35. மகாமு இப்ராஹீம் என்பது என்ன?

 

2:125, 3:97 ஆகிய வசனங்களில் மகாமு இப்ராஹீம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. 2:125 வசனத்தில் "மகாமு இப்ராஹீமின் ஒரு பகுதியில் தொழுமிடத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்'' என்று கூறப்படுகின்றது.

 

மகாமு இப்ராஹீம் என்றால் என்ன என்பதில் அதிகமான மக்கள் அறியாமையில் உள்ளனர். கஅபாவின் கிழக்குத் திசையில் சுமார் 10 மீட்டர் தொலைவில் ஒரு கல் நாட்டப்பட்டுள்ளதைக் காணலாம். அந்தக் கல் மகாமு இப்ராஹீம் என்று மக்களால் குறிப்பிடப்படுகின்றது.

 

"இப்ராஹீம் நபியவர்கள் ஒரு குறிப்பிட்ட கல் மீது ஏறி நின்று கஅபாவைக் கட்டினார்கள்; எந்தக் கல்லின் மீது ஏறி நின்று கஅபாவைக் கட்டினார்களோ அந்தக் கல் இதுதான். இதுவே மகாமு இப்ராஹீம்'' என்று அதிகமான அறிஞர்கள் கூறுகின்றனர். இது தவறாகும்.

 

மகாமு இப்ராஹீம் எதைக் குறிக்கிறது என்பதை மக்களின் நம்பிக்கையை அடிப்படையாக வைத்து முடிவு செய்வதை விட, திருக்குர்ஆனையும், நபிவழியையும் அடிப்படையாக வைத்து முடிவு செய்வதே சரியானதாகும்.

 

மகாமு இப்ராஹீமில் தொழுமாறு கட்டளையிடும் வசனத்தைச் சிந்தித்தால் மகாமு இப்ராஹீம் என்பது அந்தக் கல் அல்ல என்பதை அறியலாம். மகாமு இப்ராஹீம் பற்றி இறைவன் பேசும்போது, "மின் மகாமி இப்ராஹீம் - மகாமு இப்ராஹீமின் ஒரு பகுதியில் தொழுமிடத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்'' என்று கட்டளையிடுகின்றான். தொழுவதற்கு வசதியான ஒரு இடமே மகாமு இப்ராஹீம் என்பது இதிலிருந்து தெளிவாகும்.

 

மகாமு இப்ராஹீம் என்பது ஒரு குறிப்பிட்ட கல் அல்ல; பெரிய பரப்பளவைக் கொண்ட ஓர் இடம் என்பது இதிலிருந்து உறுதியாகின்றது. அந்த விரிவான இடத்தில் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் தொழுது கொள்ளலாம் என்ற கருத்தைத் தரும் வகையில்தான் இந்த வசனம் அமைந்துள்ளது.

 

குறிப்பிட்ட கல்லை மகாமு இப்ராஹீம் என்று சொல்பவர்கள் அக்கல்லின் மீது ஏறி நின்று தொழுவதில்லை. அதன் மீது ஏறித் தொழவும் முடியாது. எனவே மகாமு இப்ராஹீம் என்பது அக்கல்லைக் குறிக்காது.

 

இதனால்தான், "மகாமு இப்ராஹீமின் ஒரு பகுதியில் தொழுமிடத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்'' என்ற கட்டளை வந்தவுடன், (கஅபாவின் சுவற்றுடன் சேர்ந்திருந்த) மகாமு இப்ராஹீம் என்று சொல்லப்படும் கல்லுக்குப் பின்னால் நின்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுதார்கள். (பார்க்க: புகாரி 396, 1192, 1600, 1624, 1627, 1646, 1692, 1794)

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இந்தச் செயல் விளக்கம் மகாமு இப்ராஹீம் என்பதன் பொருளைத் தெளிவாக்குகின்றது. கஅபாவின் நான்கு திசைகளில், மகாமு இப்ராஹீம் என்றழைக்கப்படும் கல் உள்ள கிழக்குப் பகுதிதான் மகாமு இப்ராஹீம் ஆகும்.

 

பொதுவாக கஅபாவின் நான்கு திசைகளிலிருந்தும் கஅபாவை நோக்கித் தொழலாம் என்பதை நாம் அறிவோம். ஏதேனும் ஒரு சில தொழுகைகளையாவது மகாமு இப்ராஹீம் என்ற கிழக்குத் திசையிலிருந்து கஅபாவை நோக்கித் தொழ வேண்டும் என்பது தான் இவ்வசனத்தின் கருத்தாகும்.

 

மேலும், மகாமு இப்ராஹீமின் ஒரு பகுதியில் தொழுமிடத்தை ஏற்படுத்திக் கொள்ளுமாறு மக்கள் அனைவருக்கும் இறைவன் கட்டளையிட்டுள்ளான். அனைவரும் மகாமு இப்ராஹீமில் தொழுவது சாத்தியமாக இருந்தால்தான் இறைவன் இவ்வாறு கட்டளையிட முடியும். குறிப்பிட்ட அந்தக் கல் இருக்கும் சிறிய இடம்தான் மகாமு இப்ராஹீம் என்றால் அங்கே குழுமும் லட்சோப லட்சம் மக்களில் சில ஆயிரம் பேருக்குக் கூட அந்த வாய்ப்புக் கிடைக்காது.

