269.அவ்லியாக்களும் அற்புதங்களும்

 

நபிமார்கள் அற்புதங்கள் நிகழ்த்தியதாக ஏராளமான சான்றுகள் திருக்குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் உள்ளன. இவற்றைச் சான்றாகக் கொண்டு "மகான்கள் அற்புதங்கள் நிகழ்த்துவார்கள்; எனவே அவர்களிடம் நமது தேவைகளைக் கேட்கலாம்; பிரார்த்திக்கலாம்'' என்று சிலர் வாதிடுகின்றனர்.

 

அற்புதங்களை எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும் என்பதை இவ்வசனங்கள் (40:78, 13:38, 14:11, 3:49, 5:110, 6:109, 29:50, 17:93) தெளிவுபடுத்துகின்றன.

 

நபிமார்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் அற்புதங்கள் நிகழ்த்தியதாகத் திருக்குர்ஆன் கூறுகிறது. எனவே அதை மறுப்பவர் குர்ஆனை மறுத்தவராவார்.

 

ஆனால் நபிமார்கள் எப்போது அற்புதம் நிகழ்த்திக் காட்ட விரும்புகிறார்களோ, அல்லது மக்கள் எப்போது அற்புதத்தை எதிர்பார்க்கிறார்களோ அப்போதெல்லாம் நபிமார்கள் அற்புதங்களை நிகழ்த்த முடியாது.

 

அல்லாஹ் எப்போது அனுமதி அளித்துள்ளானோ அந்த நேரத்தில் மட்டும்தான் அவர்களால் அற்புதங்கள் நிகழ்த்த முடியும். அற்புதங்கள் நிகழ்த்தும் அதிகாரம் அல்லாஹ்வின் கையிலேயே உள்ளது.

 

அல்லாஹ்வின் அனுமதியில்லாமல் நபிமார்கள் எந்த ஒரு அற்புதத்தையும் நிகழ்த்த முடியாது என்பதற்குச் சான்றாக 13:38, 40:78, 14:11 ஆகிய வசனங்கள் அமைந்துள்ளன.

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சில அற்புதங்களைச் செய்து காட்டுமாறும், அவ்வாறு செய்து காட்டினால் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வோம் என்றும் எதிரிகள் கோரிக்கை வைத்தனர். அந்த அதிகாரம் தன்னிடம் இல்லை என்று சொல்லுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் கட்டளையிட்டதை 17:90-93 வசனங்கள் சொல்கின்றன.

 

மேற்கண்ட அற்புதங்களை நிகழ்த்திக் காட்டுவது அல்லாஹ்வுக்கு மிகவும் எளிதானது தான். இவை அனைத்தையும் செய்து காட்டுமாறு அவர்கள் கோரிக்கை வைக்கவில்லை. இவற்றில் ஏதேனும் ஒன்றைத் தான் கோரினார்கள். அவ்வாறு செய்து காட்டினால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நம்புவதாகவும் கூறினார்கள். ஆனாலும் அவர்கள் கேட்டுக் கொண்ட அற்புதங்களைச் செய்து காட்ட அல்லாஹ் அனுமதிக்கவில்லை.

 

அற்புதங்களை நிகழ்த்துபவன் அல்லாஹ் தான். அவன் நாடும்போது மனிதர்கள் மூலம் அதை வெளிப்படுத்துகிறான் என்பதைப் புரிந்து கொள்ள இந்தச் சான்றுகள் போதுமானவையாகும்.

 

அற்புதங்களை நபிமார்கள் செய்யவில்லை. நபிமார்கள் மூலமாக அல்லாஹ் செய்தான் என்பதை இன்னும் உறுதியாக அறிந்து கொள்ள மூஸா நபி மூலம் வெளிப்பட்ட சில அற்புதங்களைக் கவனிக்கலாம்.

