272. இறைவன் அனுமதித்ததைத் தடை செய்யக் கூடாது

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது மனைவியின் திருப்தியை நாடி ஒரு பொருளை விலக்கிக் கொண்டதாக இவ்வசனத்தில் (66:1) கூறப்படுகிறது. இது குறித்த வரலாற்றுச் செய்தி இதுதான்:

 

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (தம் துணைவியார்) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களிடம் செல்லும்போது அங்கே தேன் சாப்பிட்டுவிட்டு, அவரிடம் தங்குவார்கள். நம்மில் எவரிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முதலில் வருவார்களோ அவர், நபி (ஸல்) அவர்களிடம் கருவேலம் பிசின் சாப்பிட்டீர்களா? உங்களிடமிருந்து, பிசினின் துர்வாடை வருகிறதே என்று கூறிட வேண்டும் என்று நானும் ஹஃப்ஸாவும் பேசி முடிவு செய்து கொண்டோம். (வழக்கம் போல் ஸைனபின் வீட்டிலிருந்து தேன் சாப்பிட்டுவிட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வந்தபோது நாங்கள் பேசி வைத்திருந்த பிரகாரம் கூறினோம். அதற்கு அவர்கள், இல்லை (நான் பிசின் சாப்பிடவில்லை). ஸைனப் பின்த் ஜஹ்ஷ் அவர்களின் இல்லத்தில் தேன் குடித்து வந்தேன். (இனிமேல்) நான் ஒரு போதும் அதைக் குடிக்க மாட்டேன் என்று நான் சத்தியம் செய்கிறேன் என்று கூறினார்கள். மேலும் இது குறித்து எவரிடமும் தெரிவித்து விடாதே! என்றும் கூறினார்கள். (இது குறித்தே 66:1 வசனம் அருளப்பெற்றது.)

நூல் : புகாரி 4912, 6691

 

தேனை அல்லாஹ் அனுமதித்துள்ளான். அல்லாஹ் அனுமதித்த தேனை மனைவியரின் திருப்தியை நாடி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்மளவில் தடை செய்து கொண்டார்கள். இதைக் கண்டிக்கும் விதமாகவே இவ்வசனம் அருளப்பட்டது.

 

யாரும் இனிமேல் தேன் சாப்பிடக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளை பிறப்பித்தால் அது அல்லாஹ் அனுமதித்ததை தடை செய்வதாக ஆகும். மாறாக, தம் அளவில் இதைச் சாப்பிடுவதில்லை என்றுதான் நபியவர்கள் முடிவு செய்தார்கள். இது எப்படி அல்லாஹ் அனுமதித்ததை தடை செய்வதில் சேரும் என்ற சந்தேகம் ஏற்படலாம்.

 

ஒருவர் தமக்குப் பிடிக்காத உணவை விலக்கிக் கொண்டால் அது மார்க்கத்தில் குற்றமில்லை. ஆயினும் ஒரு உணவு அவருக்குப் பிடித்தமானதாக இருந்தும் அதை ஏதேனும் ஒரு காரணத்திற்காக தனக்குத் தானே தடை செய்து கொண்டால் அது குற்றமாகும். ஏனெனில் அல்லாஹ் அனுமதித்ததைத் தடை செய்யும் அம்சம் இதில் அடங்கியுள்ளது.

 

இந்த அடிப்படையில் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ் இவ்வசனத்தின் மூலம் கண்டிக்கிறான்.

 

ஒன்றை அனுமதிப்பதும் தடை செய்வதும் அல்லாஹ்வின் தனி அதிகாரத்தில் உள்ளதாகும். அல்லாஹ் ஹலாலாக ஆக்கிய எதையும் அல்லாஹ்வின் தூதர் கூட ஹராமாக ஆக்க முடியாது. ஒட்டு மொத்தமாக ஹராமாக்காமல் தன்னளவில் கூட அல்லாஹ்வின் தூதர் ஹராமாக ஆக்க முடியாது என்றால் மற்றவர்களுக்கு இந்த அதிகாரம் அறவே இல்லை என்பது உறுதி.

 

முஸ்லிம் சமுதாயத்தில் உள்ள மார்க்க அறிஞர்கள் பலர், அல்லாஹ் ஹராமாக்காத பலவற்றை ஹராம் என்று அறிவிக்கிறார்கள். மக்களும் அதை ஏற்றுக் கொள்கிறார்கள்.

 

உதாரணமாக நண்டு, சுறா, இரால், திமிங்கலம் உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்கள் பலவற்றை ஹராம் என்று எவ்வித ஆதாரமும் இல்லாமல் மார்க்கத் தீர்ப்பு அளிக்கப்படுகிறது. அது மக்களால் ஏற்கவும்படுகிறது. இவர்களுக்கு இவ்வசனம் கடும் எச்சரிக்கையாக அமைந்துள்ளது.

 

அதுபோல் அரைக்கை சட்டை அணியக் கூடாது, பேன்ட் அணியக் கூடாது, கிராப் வைக்கக் கூடாது, ஆங்கிலம் படிக்கக் கூடாது என்பன போன்ற தீர்ப்புகளும் மார்க்கத்தின் பெயரால் வழங்கப்பட்டு அது மக்களால் ஏற்கப்பட்டது.

 

இவர்களுக்கும் இவ்வசனம் கடும் எச்சரிக்கையாக அமைந்துள்ளது. எந்த ஒன்றை ஹராம் என்று யார் சொல்வதாக இருந்தாலும் அதை அல்லாஹ்வோ, அவனது தூதரோ சொல்லி இருக்கிறார்களா என்று பார்க்க வேண்டும். அப்படி சொன்னதற்கு ஆதாரம் இல்லாவிட்டால் அது ஹராம் அல்ல என்ற முடிவுக்கு வருவது அவசியமாகும்.

 

இதைப் பற்றி அதிக விபரத்தை 186வது குறிப்பில் காணலாம்.

 

 
free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2019 tamilquran.in. Designed by Ahadh Media.
You 're visitors No. 159732