெட்டவனா என்பதை மக்களின் நாவுகளில் பேசுகிறார்கள்'' என்று கூறினார்கள்.

(நூல் : ஹாகிம், பாகம்: 1, பக்கம்: 533)

 

மக்கள் தாமாகப் பேசுவதைப் பற்றி இந்த ஹதீஸ் கூறவில்லை. மாறாக மக்களின் நாவுகளில் ஒருவன் நல்லவனா கெட்டவனா என்று வானவர்கள் பேசுவதையே குறிக்கிறது. நபியவர்கள் இறைத்தூதர் என்பதால் மக்கள் நாவில் பேசியது வானவர்கள் என்பதை அல்லாஹ் அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தான். இதன் காரணமாக மக்கள் புகழ்ந்தவரை சொர்க்கவாசி என்றும், மக்கள் இகழ்ந்தவரை நரகவாசி என்றும் நபியவர்கள் தீர்ப்பளித்தார்கள்.

 

மக்கள் நாவுகளில் வானவர்கள் பேசினால் தான் அவர்கள் அல்லாஹ்வின் சாட்சியாளர்களாக ஆவார்கள். மக்களின் நாவுகளில் வானவர்கள் பேசாமல் மக்கள் சொந்தமாகப் பேசினால் அவர்கள் அல்லாஹ்வின் சாட்சியாளர்களாக மாட்டார்கள் என்பதை இந்த ஹதீஸ் விளக்குகிறது.

 

மனிதர்களின் நாவுகளில் வானவர்கள் பேசினார்களா? மனிதர்களின் சொந்தக் கூற்றா என்பதை அல்லாஹ் அறிவித்துக் கொடுத்த அடிப்படையில் அவனது தூதர் கண்டுபிடிக்க முடியும். மற்றவர்களால் கண்டுபிடிக்க முடியாது. உலகமே திரண்டு ஒருவரை நல்லவர் எனக் கூறினாலும் அவர்கள் கூறியபடி அவர் நல்லவராக இருப்பார் என்று சொல்ல முடியாது என்ற கருத்தை இந்த ஹதீஸ் தருகின்றது.

 

மேலும் முன்னர் நாம் எடுத்துக் காட்டிய சான்றுகளுக்கு முரணாக இல்லாத வகையிலும் இஸ்லாத்தின் அடிப்படைக்கு முரணில்லாத வகையிலும் இந்த விளக்கம் அமைந்துள்ளது.

 

தர்கா வழிபாட்டை நியாயப்படுத்துவோரின் இதர வாதங்கள் எப்படி தவறானவை என்பதை அறிந்து கொள்ள 17, 41, 49, 79, 83, 100, 104, 121, 122, 140, 141, 193, 213, 245, 269, 298, 327, 397, 427, 471 ஆகிய குறிப்புகளையும் காண்க!

 

 








free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2019 tamilquran.in. Designed by Ahadh Media.
You 're visitors No. 292984