 

உம் கையில் இருப்பது என்ன என்று கேட்டு வெறும் கைத்தடி தான் என்று மூஸா நபியிடம் அல்லாஹ் பதிலைப் பெறுகிறான். அதனைக் கீழே போடு என்று அல்லாஹ் சொன்னான். உடன் அது பாம்பாக மாறியது. இந்த அற்புதத்தை அல்லாஹ்வே நிகழ்த்திக் காண்பித்தான். அது பாம்பாக மாறும் என்பது மூஸா நபிக்குத் தெரியாது. 20:17-21 வசனங்களில் இருந்து இதை அறியலாம்.

 

பின்னர் பிர்அவ்னிடம் சென்று மூஸா நபி அழைப்பு கொடுத்து அதே அற்புதத்தை அல்லாஹ்வின் அனுமதியுடன் செய்து காட்டினார்கள். இதைக் கண்ட பிர்அவ்ன் இது சூனியமாகும். நமது நாட்டில் உள்ள சூனியக்காரர்களுடன் போட்டி ஏற்படுத்தி உம்மைத் தோற்கடித்துக் காட்டுகிறேன் என்று அறைகூவல் விட்டான்.

 

சூனியக்காரர்களும் வந்தனர். அவர்கள் தமது சூனியங்களைச் செய்தனர். மூஸா நபியிடம் கைத்தடி இருந்தும் அவர்கள் அதைப் போட்டு எதிரிகளை முறியடிக்கவில்லை. அல்லாஹ்வின் கட்டளைக்குக் காத்திருந்தார்கள். ஏற்கனவே பாம்பாக மாற்றி அல்லாஹ் காண்பித்திருந்தாலும் மீண்டும் அல்லாஹ்விடமிருந்து கட்டளை வந்த பின்பே அதனை மூஸா நபி செய்தார்கள்.

 

அல்லாஹ்வின் கட்டளை வந்த பின் கைத்தடியைப் போட்டதால் தான் சூனியக்காரர்களின் வித்தையை அது விழுங்கியது. இதை 7:115, 116, 117 வசனங்களில் இருந்து அறியலாம்.

 

மூஸா நபியின் கையில் கைத்தடி கையில் இருந்தும், போட வேண்டிய நேரம் வந்தும் அவர்கள் தாமாகக் கைத்தடியைப் போடவில்லை. அல்லாஹ்வின் கட்டளைக்குப் பின்னரே போட்டார்கள்.

 

அதுபோல் மற்றொரு சம்பவத்தைப் பாருங்கள்.

 

மூஸா நபியை எதிரிகள் விரட்டிக் கொண்டு வரும்போது தமது கைத்தடியால் அடித்து கடலைப் பிளக்கவில்லை. அல்லாஹ் எனக்கு வழிகாட்டுவான் என்று கூறி அல்லாஹ்வின் கட்டளைக்குக் காத்திருந்தார்கள். கைத்தடியால் கடலில் அடிப்பீராக என்று கட்டளை வந்த பின்னர் தான் கைத்தடியால் கடலில் அடித்தார்கள். அல்லாஹ்வின் கட்டளை காரணமாகத் தான் இந்த அற்புதம் நிகழ்ந்தது. இதை 26:60,61,62,63 வசனங்களில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

 

இது போல் மூஸா நபி வாழ்வில் நடந்த மற்றொரு சம்பவத்தைப் பாருங்கள்!

 

மூஸா நபியின் சமுதாயத்துக்குத் தாகம் ஏற்பட்ட போது மூஸா நபியிடம் அவர்கள் முறையிட்டார்கள். கையில் கைத்தடி இருந்தும் தேவையான நேரத்தில் அடித்து நீரூற்றை அவர்கள் உருவாக்கவில்லை. மாறாக மக்களின் தாகத்தை அல்லாஹ்விடம் முறையிட்டு அல்லாஹ்விடம் தண்ணீரைக் கேட்டார்கள். அல்லாஹ்வின் கட்டளை வந்த பின்னர் தான் அதைப் பாறையில் அடித்தார்கள். அதில் இருந்து நீரூற்றுக்கள் உருவாயின என்று 2:60 வசனத்தில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

 

ஈஸா நபியவர்கள் இறந்தவர்களை உயிப்பித்தல் உள்ளிட்ட பல அற்புதங்களைச் செய்தார்கள். இது பற்றி அல்லாஹ் கூறும்போது எனது அனுமதியுடன் தான் இது நடந்தது என்றும், ஈஸா நபியால் நடக்கவில்லை என்றும் சொல்லிக் காட்டுகிறான். இதை 3:49, 5:110 ஆகிய வசனங்களில் காணலாம்.

