291. தூய்மையில்லாமல் குர்ஆனைத் தொடலாமா?

 

தூய்மையானவர்களைத் தவிர யாரும் இதைத் தொட மாட்டார்கள் என இவ்வசனத்தில் (56:79) கூறப்படுகிறது.

 

இவ்வசனத்தைச் சான்றாகக் கொண்டு தூய்மையில்லாத யாரும் குர்ஆனைத் தொடக் கூடாது என்று சிலர் வாதிடுகின்றனர்.

 

உளூ எனும் தூய்மை இல்லாதவர்களும், குளிப்பு கடமையானவர்களும், மாதவிடாயுள்ள பெண்களும், இஸ்லாத்தை ஏற்காதவர்களும் திருக்குர்ஆனைத் தொடக் கூடாது என்று இந்த வசனத்தை அடிப்படையாகக் கொண்டு அவர்கள் கூறிவருகின்றனர்.

 

இவர்கள் கூறுவது போல் குர்ஆன் கூறினால் அதுதான் இஸ்லாத்தின் சட்டம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இவ்வசனம் சொல்லாத ஒரு கருத்தை இவ்வசனத்துக்குள் நுழைத்து, வளைத்து இவ்வாறு வாதிடுகின்றனர் என்பதே உண்மை.

 

இவர்களின் வாதம் எவ்வாறு தவறானது என்பதைப் பார்த்துவிட்டு இதன் சரியான கருத்து என்னவென்று பார்ப்போம்.

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு திருக்குர்ஆன் எழுத்து வடிவில் அருளப்படவில்லை என்பதை 312, 152 ஆகிய குறிப்புகளில் தெளிவுபடுத்தி உள்ளோம்.

 

திருக்குர்ஆன் எழுத்து வடிவில் அருளப்படவில்லை எனும்போது எழுத்து வடிவில் அருளப்படாததைத் தொட முடியாது என்பதால் தொடுகின்ற பேச்சுக்கே இடமில்லை.

 

தொடும் விதத்தில் திருக்குர்ஆன் அருளப்பட்டிருந்தால் மட்டுமே "இந்தக் குர்ஆனைத் தொடமாட்டார்கள்" என்று கூற முடியும்.

 

திருக்குர்ஆன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஓதிக் காட்டப்பட்டதே தவிர எழுத்து வடிவில் அருளப்படவில்லை.

 

இறைவனிடமிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்தியைப் பெற்ற பிறகு எழுத்தர்களிடம் சொல்லி எழுதி வைத்துக் கொண்டதால் திருக்குர்ஆன் எழுத்து வடிவம் பெற்றது.

 

புத்தகமாக குர்ஆன் அருளப்பட்டு இருந்தால் அந்தப் புத்தகத்தைக் காட்டி இதைத் தொடமாட்டார்கள் என்று சொல்ல முடியும்.

 

ஒலி வடிவில் ஒன்றைச் சொல்லி விட்டு இதைத் தொடக் கூடாது என்று யாரும் பேசமாட்டார்கள். ஏனெனில் ஒலியைக் கையால் தொடமுடியாது.

 

அப்படியானால் அதைத் தொடமாட்டார்கள் என்பது எதைக் குறிக்கிறது?

 

இஸ்லாமிய நம்பிக்கைப்படி இறைவனிடம் ஒரு பதிவேடு உள்ளது. நடந்தவை, நடக்க இருப்பவை அனைத்தும் அந்தப் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்தப் பதிவேட்டில் திருக்குர்ஆனும் பதிவு செய்து வைக்கப்பட்டுள்ளது. அந்தப் பதிவேட்டை வானவர்களாகிய தூய்மையானவர்கள்தான் தொட முடியுமே தவிர ஷைத்தான்களால் தொட முடியாது.

 

(பாதுகாக்கப்பட்ட பதிவேடு குறித்து அறிந்திட 157, 492வது குறிப்புகளைப் பார்க்கவும்)

 

அத்தகைய பாதுகாக்கப்பட்ட பதிவேட்டில் இருந்துதான் இந்தக் குர்ஆன் எடுத்து வரப்படுகிறது.

 

இதைத் தொடமாட்டார்கள் என்பது பாதுகாக்கப்பட்ட பதிவேட்டைத்தான் குறிக்கிறது.