 

கஅபாவின் நான்கு திசைகளில் கிழக்குத் திசை மட்டுமே மகாமு இப்ராஹீம் என்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் செயல் விளக்கத்தை அடிப்படையாகக் கொண்டு விளங்கினால், அனைத்து ஹாஜிகளும் அந்த இடத்தில் தொழும் வாய்ப்பைப் பெற முடியும்.

 

அப்படியானால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் கஅபாவுடன் ஒட்டிக் கொண்டிருந்து பின்னர் இடம் மாற்றி வைக்கப்பட்ட கல், மகாமு இப்ராஹீம் என்று கூறப்படுவது ஏன் என்ற சந்தேகம் எழலாம்.

 

பொதுவாக ஒரு இடத்தை அடையாளம் காட்டுவதற்காக வைக்கப்படும் பொருளே அந்த இடத்தின் பெயரைப் பெற்று விடுவது வழக்கத்தில் இருக்கிறது. மகாமு இப்ராஹீம் என்ற இடத்திற்கு அடையாளமாக அக்கல் இருந்ததால் அதுவே மகாமு இப்ராஹீம் என்று சொல்லப்பட்டது.

 

"மகாமு இப்ராஹீமின் ஒரு பகுதியில் தொழுமிடத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்'' என்ற கட்டளை வந்தவுடன் அக்கல்லின் மீது ஏறி நின்று தொழாமல் அது இருந்த திசையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுதிருப்பதே இதற்குப் போதிய சான்றாகும்.

 

இதை ஓர் உதாரணத்தின் மூலம் புரிந்து கொள்ளலாம்.

 

மக்கா என்று எழுதி ஒரு பெயர்ப் பலகை நடப்பட்டால் அந்தப் பலகை தான் மக்கா என்று யாரும் புரிந்து கொள்ள மாட்டோம். அங்கிருந்து மக்கா நகரம் துவங்குகிறது என்றே புரிந்து கொள்வோம்.

 

அது போல் தான் "கஅபாவின் மற்ற மூன்று திசைகள் மகாமு இப்ராஹீம் அல்ல. அந்தக் கல் இருக்கும் கிழக்குத் திசைதான் மகாமு இப்ராஹீம்'' என்று புரிந்து கொள்ள வேண்டும்.

 

இந்தக் கருத்தில்தான் அந்தக் கல் மகாமு இப்ராஹீம் என்று சொல்லப்பட்டது. அந்தக் கல்லே மகாமு இப்ராஹீமாக இருந்தால் அதை யாரும் இடம் மாற்றி வைக்க முடியாது. மகாமு இப்ராஹீம் என்ற பகுதியை அடையாளம் காட்டுவதாக இருந்தால் மட்டுமே அக்கல்லை இடம் மாற்றி வைத்திருக்க முடியும்.

 

இந்த அடிப்படையில்தான் உமர் (ரலி) அவர்கள், கஅபாவுடன் ஒட்டியிருந்த கல்லை இப்போதுள்ள இடத்தில் மாற்றி வைத்தார்கள். நூல்: இப்னு ரஜபின் ஃபத்ஹுல் பாரி

 

இதன் பின்னரும், "மகாமு இப்ராஹீம் என்பது ஒரு இடத்தின் அடையாளம் அல்ல; ஒரு குறிப்பிட்ட கல் தான்'' என்று வாதிடுபவர்கள், "மகாமு இப்ராஹீமின் ஒரு பகுதியில் தொழுமிடத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்'' என்ற இறைக் கட்டளையைச் செயல்படுத்தும் விதமாக அந்தக் கல்லின் மீது ஏறி நின்று தொழுது காட்ட முடியுமா? என்பதைச் சிந்திக்க வேண்டும்.

 

மேலும், ஒருவர் நிற்கும் அளவுக்குள்ள இடத்தில் ஒரே ஒரு மனிதர் கூடத் தொழ முடியாது எனும்போது, மக்கள் அனைவரும் அங்கு எப்படித் தொழ முடியும் என்பதையும் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர்.

 

இன்னொரு விஷயத்தையும் இங்கு குறிப்பிட வேண்டும்.

 

தற்போது, "இப்ராஹீம் நபியின் பாதத்தின் அடிச்சுவடு'' என்ற பெயரில் அக்கல்லின் மீது ஒரு அச்சு உள்ளது. அது பிற்காலத்தில் ஏற்படுத்தப்பட்டதாகும்.

 

"அந்தக் கல் மீது இப்ராஹீம் நபியின் பாதம் பதிந்துள்ளது என்று கூறுவது கட்டுக்கதையாகும். இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் அது இருந்து பின்னர் அழிந்திருக்கலாம்'' என்று இப்னு ரஜப் தமது ஃபத்ஹுல் பாரியில் குறிப்பிடுகிறார்.

 

இப்னு ரஜப் அவர்களின் காலத்தில் (ஹிஜிரி 736-795) எந்தப் பாத அடையாளமும் அந்தக் கல்லில் இருக்கவில்லை என்பது இதிலிருந்து தெளிவாகின்றது.

 

எனவே தற்போது, அந்தக் கல்லில் காணப்படும் பாத அச்சு இப்னு ரஜப் காலத்திற்குப் பிறகு ஆட்சியாளர்களால் செயற்கையாக உருவாக்கப்பட்டது என்பது தெரிய வருகிறது.

 

 
free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2019 tamilquran.in. Designed by Ahadh Media.
You 're visitors No. 151658