 

மக்கள் கேட்கும் போதெல்லாம் அற்புதங்களை நபிமார்கள் செய்ததும் இல்லை. அல்லது அவர்கள் ஆசைப்படும் போதெல்லாம் அற்புதங்களைச் செய்ததும் இல்லை.

 

அற்புதங்களைச் செய்பவன் அல்லாஹ் மட்டுமே என்பதைப் புரிந்து கொள்ள மற்றொரு கோணத்திலும் நாம் சிந்திக்க வேண்டும்.

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன் எண்ணற்ற நபிமார்கள் அனுப்பப்பட்டனர். அவர்களில் ஏராளமான நபிமார்களை அவர்களின் எதிரிகள் கொன்று விட்டனர்.

 

இதை 3:112, 3:21, 2:61, 2:91, 2:87, 3:183 ஆகிய வசனங்களில் காணலாம்.

 

நினைத்த மாத்திரத்தில் அற்புதம் நிகழ்த்தும் சக்தி நபிமார்களுக்கு வழங்கப்பட்டிருந்தால் அவர்கள் ஏன் கொல்லப்பட்டனர்? யாரேனும் நம்மைக் கொல்ல வந்தால் நம்மிடம் உள்ள வலிமையைப் பயன்படுத்தி அதிலிருந்து தப்பிக்க முயற்சிப்பது கட்டாயக் கடமை. கை கட்டிக் கொண்டு தலையை நீட்ட மார்க்கத்தில் அனுமதி இல்லை.

 

அற்புதம் நிகழ்த்தும் ஆற்றல் நபிமார்களிடம் இருந்திருந்தால் எதிரிகள் கொல்ல வரும்போது அதைப் பயன்படுத்தும் கடமை அவர்களுக்கு உண்டு. அற்புதத்தைப் பயன்படுத்தியிருந்தால் அவர்களை யாராலும் கொன்றிருக்கவே முடியாது. ஆனாலும் அவர்கள் கொல்லப்பட்டனர். எனவே அற்புதங்கள் நிகழ்த்தும் அதிகாரம் அல்லாஹ்வுடையதே தவிர நபிமார்களுக்கோ, மற்றவர்களுக்கோ உரியதன்று என்பதை இதிலிருந்து அறிய முடியும்.

 

நபிமார்கள் பட்ட துன்பங்களை திருக்குர்ஆன் பல இடங்களில் கூறுகிறது.

 

நபிமார்கள் வறுமையில் வாடியுள்ளனர்.

 

சமுதாயத்திலிருந்து நீக்கி வைக்கப்பட்டனர்.

 

அடித்துச் சித்திரவதை செய்யப்பட்டனர்.

 

நாட்டை விட்டு விரட்டப்பட்டனர்.

 

இதை 2:214, 12:110, 13:12, 38:41,42, 6:33, 6:34, 2:83-86, 6:17, 7:188 வசனங்களில் காணலாம்.

 

நபிமார்களுக்கு அற்புதம் நிகழ்த்தும் ஆற்றல் இருந்தால் காலமெல்லாம் அவர்கள் துன்பத்திற்கு ஆளானது ஏன்? அற்புதம் செய்யும் ஆற்றல் நபிமார்களுக்கு வழங்கப்பட்டிருந்தால் அந்த ஆற்றலை அவர்கள் பயன்படுத்தியிருக்க வேண்டும்.

 

அற்புதங்கள் அல்லாஹ்வின் அதிகாரத்தில் உள்ளது என்பதை இதிலிருந்தும் புரிந்து கொள்ளலாம்.

 

எத்தனையோ நபிமார்கள் பல்வேறு போர்க்களங்களைச் சந்தித்தனர். அதில் எத்தனையோ உற்ற தோழர்களை இழந்தனர். அற்புதம் செய்யும் ஆற்றல் அவர்களிடம் இருந்தால் இப்படி நடந்திருக்காது. எந்தச் சேதமும் இல்லாமல் எதிரிகளை அழித்திருக்க முடியும்.