 

இதை நாம் சொந்த ஊகத்தில் சொல்லவில்லை. குர்ஆன் அப்படித்தான் சொல்கிறது. இதைத் தொடமாட்டார்கள் என்ற வசனத்தை மட்டும் பார்க்காமல் அதற்கு முன்னுள்ள இரண்டு வசனங்களுடன் சேர்த்துப் பார்த்தால் இதை அறிந்து கொள்ளலாம்.

 

இவ்வசனத்துக்கு முன்னர் உள்ள வசனங்களில் இருந்து பாருங்கள்

 

77, 78. இது பாதுகாக்கப்பட்ட பதிவேட்டில் இருக்கும் மகத்துவமிக்க குர்ஆனாகும்.

 

79. தூய்மையான(வான)வர்களைத் தவிர (மற்றவர்கள்) அதைத் தீண்ட மாட்டார்கள்.

 

80. அகிலத்தின் இறைவனிடமிருந்து (இது) அருளப்பட்டது.

 

அதைத் தீண்ட மாட்டார்கள் என்று இவ்வசனத்தில் கூறப்படுகிறது. அதை என்று சொல்லப்படுவது எதைக் குறிக்கிறது என்பது தான் இப்பிரச்சினையின் அடிப்படையாக அமைந்துள்ளது.

 

'அதை' என்று நாம் பேசினாலோ, எழுதினாலோ அதுபற்றி முன்னரே பேசியோ, எழுதியோ இருப்போம். அதை என்பது முன்னர் பேசியதைக் குறிக்கிறது என்று கேட்பவர்கள் புரிந்து கொள்வார்கள்.

 

"அதைத் தொட மாட்டார்கள்" என்று இவ்வசனம் சொல்கிறது என்றால் இதற்கு முன்னுள்ள வசனங்களில் இதுபற்றி குறிப்பிடப்பட்டு இருக்கும். அவ்வாறு நாம் தேடிப்பார்க்கும்போது அதை என்பது எதைக் குறிக்கிறது என்று நாம் அறிந்து கொள்ள முடியும்.

 

இவ்வசனத்திற்கு முன் 56:77,78 ஆகிய வசனங்களில் "இது பாதுகாக்கப்பட்ட ஏட்டில் இருக்கின்ற மதிப்புமிக்க திருக்குர்ஆன்'' எனக் கூறப்படுகிறது.

 

அடுத்த வசனத்தில் "அதைத் தொட மாட்டார்கள்'' என்று கூறப்படுகிறது.

 

எனவே "பாதுகாக்கப்பட்ட ஏட்டில் உள்ள திருக்குர்ஆன், எங்கிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டதோ அங்குள்ள மூலப் பிரதி" என்பதுதான் "அதை" என்பதன் பொருள்.

 

எனவே "அதைத் தொடமாட்டார்கள்" என்பது ஒலி வடிவமாக அருளப்பட்ட குர்ஆனைக் குறிக்காது. எங்கிருந்து அருளப்பட்டதோ அந்த மூலப் பிரதியைத்தான் குறிக்கும்.

 

எனவே இவ்வசனத்தை ஆதாரமாகக் கொண்டு தூய்மையில்லாமல் குர்ஆனைத் தொடக் கூடாது என்று வாதிடுவது தவறாகும்.

 

திருக்குர்ஆன் எல்லா மக்களுக்கும் வழிகாட்டுவதற்காக அருளப்பட்டது. எல்லா நிலையிலும் வாசிப்பதற்காக அருளப்பட்டது. எல்லா மாந்தர்களும் படிப்பதற்காக அருளப்பட்டது.

 

முஸ்லிம் அல்லாதவர்கள் இந்தக் குர்ஆனை வாசித்தால்தான் அவர்கள் நேர்வழி பெற முடியும். "நீங்கள் தூய்மையாக இல்லை; நீங்கள் குர்ஆனைத் தொடக்கூடாது'' என்று கூறினால், எந்த நோக்கத்திற்காக குர்ஆனை அல்லாஹ் அருளினானோ அந்த நோக்கத்தைச் சிதைப்பதாக ஆகும்.

