202. விடிவெள்ளியா? சப்தமிடும் நட்சத்திரங்களா?

 

இவ்வசனத்தில் தாரிக் மீது சத்தியமாக என்று சொல்லப்பட்டுள்ளது. தாரிக் என்பது என்ன என்றும் அடுத்த வசனத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதாவது தாரிக் என்பது ஒளி வீசும் ஒரு நட்சத்திரத்தின் பெயர் என்பது இதிலிருந்து தெரிகின்றது.

 

நட்சத்திரங்களில் அதிகாலையில் அதிகப் பிரகாசத்துடன் காட்சி தரும் விடிவெள்ளியைத் தான் தாரிக் என்று சொல்வார்கள். அகராதி நூல்களிலும் விடிவெள்ளி என்று தான் சொல்லப்பட்டுள்ளது. இரவு முழுவதும் தென்படாமல் திடீரென்று அதிகாலையில் வெளிச்சம் தருவதால் தாரிக் (திடீரென வெளிச்சம் தருவது) என்று சொல்லப்பட்டுள்ளது.

 

அனைவரும் அன்றாடம் பார்க்கக் கூடிய அனைவரும் அறிந்து வைத்திருக்கக் கூடியதைத் தான் இவ்வசனம் சொல்கிறது. தாரிக் என்பதற்கு வேறு அர்த்தம் கொள்ளக் கூடாது என்பதற்காகவே அது ஒளிவீசும் நட்சத்திரம் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

 

ஆனால் இவ்வசனத்துக்கு நவீன காலத்துக்கு ஏற்ப விளக்கம் கொடுப்பதாக எண்ணிக் கொண்டு சிலர் புது விளக்கம் கொடுக்கின்றனர். அதாவது சப்தமிடக் கூடியது என்பது இதன் பொருள். நட்சத்திரங்களில் சப்தமிடக் கூடியவை இரண்டு லட்சத்துக்கு மேல் உள்ளதாகவும், அதைத் தான் இவ்வசனம் கூறுவதாகவும் இவர்கள் கூறுகின்றனர்.

 

திருக்குர்ஆனில் பல அறிவியல் உண்மைகள் கூறப்பட்டுள்ளன. ஆனால் இவ்வசனத்திற்கு இவர்கள் கொடுக்கும் அறிவியல் விளக்கம் ஏற்புடையதல்ல. தாரிக் என்பது ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்தின் பெயர் என்றுதான் இவ்வசனம் கூறுகிறது. சப்தமிடும் இரண்டு லட்சம் நட்சத்திரங்களை குறிப்பிடுவதாகச் சொல்வது வலிந்து தினிக்கப்பட்ட கற்பனையாகவே தெரிகிறது.

 

மேலும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்து, மக்களின் கண்களுக்குத் தென்படாத நட்சத்திரங்களை இச்சொல் குறிக்கவில்லை. மக்கள் பார்க்கும் வகையில் ஒளி வீசும் விடிவெள்ளியையே இது குறிக்கிறது. இதை அடுத்த வசனம் தெளிவாகச் சொல்கிறது.

 

எனவே தான் சப்தமிடும் நட்சத்திரம் என்று நாம் பொருள் கொள்ளவில்லை. தாரிக் என்பதற்கு கதவைத் தட்டுதல், சம்மட்டியால் தட்டுதல் என்ற பொருள் இருப்பது போல் திடீரென்று தோன்றுதல், எதிர்பாராமல் வருதல், யாருக்கும் தெரியாமல் வருதல் என்று பல அர்த்தங்கள் உள்ளன. ஆனால் இந்த இடத்தில் சப்தமிடும் நட்சத்திரம் என்பது பொருந்தாது.

 

 
free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2019 tamilquran.in. Designed by Ahadh Media.
You 're visitors No. 164878