244. சமுதாயத்தின் மொழியே தூதரின் மொழி

 

ஒரு இறைத்தூதர் எந்த மக்களுக்கு அனுப்பப்படுகிறாரோ அவர் அந்த மக்கள் பேசும் மொழியை அறிந்தவராகவும், அம்மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவராகவும் இருப்பார் என்று இவ்வசனங்கள் (14:4, 19:97, 44:58) கூறுகின்றன.

 

இதற்குக் காரணம் அந்தத் தூதர் தனக்கு வழங்கப்பட்ட வேதத்தை அம்மக்களுக்கு விளக்கிச் சொல்ல வேண்டும் என்பது தான். வேதத்தைக் கொண்டு வந்து கொடுப்பதோடு தூதரின் வேலை முடிந்து விட்டது என்றால் தூதருக்கு அந்த வேதத்தின் மொழி தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை.

 

இறைத்தூதர்கள் அளித்த விளக்கத்தை ஏற்க மாட்டோம்; வேதத்தை மட்டுமே ஏற்போம் என்று சிலர் வாதிட்டு வருவதற்கு இவ்வசனம் தெளிவான மறுப்பாக அமைந்துள்ளது

 

"வேதங்களைக் கொண்டு வந்து மக்களிடம் சேர்ப்பிப்பது மட்டும் தான் இறைத்தூதர்களின் பணி என்றும், விளக்கமளிப்பது அவர்களின் பணி அல்ல என்றும் வாதிடுவோருக்கு இவ்வசனம் (14:4) சம்மட்டி அடியாக அமைந்துள்ளது. இத்தகையோருக்கு மறுப்பு சொல்வதற்காகவே அருளப்பட்டது போல் ஒவ்வொரு வார்த்தையும் இவ்வசனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

 

ஒரு சமுதாயம் எந்த மொழியைப் பேசுகிறதோ அந்த மொழியைச் சேர்ந்தவரையே தூதராக அனுப்பியிருப்பதாக இவ்வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான். அப்போது தான் தமக்கு அருளப்பட்ட வேதத்தை மக்களுக்கு அந்தத் தூதர் விளக்க முடியும் என்று இதற்கான காரணத்தையும் மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.

 

நமது தாய் மொழியாம் தமிழ் மொழியில் நமக்கு ஒரு கடிதம் வருகிறது. அக்கடிதத்தை நம்மிடம் கொண்டு வந்து தருபவருக்குத் தமிழ் தெரியவில்லை என்றால் அக்கடிதத்தை நாம் விளங்குவதற்கு அது தடையாக அமையாது.

 

யாருக்குக் கடிதம் எழுதப்படுகிறதோ அவருக்குக் கடிதத்தில் உள்ளது தானாகவே விளங்கி விடும் என்றால் கடிதத்தைக் கொண்டு செல்பவரின் மொழி பற்றி நாம் கவலைப்பட மாட்டோம்.

 

ஆனால் கடிதத்தில் உள்ளதை விளக்கிச் சொல்வதற்காக ஒருவரிடம் கடிதத்தைக் கொடுத்தனுப்பினால், அதைக் கொண்டு செல்பவருக்கும் கடிதம் எழுதப்பட்டுள்ள மொழி தெரிந்திருப்பது அவசியம்.

 

இது போன்றுதான் குர்ஆன் அருளப்பட்டதாக அதை அருளிய இறைவன் கூறுகிறான். "குர்ஆனை என் இஷ்டப்படி தான் புரிந்து கொள்வேன்; அதைக் கொண்டு வந்தவரின் விளக்கம் எனக்குத் தேவை இல்லை'' என்று ஒருவர் கூறினால் அவர் குர்ஆனின் மேற்கண்ட வசனத்தை மறுக்கிறார்.

 

சமுதாயம் பேசுகின்ற மொழி, தூதருக்குத் தெரிந்திருந்தால் தான் அவரால் அந்த மக்களுக்கு வேதத்தை விளக்க முடியும் என்று அல்லாஹ் கூறுகிறான். வேதத்தை விளங்கிட தூதரின் விளக்கம் அவசியம் என்று அல்லாஹ் கூறுவதை மறுப்பது குர்ஆனுக்கே எதிரானதாகும்.

 

வேதங்களை இறைவனிடமிருந்து பெற்று மக்களுக்கு வழங்குவது மட்டுமின்றி அம்மக்களுக்கு அதில் ஏற்படும் ஐயங்களை விளக்கும் பொறுப்பும் தூதர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவ்விளக்கத்தை ஏற்கும் கடமை மக்களுக்கு இருக்கிறது.

 

வேதத்துக்கு இறைத்தூதர்கள் அளித்த விளக்கம் அவர்கள் வாழ்ந்த காலத்தவர்களுக்கு மட்டும் கிடைத்து, பின்னர் வருகின்ற சமுதாயத்திற்கு அவ்விளக்கம் கிடைக்காமல் போனால் அது அநீதியாகும். அல்லாஹ் எந்த மனிதருக்கும் எள்ளளவும் அநீதி இழைப்பவன் அல்லன் என்று திருக்குர்ஆனில் பல இடங்களில் அல்லாஹ் தெளிவுபடுத்தி விட்டான்.

 

நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் வாழ்ந்த மக்கள் தமக்கு ஏற்படும் சந்தேகங்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார்கள். அவர்கள் தெரிந்து கொண்ட யாவும் உலகம் உள்ளளவும் வருகின்ற மக்களுக்கும் உரியதாகும். அவை தான் ஹதீஸ்களாகப் பதிவு செய்யப்பட்டுப் பாதுகாக்கப்பட்டுள்ளன.

 

இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்கள் எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை என்று யாரேனும் கூறுவார்களேயானால் அவர்கள் இந்த வசனத்தை நிராகரிக்கிறார்கள்.

 

இறைத்தூதர்கள், தாம் வாழ்ந்த காலத்தில் விளக்கமளித்தார்கள் என்று ஒப்புக் கொண்டால், இறைவனின் கட்டளைப்படி அவர்கள் அளித்த விளக்கம் எல்லாக் காலத்துக்கும் அவசியம் என்பது உறுதியாகிறது.

 

எனவே திருக்குர்ஆனுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அளித்த விளக்கம் மிக அவசியம் என்பதற்கு இந்த வசனமும் சான்றாக அமைந்துள்ளது.

 

திருக்குர்ஆனின் கட்டளைகளைப் பின்பற்றுவதுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலையும் பின்பற்ற வேண்டும் என்பதைப் பற்றி மேலும் அறிய 18, 36, 39, 50, 55, 56, 57, 60, 67, 72, 105, 125, 127, 128, 132, 154, 164, 184, 255, 256, 258, 286, 318, 350, 352, 358, 430 ஆகிய குறிப்புகளையும் காண்க!

 

 








free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2019 tamilquran.in. Designed by Ahadh Media.
You 're visitors No. 247787