336. தீமையில் பங்கெடுக்காதிருக்க பொய் சொல்லுதல்

 

இவ்வசனத்தில் (37:89) "நான் நோயாளியாக இருக்கிறேன்'' என்று இப்ராஹீம் நபி சொன்னதாகக் கூறப்படுகிறது.

 

இது இறைவனுக்காக இப்ராஹீம் நபி சொன்ன பொய் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளார்கள். (பார்க்க: முஸ்லிம் 4726)

 

இப்ராஹீம் நபியவர்கள் நோயாளியாக இல்லாமல் இருந்தும், இறைவனுக்காக தன்னை நோயாளி என்று கூறியுள்ளார்கள் என்பது இந்த ஹதீஸிலிருந்து தெரிகின்றது.

 

ஒரு தீமையில் பங்கேற்காமல் இருப்பதற்காக இது போன்ற பொய்களை நாம் சொன்னால் அது குற்றமாகாது.

 

தீமைகளை வெறுக்கும் நன்மக்கள் சில நேரங்களில் அதைத் தவிர்க்க முடியாத நிலைக்கு ஆளாகிறார்கள்.

 

உதாரணமாக ஒரு பெண் கொள்கைப் பிடிப்பு உள்ளவளாக இருக்கிறாள். அவளது கணவன் தவறான கொள்கையுடைவனாக இருக்கிறான். வரதட்சணை வாங்கி நடத்தப்படும் திருமணத்துக்கு கட்டாயம் வர வேண்டும் என்று மனைவியை வற்புறுத்துகிறான். தீமை என்று எடுத்துச் சொன்னாலும் அவன் புரிந்து கொள்ள மாட்டான். அந்த நிகழ்ச்சியைப் புறக்கணித்தால் ஏற்படும் விளைவை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இது போன்ற நேரத்தில் எனக்கு உடல் நிலை சரியில்லை எனப் பொய் சொல்லி அந்தத் தீமையில் இருந்து அவள் விலகிக் கொண்டால் அது குற்றமாகாது.

 

ஒரு இளைஞன் தனது எல்லா தேவைகளுக்கும் தந்தையைச் சார்ந்து இருக்கிறான். குடும்பத்தில் நடக்கும் மார்க்க விரோதமான நிகழ்ச்சிகளில் பங்கெடுக்காவிட்டால் வீட்டை விட்டு அவர் வெளியேற்றி விடுவார். அப்படி வெளியேற்றினால் அவனுக்கு வேறு போக்கிடம் இல்லை என்று வைத்துக் கொள்வோம். அந்தத் தீமையில் கலந்து கொள்ளாமல் தவிர்ப்பதற்காக தந்தை நம்பக் கூடிய ஒரு பொய்யைச் சொல்லி தீமையைத் தவிர்த்தால் அது இப்ராஹீம் நபிவழியில் நடந்ததாக ஆகும். குற்றமாக ஆகாது.

 

பூஜை செய்யப்பட்ட ஒரு பொருளை மற்றவர்கள் நமக்குத் தருகிறார்கள். அதை நாங்கள் சாப்பிட மாட்டோம் என்று விளக்கி மறுக்க முடிந்தால் அப்படி மறுக்கலாம். அப்படி மறுக்க முடியாத நிலை ஏற்பட்டால், மறுத்தால் மதக் கலவரமாக ஆக்கிவிடுவார்கள் என்ற நிலை இருந்தால் ஏதாவது பொய் சொல்லி அதைத் தவிர்க்கலாம். அல்லது மன வெறுப்புடன் வாங்கி சாப்பிடாமல் தவிர்க்கலாம்.

 

மொத்தத்தில் மார்க்கம் தடுத்துள்ள காரியத்தைப் பொய் சொல்லித் தான் தவிர்க்க முடியும் என்ற எல்லா நேரங்களிலும் இப்ராஹீம் நபி சொன்னது போல் பொய் சொல்லி தீமையில் இருந்து விலகிக் கொள்ளலாம்.

 

மேலும் விபரத்திற்கு 162, 236 ஆகிய குறிப்புகளையும் காண்க!

 

 








free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2019 tamilquran.in. Designed by Ahadh Media.
You 're visitors No. 247742