179. எத்தனை நாட்களில் உலகம் படைக்கப்பட்டது?

 

வானங்களும், பூமியும் படைக்கப்பட்டது குறித்து இவ்வசனங்கள் (7:54, 10:3, 11:7, 25:59, 32:4, 41:9,10, 41:12, 50:38, 57:4) பேசுகின்றன. இதை மேலோட்டமாகப் பார்க்கும் போது ஒன்றுக்கொன்று முரண்பட்டது போல் தோன்றினாலும் உண்மையில் இதில் முரண்பாடு ஏதும் இல்லை.

 

வானங்களையும், பூமியையும் அல்லாஹ் ஆறு நாட்களில் படைத்ததாக 7:54, 10:3, 11:7, 57:4 வசனங்களில் கூறப்படுகிறது.

 

41:9 வசனத்தில் பூமியை இரண்டு நாட்களில் படைத்ததாகவும், 41:12 வசனத்தில் வானத்தை இரண்டு நாட்களில் படைத்ததாகவும் கூறப்படுகிறது. அப்படியானால் வானமும் பூமியும் நான்கு நாட்களில் படைக்கப்பட்டது என்று ஆகின்றது.

 

ஆறு நாட்களில் படைக்கப்பட்டதாகக் கூறப்பட்டதற்கு இது முரணாக அமைந்துள்ளது என்ற சந்தேகம் இதில் எழலாம். திருக்குர்ஆனில் குறை கண்டுபிடிக்க முயல்பவர்கள் இந்தக் கேள்வியைக் கேட்டும் வருகின்றனர்.

 

மேலோட்டமாகப் பார்த்தால் இது முரண் போல் தோன்றினாலும் வேறு வசனத்தில் இந்த முரண்பாட்டை நீக்கும் வகையில் திருக்குர்ஆனே விளக்கம் சொல்லி விடுகிறது.

 

பூமியைப் படைத்தல் என்பது இரண்டாகப் பிரிக்கப்படுகிறது. பூமி என்ற கோளைப் படைத்தது இரண்டு நாட்கள். மனிதன் வாழ்வதற்காக பூமியைப் படைத்ததால் அதில் நிறைய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். தாவரங்கள் முளைப்பதற்கேற்ற ஏற்பாடுகள், மலைகளை முளைகளாக நிறுவுதல், நிலத்தடி நீர் போன்ற ஏராளமான ஏற்பாடுகளை பூமிக்குள் அமைக்க வேண்டும். இது போன்ற ஏற்பாடுகளுக்கு இரண்டு நாட்கள் என்று திருக்குர்ஆன் பின்வரும் வசனத்தில் விளக்குகிறது.

 

நான்கு நாட்களில் அதன் மேலே முளைகளை ஏற்படுத்தினான். அதில் பாக்கியம் செய்தான். அதன் உணவுகளை அதில் நிர்ணயம் செய்தான். கேள்வி கேட்போருக்குச் சரியான விடை இதுவே என்று 41:10 வசனம் கூறுகிறது.

 

வானம் பூமியைப் படைக்க ஆறு நாட்கள் என்று சொல்லப்படுவதன் பொருள் இது தான் என்று திருக்குர்ஆனே விளக்கி விட்டது.

 

வானத்தைப் படைக்க இரண்டு நாட்கள்,

 

பூமியைப் படைக்க இரண்டு நாட்கள்,

 

பூமிக்குள் சில சிறப்பு ஏற்பாடுகள் செய்ய இரண்டு நாட்கள்

 

ஆக ஆறு நாட்கள் என்பது இதன் பொருள். பூமியை மட்டும் தனியாகச் சொல்லும்போது இரண்டு நாட்கள் என்று சொல்லப்பட்டால் சிறப்பு ஏற்பாடுகளை நீக்கி விட்டு இரண்டு நாட்கள் என்று பொருள்.

 

படைப்பைப் பற்றி கூறும் இவ்வசனங்களில் வானம் மற்றும் பூமி படைக்கப்பட்டது பற்றியே பேசப்படுகிறது. அப்படியானால் பூமி தவிர மற்ற கோள்களை அல்லாஹ் படைக்கவில்லையா என்றும் சிலர் கேள்வி எழுப்புவதுண்டு.

 

இந்தக் கேள்விக்கான விடையும் திருக்குர்ஆனில் சொல்லப்பட்டு விட்டது. வானத்தைப் படைத்தது என்பதில் வானத்துக்கும் பூமிக்கும் இடைப்பட்டவைகளும் அடங்கும் என்று 25:59, 32:4, 50:38 ஆகிய வசனங்கள் சொல்கின்றன.

 

மனிதன் வாழ்வதற்கு ஏற்ற சிறப்பு ஏற்பாடுகள் எதுவும் மற்ற கோள்களுக்குத் தேவை இல்லை என்பதால் அவற்றையும் வானத்தையும் படைக்க சேர்த்து இறைவன் எடுத்துக் கொண்டது இரண்டு நாட்களாகும்.

 

ஆகு என்று சொன்னால் ஆகிவிடும் என்ற அளவுக்கு வல்லமை பொருந்திய இறைவனுக்கு ஏன் உலகைப் படைக்க ஆறு நாட்கள் என்ற கேள்வியையும் சிலர் கேட்கின்றனர். ஆகு என்று சொல்லி ஆக்கும் வல்லமை மிக்கவன் என்பதும், படைப்பதற்கு ஆறு நாட்களை எடுத்துக் கொண்டான் என்பதும் ஒன்றுக்கொன்று முரண்படுகிறது எனவும் சிலர் கேட்கின்றனர்.

 

இதிலும் முரண்பாடு ஏதும் இல்லை. ஒரு உதாரணத்தின் மூலம் இதை நாம் புரிந்து கொள்ளலாம்.

 

உலக மல்யுத்த சாம்பியன் 200 கிலோவைத் தூக்குவார் என்று சொல்கிறோம். 200 கிலோ பொருளை அவர் 25 கிலோவாக எட்டு தடவை தூக்கி இடம் மாற்றி வைத்தார் என்றும் சொல்கிறோம். இவ்விரண்டும் முரண் என்று சொல்ல மாட்டோம். அவர் நினைத்தால் ஒரே மூச்சில் 200 கிலோ தூக்க முடியும் என்பதில் மாற்றம் இல்லை. அவர் எப்போது தூக்கினாலும் 200 கிலோ தான் தூக்குவார் என்பது இதன் பொருளல்ல. தூக்க முடியும் என்பது தான் இதன் பொருள்.

 

அது போல் இறைவன் எதைப் படைத்தாலும் ஆகு என்ற சொல்லி அதே நொடியில் படைப்பான் என்று இதற்கு அர்த்தம் இல்லை. அவன் நினைத்தால் ஆகு என்று சொல்லி படைக்க முடியும். அவன் நினைத்தால் தாமதமாகவும், நிதானமாகவும் கூட படைப்பான். எனவே இதில் ஒரு முரண்பாடும் இல்லை.

 

 
free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2019 tamilquran.in. Designed by Ahadh Media.
You 're visitors No. 151670