279. ஜிப்ரீலின் கூற்று குர்ஆனில் இடம் பெறுமா?

 

திருக்குர்ஆன் வானவர்களின் கூற்று என்ற கருத்தைத் தருவது போல் இவ்வசனம் (19:64) அமைந்துள்ளது.

 

திருக்குர்ஆன் இறைவேதம் என்பதால் அதில் இறைவனின் வார்த்தைகள் மட்டுமே இடம் பெற வேண்டும். மற்றவர்களின் வார்த்தைகள் இடம் பெறுவதாக இருந்தால் இறைவன் அதை எடுத்துக் காட்டும் வகையில் தான் இடம் பெற வேண்டும்.

 

ஆனால் இந்த வசனத்தில் "இறைவனின் அனுமதி இல்லாமல் நாம் இறங்க மாட்டோம்" என்று வானவர் கூறுவது குர்ஆனில் இடம் பெற்றுள்ளது. வானவரின் சொந்தக் கூற்று எவ்வாறு குர்ஆனில் இடம் பெறலாம் என்ற சந்தேகம் இங்கே எழக்கூடும். ஆயினும் திருக்குர்ஆனில் பல இடங்களில் இது போன்ற சொல்லமைப்புகள் காணப்படுகின்றன.

 

இதற்குக் காரணம் திருக்குர்ஆன் எழுத்து வடிவில் நூலாக வழங்கப்படவில்லை. ஒலி வடிவமாகவே வழங்கப்பட்டது. பேச்சு வழக்கில் சில சொற்களை நாம் கூறாவிட்டாலும் சூழ்நிலையை வைத்து அதைப் புரிந்து கொள்வோம்.

 

ஒரு சபையில் இப்ராஹீமுக்கும், இஸ்மாயீலுக்கும் இடையே உள்ள விவகாரத்தை சபைத் தலைவர் விசாரிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அதை ஒருவர் அப்படியே எழுதுகிறார் என்றும் வைத்துக் கொள்வோம்.

 

நீ செய்தாயா என்று தலைவர் இஸ்மாயீலிடம் கேட்டார்.

 

நான் செய்யவில்லை என்று இஸ்மாயீல் சொன்னார்.

 

உடனே தலைவர் இப்ராஹீமை நோக்கி இவர் செய்யவில்லை என்கிறாரே? ஆதாரமில்லாமல் ஏன் குற்றம் சாட்டுகிறாய் என்று கேட்டார்.

 

என்னிடம் ஆதாரம் உள்ளது என்று இப்ராஹீம் சொன்னார்.

 

அந்த விசாரணையை இப்படி ஒருவர் எழுதுகிறார் என்றால் இது அவர் புரிந்து கொண்ட அடிப்படையில் எழுதியதாகும். ஆனால் அங்கே பேசப்பட்ட சொற்களை மட்டும் எழுதினால் எப்படி இருக்கும்?

 

நீ செய்தாயா? நான் செய்யவில்லை. இவர் செய்யவில்லை என்கிறாரே? ஆதாரமில்லாமல் ஏன் குற்றம் சாட்டுகிறாய்? என்னிடம் ஆதாரம் உள்ளது.

 

அந்த சபையில் பேசப்பட்டது இவ்வளவுதான். இரண்டு பாராக்களையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.

 

பேச்சின்போது எவ்வளவு வார்த்தைகள் விடுபட்டுள்ளன என்று பாருங்கள். இப்படிச் சொன்னார். அப்படிக் கேட்டார் என்பது போன்ற சொற்களை நாம் தான் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற வகையில் பல உரையாடல்கள் அமைந்துள்ளன.

 

திருக்குர்ஆன் பாதுகாக்கப்பட்ட லவ்ஹூல் மஹ்பூலில் இருக்கிறது. அல்லாஹ்வின் அனுமதியுடன் ஜிப்ரீல் அவ்வப்போது எடுத்து வந்து சொல்வார்.

 

சில நாட்கள் வஹீ வராமல் போகும் என்பதும், லவ்ஹுல் மஹ்பூலில் எழுதப்பட்டு இருந்தது. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) கவலைப்படுவார்கள் என்றும் எழுதப்பட்டு இருந்தது. அல்லாஹ்வின் அனுமதி இல்லாமல் நாம் இறங்க மாட்டோம் என்ற வசனத்தை லவ்ஹுல் மஹ்பூலில் இருந்து ஜிப்ரீல் எடுத்துச் செல்வார் என்பதும் அதில் எழுதப்பட்டு இருந்தது.

 

(இது பற்றி மேலதிக விபரத்தை அறிய 492வது குறிப்பை வாசிக்கவும்)

 

அதனடிப்படையில் நாம் இறங்க மாட்டோம் என்று ஜிப்ரீல் கூறினார் என்றால் நாம் இறங்க மாட்டோம் என்பதை அல்லாஹ் கூறச் சொன்னான் என்று புரிந்து கொள்ள வேண்டும். அவர் சொன்ன அனைத்துமே அல்லாஹ் கூறச் சொன்னவைதான்.

 

இது போல் 37:164 வசனத்தில் எங்களில் யாராக இருந்தாலும் அவருக்கு குறிப்பிட்ட இடம் உண்டு. நாங்கள் அணிவகுத்து நிற்பவர்கள். நாங்கள் துதிப்பவர்கள் என்று உள்ளது.

 

நாங்கள் என்பது வானவர்களைக் குறிக்கிறது. வானவர்களே நேரடியாகக் கூறியது குர்ஆனில் இடம்பெற்றதாக நினைக்கக் கூடாது. இப்படி அல்லாஹ் கூறச் சொன்னான் என்று இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

 

திருக்குர்ஆன் ஒலி வடிவமாக அருளப்பட்டதால் அருளப்படும் சூழ்நிலையை வைத்துப் புரிந்து கொள்வார்கள் என்பதற்காக பேச்சு வழக்குக்கு ஏற்ப திருக்குர்ஆனும் இந்த நடையைப் பயன்படுத்தியுள்ளது.

 

 
free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2019 tamilquran.in. Designed by Ahadh Media.
You 're visitors No. 159644