 

நபிமார்கள் மூலம் மட்டுமின்றி மாற்றவர்கள் வழியாகவும் அற்புதங்கள் நிகழ்ந்துள்ளன. வாயில்லா ஜீவன்கள் வழியாகவும் அற்புதங்கள் நிகழ்ந்துள்ளன.

 

ஹுத் ஹுத் எனும் பறவை ஸுலைமான் நபியுடன் பேசியதாகவும், அப்பறவை இன்னொரு நாட்டை ஆட்சி புரியும் பெண்ணைப் பற்றி அறிந்து கொண்டதாகவும், அவர்களின் நடவடிக்கைகளையும் அறிந்து ஸுலைமான் நபியிடம் கூறியதாகவும் 27:20-28 வசனங்கள் கூறுகின்றன.

 

ஹுத் ஹுத் எனும் பறவை மனிதனைப் போல் பகுத்தறிவு பெற்றிருந்தது என்று இதைப் புரிந்து கொள்ள மாட்டோம். ஹுத்ஹுத் அவ்லியா என்றும் சொல்ல மாட்டோம். ஸுலைமான் நபிக்காக ஒரு பறவைக்கு ஓரிரு தடவை அந்த ஆற்றலை அல்லாஹ் அளித்தான் என்று தான் புரிந்து கொள்வோம்.

 

ஹுத்ஹுத் பறவை மூலம் தனது அற்புதத்தை அல்லாஹ் சில சமயங்களில் வெளிப்படுத்தியதைப் போலவே நபிமார்கள் வழியாகவும் சில சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தியுள்ளான்.

 

பறவைகள், ஒரு புறம் இருக்கட்டும். அல்லாஹ்வின் எதிரிகள் வழியாகவும் அல்லாஹ் அற்புதங்களை நிகழ்த்திக் காட்டியிருக்கிறான்.

 

ஸாமிரி என்பவன் மூஸா நபி காலத்தில் வாழ்ந்தவன். அவன் தங்கத்தால் ஒரு காளைமாட்டைச் செய்து அதை இரத்தமும், சதையும் கொண்ட காளையாக ஆக்கி அதைச் சப்தமிடவும் செய்தான். இந்த விபரங்களை 20:88-90 ஆகிய வசனங்களில் அல்லாஹ் கூறுகிறான்.

 

மூஸா நபியின் சமுதாய மக்கள் எந்த அளவு உறுதியுடன் இருக்கிறார்கள் என்பதைச் சோதிக்கும் விதமாக அல்லாஹ் இந்த அற்புதத்தை ஸாமிரி மூலம் நிகழ்த்திக் காட்டினான். என் சமுதாயமே! "இதன் மூலம் சோதிக்கப்பட்டுள்ளீர்கள்'' என்று ஹாரூன் நபி கூறியதிலிருந்து இதை அறிந்து கொள்ளலாம்.

 

நினைத்த மாத்திரத்தில் நினைத்த அற்புதத்தை ஸாமிரி செய்வான் என்று இதைப் புரிந்து கொள்ள முடியாது.

 

இதுபோலவே எதிர்காலத்தில் தஜ்ஜால் என்பவனும் சில அற்புதங்களை நிகழ்த்துவான் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதனால் அவன் நினைத்ததை நினைத்த மாத்திரத்தில் செய்யும் ஆற்றலுடையவனாகி விட்டான் என்று புரிந்து கொள்ளக் கூடாது.

 

இறந்தவரை ஒரு தடவை அவன் உயிர்ப்பிப்பான். ஆனால் மற்றொரு தடவை அவனால் இதைச் செய்ய முடியாது என நபிகள் நாயகம் (ஸல்) தெளிவுபடுத்தி விட்டனர்.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)

நூல்: புகாரி 6599, 1749

 

ஷைத்தான் கூட எத்தனையோ அற்புதங்களை நிகழ்த்தியுள்ளான். நிகழ்த்திக் கொண்டே இருக்கிறான். மனிதர்களின் உள்ளங்களில் ஊடுறுவி அவர்களது எண்ணங்களையே மாற்றி விடுகிறான்.

