345. இறைவன் உண்டு என்பதற்குச் சான்று

 

இவ்வசனங்களில் (30:37, 39:52) நாடியோருக்கு இறைவன் தாராளமாக உணவளிக்கிறான். நாடியோருக்கு அளவோடும் உணவு வழங்குகிறான் என்று கூறிவிட்டு "சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன'' என்று அல்லாஹ் கூறுகிறான்.

 

உலகில் பெரிய அறிஞர்கள், மாபெரும் விற்பன்னர்கள், திறமைசாலிகள், கடின உழைப்பாளிகள் போன்ற ஏராளமான மக்கள் வறுமையில் உழல்வதை ஒரு பக்கம் பார்க்கிறோம்.

 

திறமையில்லாதவர்கள், குறைந்த உழைப்புடையவர்கள், பல விஷயங்களைப் பற்றிய போதுமான அறிவு இல்லாதவர்கள், திட்டமிடத் தெரியாதவர்கள் எனப் பலரும் கோடிக்கணக்கான முதலீட்டில் வியாபாரம் மற்றும் தொழில் செய்யும் நிலையையும் இன்னொரு பக்கம் பார்க்கிறோம். திறமைமிக்கவர்கள் குறைந்த அளவிலேயே வெற்றி பெறுவதையும் பார்க்கிறோம்.

 

இங்கேதான் இறைவன் இருக்கிறான் என்பது நிரூபணம் ஆகிறது. மனிதனின் உழைப்பினாலும், திறமையினாலும்தான் பொருளாதாரம் கிடைக்கிறது என்று சொன்னால் திறமையில்லாத, படிப்பறிவு இல்லாத பலர் பல கோடிகளுக்கு அதிபதிகள் ஆனது எப்படி?

 

இறைவன் ஒருவன், தான் நினைத்தவாறு நடைமுறைப்படுத்தினால் மட்டுமே இது சாத்தியமாகும். இறைவன் இல்லை என்று சொன்னால் உலகத்தில் திறமைசாலிகள் வசதி படைத்தவர்களாகவும், திறமையற்றவர்கள் பரம ஏழைகளாகவும் தான் இருக்க முடியும்.

 

அவ்வாறு இல்லாத இந்தச் சூழ்நிலையே ஏகஇறைவன் இருக்கிறான் என்பதைச் சந்தேகமற நிரூபிக்கும் சான்றுகளாக இருக்கின்றன. இதைத்தான் சிந்திக்கும் மக்களுக்குச் சான்றுகள் இருப்பதாக இவ்வசனம் கூறுகிறது.

 

 








free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2019 tamilquran.in. Designed by Ahadh Media.
You 're visitors No. 293003