117. தண்ணீர் கிடைக்கா விட்டால் தயம்மும்

 

தொழுகைக்கு முன் கை, கால், முகங்களைக் கழுவி தூய்மைப்படுத்துவது அவசியம் என 5:6 வசனம் கூறுகிறது.

 

உடலுறவு கொண்டிருந்தால் அப்போது கை, கால், முகங்களைக் கழுவுவது போதாது. மாறாகக் குளிக்க வேண்டும்.

 

இவ்வாறு தூய்மை செய்வதற்குத் தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? என்பதற்கு மாற்றுப் பரிகாரமே இவ்வசனத்தில் (5:6) கூறப்படுகிறது.

 

இரு உள்ளங்கைகளாலும் மண்ணைத் தொட்டு முகத்திலும், இரு கைகளிலும் தடவிக் கொண்டு தொழலாம். இவ்வாறு தடவிக் கொள்வது மேற்கண்ட இரண்டு தூய்மைகளுக்கும் பரிகாரமாகும்.

 

இங்கே சிலருக்கு முக்கியமான ஒரு சந்தேகம் ஏற்படலாம். தண்ணீர் தூய்மைப்படுத்தும் என்பது புரிகிறது. ஆனால் மண் ஏற்கனவே இருந்த தூய்மையையும் நீக்கிவிடும். எனவே "தண்ணீர் கிடைக்காவிட்டால் தூய்மையில்லாமல் தொழலாம்'' எனக் கூறியிருக்கலாமே? அல்லது "தொழுகையை விட்டு விடலாம்'' எனக் கூறியிருக்கலாமே என்பது தான் அந்தச் சந்தேகம்.

 

அல்லாஹ் கூறுவதால் இதில் ஏதோ ஒரு தத்துவம் உள்ளடங்கி இருக்கும். மறுமை நாளில் அல்லாஹ் அதை நமக்கு வெளிப்படுத்தலாம். அல்லது தூய மண்ணைத் தடவிக் கொள்வதால் ஏற்படும் பயன்கள் எதிர்காலத்தில் கண்டுபிடிக்கப்படலாம்.

 

ஆயினும் இதனால் ஏற்படும் ஒரு நன்மையை நாம் இப்போது கூற முடியும். தொடராகச் செய்து வர வேண்டிய காரியங்கள் ஒரு நாள் விடுபட்டு விட்டால் பிறகு தொடர்ந்து அக்காரியங்களை விட்டு விடுவது மனிதனின் இயல்பாக உள்ளது.

 

எனவே தண்ணீர் கிடைக்காவிட்டால் தொழ வேண்டாம் எனக் கூறினால் தொழுகையையே மனிதன் விட்டு விடுவான்.

 

தண்ணீர் கிடைக்காவிட்டால் தூய்மை செய்யாமல் தொழலாம் என்று கூறினால் ஒவ்வொரு தொழுகைக்கு முன்னாலும் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற உணர்வு மறந்து போய் விடும்.

 

மனிதனைப் படைத்த இறைவனுக்கு மனிதனின் மனநிலை நன்றாகத் தெரியும். எனவேதான் மிகப் பெரிய மனோதத்துவத்தின் அடிப்படையில் இந்த மாற்றுப் பரிகாரத்தை இறைவன் அமைத்துள்ளான்.

 

மண் தூய்மைப்படுத்துகிறதோ, இல்லையோ, தொழுகைக்கு முன் தூய்மைப்படுத்துவது அவசியம் என்பது எப்போதும் நினைவில் நிற்கும். தண்ணீரைத் தேட மனிதன் முயற்சிப்பான். கிடைக்காதபோது இந்த மாற்று வழியைப் பயன்படுத்திக் கொள்வான்.

 

எனவேதான் முஸ்லிம்கள் எவ்விதத் திட்டமிடுதலும் இல்லாமலேயே தொழுகைக்கு முன் இயல்பாகவே தங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்வதைக் காண்கிறோம்.

 

"அதைச் செய்யாவிட்டால் இதையாவது செய்'' எனக் கூறுவதால் அந்த நடைமுறை தொடர்ந்து அமுலில் இருக்கும். அந்த மாற்று வழியும் சர்வ சாதாரணமாகக் கிடைப்பதாகவும் இருக்க வேண்டும்.

 

மண் கிடைக்காத நிலை ஏற்படுவது மிக அபூர்வமாகும். இதை விடச் சிறந்த காரணமும் இதற்கு இருக்கலாம்.

 

மண்ணைப் பயன்படுத்துங்கள் என்பதை உடலில் மண்ணை அள்ளிப் பூசிக் கொள்ள வேண்டும் என்று புரிந்து கொள்ளக் கூடாது. மாறாக இரு உள்ளங்கைகளால் மண்ணைத் தொட்டு வாயால் ஊதி விட்டு வெறும் கையால் முகத்திலும், மணிக்கட்டு வரை இரு கைகளிலும் தடவிக் கொள்ள வேண்டும். முழங்கை வரை தடவத் தேவையில்லை. மேலும் முகத்தில் தடவுவதற்காக ஒரு தடவையும், கையில் தடவுவதற்காக ஒரு தடவையும் மண்ணைத் தொட வேண்டியதில்லை. ஒரு தடவை தொட்டு முகத்திலும் இரு கைகளின் மணிக்கட்டு வரையிலும் தடவிக் கொள்ளலாம்.

 

குளிப்பு கடமையாகிவிட்டால் முழு உடம்பிலும் மண்ணை அள்ளிப் பூசிக் கொள்ளக் கூடாது. இந்த நிலையிலும் மேற்கண்டவாறு செய்வதே போதுமாகும். இதுதான் நபிவழியாகும். (பார்க்க: புகாரி 326, 327, 329, 330, 335).

 

இதிலிருந்து மண்ணைத் தொடுவது ஓர் அடையாளமாகத்தான் ஆக்கப்பட்டுள்ளது என்பது உறுதியாகிறது.

 

 
free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2019 tamilquran.in. Designed by Ahadh Media.
You 're visitors No. 151641