 

இதிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது என்ன? நம் கண்முன்னே ஒருவர் அற்புதத்தை நிகழ்த்திக் காட்டினால் உடனே அவரை மகான் என்றும், அல்லாஹ்வுக்கு விருப்பமான அடியார் என்றும் கருதி விடக் கூடாது. மனிதர்களைச் சோதித்துப் பார்க்க கெட்டவர்களுக்கும் அல்லாஹ் அற்புதம் வழங்குவான் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

 

இவ்வளவு சான்றுகளை அல்லாஹ்வின் வேதத்திலிருந்து எடுத்துக் காட்டிய பின்னரும் தங்கள் பழைய நம்பிக்கையை விட்டு விட தயக்கம் காட்டுவோர் இருக்கத் தான் செய்கின்றனர்.

 

அடக்கத்தலங்களில் போய் அற்புதங்களை எதிர்பார்க்கின்றனர். எவ்வளவோ அற்புதங்கள் தர்காக்களில் நடக்கின்றனவே என்று தங்கள் கூற்றை இவர்கள் நியாயப்படுத்துகின்றனர்.

 

அற்புதங்கள் பல நிகழ்த்திய ஈஸா நபியை அழைக்கும் கிறித்தவர்களை இறைமறுப்பாளர்கள் என்று கூறும் இவர்களுக்கு, ஈஸா நபிக்குச் சமமாகாத மற்றவர்களை அழைப்பது இறை நம்பிக்கையாகத் தோற்றமளிப்பது ஆச்சரியமாகவுள்ளது.

 

பல நபிமார்கள் மூலம் அல்லாஹ் அற்புதங்கள் நிகழ்த்தியதாக நாம் முன்னர் குறிப்பிட்டோம். அவர்கள் மூலம் வெளிப்பட்ட அற்புதங்கள் அவர்கள் உயிரோடு இருக்கும்போது தான் நடந்தன. அவர்கள் மரணித்த பிறகு அவர்கள் வழியாக அற்புதங்கள் நிகழ்ந்தன என்று குர்ஆனிலோ, நபிமொழிகளிலோ கூறப்படவே இல்லை.

 

ஆனால் இவர்களோ இறந்தவர்களால் அற்புதங்கள் நடப்பதாகக் கூறுகின்றனர்.

 

மனிதன் இறந்து விட்டால் அவனது செயல்பாடுகளும் முடிந்து விடுகின்றன என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 3358

 

உயிரோடு இருக்கும் போதே நினைத்த அற்புதங்களை யாரும் நிகழ்த்த முடியாது; இறந்த பின் அறவே எந்தச் செயல்பாடும் கிடையாது என்பது தான் இஸ்லாத்தின் அடிப்படை.

 

இறந்த பின்னர் ஒருவருக்கு இந்த உலகத்துடன் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை அறிந்திட 298, 41, 79, 83,வது குறிப்புகளைப் பார்க்கவும்.

 

அப்படியானால் தர்காக்களில் அற்புதங்கள் நடக்கின்றனவே? அது எப்படி என்று சிலர் கேட்கின்றனர்.

 

தர்காக்களில் அற்புதங்கள் நடக்கின்றன எனக் கூறுவதில் உண்மையில்லை. அற்புதங்கள் நிகழ்வதாகப் பரப்பப்படும் வதந்திகள் தான் அத்தகைய எண்ணத்தை ஏற்படுத்தி வருகின்றன.

 

ஒரு தர்காவுக்கு ஆயிரம் பேர் சென்று பிரார்த்தித்து அதிகமான செல்வத்தை வேண்டுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்களில் ஒருவர் அல்லது இருவர் சில நாட்களில் செல்வந்தராக ஆகி விடக் கூடும். ஆயிரத்தில் 998 பேர் ஆகவில்லையே அது ஏன்? இதைத் தான் சிந்திக்க மறுக்கின்றனர்.

