166. கப்ரு என்னும் மண்ணறை வாழ்க்கை

 

கப்ரு எனும் ஆன்மாக்களின் உலகத்தில் தீயவர்கள் வேதனை செய்யப்படுகிறார்கள்; நல்லவர்கள் இன்பம் அனுபவிக்கிறார்கள் என்ற கருத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஏராளமான பொன்மொழிகள் இருக்கின்றன. முஸ்லிம்களும் அவற்றை நம்புகின்றார்கள்.

 

ஆனால் திருக்குர்ஆனில் கப்ரு என்னும் மண்ணறை வாழ்க்கை பற்றியோ, அங்கே வேதனை இருக்கிறது பற்றியோ எதுவுமே கூறப்படவில்லை என்று காரணம் காட்டி சிலர் அதனை மறுக்கிறார்கள்.

 

கப்ரில் வேதனை இருக்கிறது என்று திருக்குர்ஆனில் நேரடியாகக் கூறப்படாவிட்டாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இது பற்றி நமக்குக் கூறியுள்ளதால் அதுவே நமக்குப் போதுமானதாகும். ஆனாலும் கப்ரு வேதனை பற்றி குர்ஆனிலும் சொல்லப்பட்டுள்ளது என்பதே உண்மையாகும்.

 

6:93, 8:50 வசனங்களில் வானவர்கள் அநியாயக்காரர்களின் உயிரைக் கைப்பற்றுகின்றபோது "இன்று நீங்கள் இழிவு தரும் வேதனையைச் சுவையுங்கள்'' என்று கூறுவார்கள் என்று அல்லாஹ் கூறுகின்றான்.

 

தீயவர் ஒருவர் மரணித்தவுடன் நரகத்துக்குச் செல்ல மாட்டார். உலகம் அழிக்கப்பட்டு, நியாயத் தீர்ப்பு நாள் வந்து விசாரிக்கப்பட்டு, அதன் பிறகு தான் அவர்களுக்கு நரகம் என்ற இழிவு தருகின்ற தண்டனை கிடைக்கப் போகிறது.

 

ஆனால் இவ்வசனமோ உயிர்களைக் கைப்பற்றும்போது இன்று வேதனையை அனுபவியுங்கள் என்று வானவர்கள் கூறுவதாகத் தெரிவிக்கிறது. அதாவது உயிரைக் கைப்பற்றிய உடன் வேதனை துவங்கி விடுகிறது. இது கப்ரு வேதனையைத் தான் குறிக்க முடியும்.

 

இதற்கு விளக்கமாகத்தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கப்ரு வேதனை இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார்கள். இது குர்ஆனுக்கு மாற்றமானது இல்லை.

 

மண்ணறை வாழ்க்கை பற்றி விளக்கமாக அறிய 332, 349 ஆகிய குறிப்புகளையும் காண்க!

 

 








free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2019 tamilquran.in. Designed by Ahadh Media.
You 're visitors No. 247731