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல நாடுகளின் தலைவர்களுக்கு, திருக்குர்ஆன் வசனங்களை எழுதி இஸ்லாத்தின்பால் அழைப்புக் கொடுத்துள்ளனர்.

(பார்க்க : புகாரி 7, 2941, 4553)

 

அந்த மன்னர்கள் அதைத் தம் கையால் தொட்டு வாசிப்பார்கள் என்பதை அறிந்தே திருக்குர்ஆன் வசனங்களை எழுதி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுப்பியிருக்கும்போது, திருக்குர்ஆனைத் தூய்மையுடன்தான் தொட வேண்டும் என்று கூறுவது தவறாகும். இவ்வாறு கூறுவது குர்ஆனிலிருந்து மக்களை அந்நியப்படுத்தி விடும்.

 

குர்ஆனைத் தூய்மையானவர்கள் தான் தொட வேண்டும் என்று கூறுவதற்கு எந்த வகையிலும் சான்றாக இவ்வசனம் அமைந்திருக்கவில்லை.

 

எல்லா நிலையிலும், எல்லா மனிதர்களும் குர்ஆனைத் தொடலாம்; படிக்கலாம்; வாசிக்கலாம் என்பதுதான் குர்ஆனிலிருந்து பெறப்படுகின்ற, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிமுறைகளிலிருந்து பெறப்படுகின்ற முடிவாகும்.

 

உளூ இல்லாமல் குர்ஆனைத் தொடக் கூடாது என்ற கருத்தில் சில நபிமொழிகளும் உள்ளன. அவை அனைத்தும் பலவீனமானவையாக உள்ளன.

 

இது பற்றி விபரமாகப் பார்ப்போம்.

 

ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) கூறுகிறார் : அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை யமன் நாட்டிற்கு அனுப்பியபோது நீ தூய்மையான நிலையில் இருக்கும் போதே தவிர குர்ஆனைத் தொடாதே என்று கூறினார்கள்.

நூல் : ஹாகிம்

 

இந்த ஹதீஸை சுவைத் பின் அபீஹாதிம் என்பவர் அறிவிக்கின்றார். இவர் பலவீனமானவர் என்று நஸாயீ, அபூஸுர்ஆ ஆகியோர் கூறியுள்ளனர். இவர் மோசமான மனனத்தன்மை கொண்டவர்; பல தவறுகள் இவரிடம் ஏற்பட்டுள்ளன என்று இப்னு ஹஜர் கூறியுள்ளார். இந்த ஹதீஸ் பலவீனமானது என்று அல்குலாஸா என்ற தனது நூலில் நவவீ குறிப்பிட்டுள்ளார். இதை நம்பகமான ஹதீஸ் என்று ஹாகிம் மட்டும் கூறினாலும் அவர் நம்பகமானவர்களைத் தீர்மானிப்பதில் அலட்சியமாக செயல்படுபவர் என்று ஹதீஸ்கலை அறிஞர்கள் கூறுகின்றனர்

 

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) கூறுகிறார் :

 

தூய்மையானவரைத் தவிர குர்ஆனைத் தொடக்கூடாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : தப்ரானி

 

இந்தச் செய்தியில் சயீத் பின் முஹம்மத் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் நம்பகமானவர் என்று எந்த அறிஞரும் நற்சான்று அளிக்கவில்லை.

 

மேலும் இந்த அறிவிப்பில் இப்னு ஜுரைஜ் என்பவரும் இடம் பெற்றுள்ளார். இவர் நம்பகமானவர் என்றாலும் தத்லீஸ் என்ற இருட்டடிப்பு வேலையைச் செய்பவர். இவரைப் போன்றவர்கள் நான் கேட்டேன்; எனக்கு அறிவித்தார் என்று நேரடியாகக் கேட்டதாக அறிவித்தால் மட்டுமே ஏற்கப்படும்.

 

மேற்கண்ட அறிவிப்பில் ஸுலைமான் பின் மூசா என்பவரிடம் இவர் நேரடியாகக் கேட்டதாக எந்த வாசகத்தையும் குறிப்பிடவில்லை. இதன் காரணத்தாலும் இது பலவீனமான செய்தியாகும்.