 

செல்வந்தராகி விட்ட அந்த இரண்டு பேர், 998 பேருக்கும் சேர்த்து பிரச்சாரம் செய்கின்றனர். ஆனால் காரியம் கைகூடாத 998 பேர் "இவர் ஒரு மகானா'' என்று கூறிவிட்டால் ஏதேனும் கேடு விளைந்து விடுமோ என அஞ்சி வாய் திறப்பதில்லை.

 

இதன் காரணமாகத் தான் தர்காக்களில் அற்புதங்கள் நடக்கின்றன என்ற நம்பிக்கை நிலவுகிறது. எத்தனையோ பேர் தமக்குக் குழந்தை இல்லை என்பதற்காக எல்லா தர்காக்களிலும் ஏறி இறங்கி கடைசி வரை குழந்தை பாக்கியம் கிடைக்காமல் உள்ளதை நாம் பார்க்கிறோம்.

 

ஆயிரத்தில் இரண்டு என்ற கணக்கில் தர்காக்களில் மட்டும் அற்புதங்கள் நடக்கவில்லை.

 

கோவில்களில் நடக்கின்றன.

 

சர்ச்சுகளில் நடக்கின்றன.

 

இன்னும் பல வழிபாட்டுத் தலங்களில் நடக்கின்றன.

 

இவ்வாறு நடப்பதால் தான் கோவில்களிலும், சர்ச்சுகளிலும் தர்காக்களில் குவிவதை விட பல மடங்கு அதிகமாகக் காணிக்கைகள் குவிகின்றன. தங்கள் கோரிக்கை நிறைவேறிய பிறகு தான் காணிக்கைகள் செலுத்துவர் என்பதை அனைவரும் அறிவோம்.

 

இவர்களின் வாதப்படி கோவில்களிலும், சர்ச்சுகளிலும் போய் பிரார்த்திப்பது குற்றமில்லை என்று ஆகிவிடும். ஏனெனில் தர்காக்களில் அற்புதங்கள் நிகழ்கின்றனவே என்பது தான் இவர்களின் வாதமாக இருக்கிறது.

 

ஆயிரத்தில் இரண்டு பேருக்கு அற்புதங்கள் நடக்கின்றனவே இது எப்படி நடக்கின்றது என்பதைப் பற்றியும் நாம் அறிந்து கொண்டால் தெளிவு பிறக்கும்.

 

ஒவ்வொரு காரியமும் நிகழ்வதற்கு அல்லாஹ் ஒரு நேரத்தை நிர்ணயம் செய்துள்ளான். அந்த நேரம் வரும்போது தானாக அந்தக் காரியம் நிறைவேறும்.

 

அந்த நேரம் வரும்போது தர்காவில் இருப்பவர்கள், தர்காவில் அடக்கம் செய்யப்பட்டவர் நிகழ்த்திய அற்புதம் என்று நினைத்துக் கொள்கின்றனர்.

 

அந்த நேரம் வரும்போது கோவிலில் இருப்பவர்கள் அந்த சாமியின் அற்புதம் என நினைத்துக் கொள்கின்றனர்.

 

அந்த நேரம் வரும்போது சர்ச்சுகளில் இருப்பவர்கள் இயேசுவின் அல்லது மேரியின் அற்புதம் என்று நினைத்துக் கொள்கின்றனர்.

 

இவர்கள் தர்காவுக்கோ, சர்ச்சுக்கோ, கோவிலுக்கோ செல்லாவிட்டாலும் உரிய நேரம் வந்ததும் இவர்களது காரியம் கைகூடி இருக்கும். உரிய நேரம் வந்துவிட்டால் ஒரு விநாடி முந்தவும், பிந்தவும் செய்யாது என்று 7:34, 10:49, 16:61 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.

 

தர்கா வழிபாட்டை நியாயப்படுத்துவோரின் இதர வாதங்கள் எப்படி தவறானவை என்பதை அறிந்து கொள்ள 17, 41, 49, 79, 83, 100, 104, 121, 122, 140, 141, 193, 213, 215, 245, 298, 327, 397, 427, 471 ஆகிய குறிப்புகளையும் காண்க!

 

 








free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2019 tamilquran.in. Designed by Ahadh Media.
You 're visitors No. 247794