 

உஸ்மான் பின் அபில் ஆஸ் (ரலி) கூறுகிறார் :

 

நீ தூய்மையான நிலையில் இருந்தாலே தவிர குர்ஆனைத் தொட வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

 

நூல் : தப்ரானி

 

இந்தச் செய்தியில் இஸ்மாயீல் பின் ராஃபிஉ என்பவர் இடம் பெற்றுள்ளார். இப்னு ஹஜர், யஹ்யா பின் மயீன், நஸாயீ, தஹபீ, அஹ்மது பின் ஹம்பல், யாகூப் பின் சுப்யான், இப்னு அதீ, தாரகுத்னீ, இப்னு கராஷ், அபூ ஹாதிம் மற்றும் முஹம்மது பின் சஅத் ஆகியோர் இவர் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர். புகாரி மட்டுமே இவரை நம்பகமானவர் என்று கூறியுள்ளார். புகாரி அல்லாத மற்ற ஏராளமான அறிஞர்கள் ஒன்றுபட்டு இவரைப் பலவீனமானவர் என்று கூறுவதாலும் இவர் மனனத்தன்மை சரியில்லாதவர் என்று குறைக்கான காரணம் தெளிவாகச் சொல்லப்பட்டிருப்பதாலும் இவர் பலவீனமானவர் ஆவார். இவரிடத்தில் உள்ள குறையை புகாரி அவர்கள் அறியாத காரணத்தால் தவறுதலாக நம்பகமானவர் என்று கூறியுள்ளார். எனவே இந்த அறிவிப்பும் பலவீனமானதாகும்.

 

அப்துல்லாஹ் பின் அபீபக்ர் பின் முஹம்மது பின் அம்ர் பின் ஹஸ்ம் கூறுகிறார் :

தூய்மையானவரைத் தவிர வேறு யாரும் குர்ஆனைத் தொடக்கூடாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அம்ர் பின் ஹஸ்ம் (ரலி) அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் இருந்தது.

நூல் : மராஸீலு அபீதாவூத் (90)

 

இந்தச் செய்தி முழுமையான அறிவிப்பாளர் தொடரின்றி உள்ளது.

 

தாரகுத்னீ இந்தச் செய்தி தொடர்பாக கூறுகையில் இது தொடர்பு அறுந்த முர்ஸல் என்ற வகையைச் சார்ந்த செய்தியாகும். இதில் உள்ள அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

 

அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்கள் என்றாலும் இடையில் அறிவிப்பாளர் விடுபட்டிருந்தால் அதன் காரணமாக அந்த ஹதீஸ் பலவீனமாகிவிடும்.

 

இந்தச் செய்தியை அப்துல்லாஹ் பின் அபீபக்ர் என்பவர் அறிவிக்கின்றார். இவர் நபித்தோழரல்லர். நபித்தோழர் காலத்தில் வாழ்ந்தவருமல்லர். இப்படிப்பட்டவர் நபியுடன் தொடர்புடைய செய்தியை அறிவிப்பதால் இது முர்ஸல் (தொடர்பு அறுந்த செய்தி) ஆகும் என்று தாரகுத்னீ தெளிவுபடுத்தியுள்ளார். இமாம் அபூதாவூத் அவர்களும் இந்தச் செய்தியை தொடர்பு அறுந்த முர்ஸலான செய்திகளில் ஒன்றாகப் பதிவு செய்துள்ளார்.

 

இடையில் அறிவிப்பாளர் விடுபடாமல் வரும் அறிவிப்பாளர் தொடரில் ஸுலைமான் பின் அர்கம் என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர் முற்றிலும் பலவீனமானவர் என்று அறிஞர் பெருமக்களால் ஒதுக்கப்பட்டவர்.

 

எனவே தூய்மையில்லாமல் குர்ஆனைத் தொடக் கூடாது என்பதற்குச் சான்றாக ஒரு செய்தியும் இல்லை. முஸ்லிமல்லாதவர்கள், மாதவிடாய் ஏற்பட்டவர்கள், குளிப்பு கடமையானவர்கள் உளூ இல்லாதவர்கள் உள்ளிட்ட யாராக இருந்தாலும் குர்ஆனைத் தொடலாம். ஓதலாம் என்பதே சரியான கருத்தாகும்.

 

 
free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2019 tamilquran.in. Designed by Ahadh Media.
You 're visitors No. 151649