319. வளர்ப்பு மகனின் மனைவி

 

இவ்வசனத்தில் குறிப்பிடப்படும் ஸைத் என்பார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன்னாள் வளர்ப்பு மகனாவார். உங்களால் வளர்க்கப்படுபவர்கள் உங்கள் பிள்ளைகளாக மாட்டார்கள் என்று இஸ்லாம் கட்டளையிட்ட பின் "ஸைத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மகன்" என்று கூறுவதை நபித்தோழர்கள் நிறுத்திக் கொண்டனர்.

 

இவருக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது மாமி மகள் ஸைனபை மணமுடித்துக் கொடுத்திருந்தனர். அவ்விருவருக்கும் ஒத்துப் போகவில்லை என்ற சூழ்நிலையில் அவரை ஸைத் விவாகரத்துச் செய்தார். அதன் பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஸைனபை அல்லாஹ்வே மணமுடித்துத் தந்ததாக இவ்வசனம் (33:37) கூறுகிறது.

 

இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. வளர்ப்பு மகனை, மகன் எனக் கருதி மகனுக்குரிய எல்லா உரிமைகளும் வளர்ப்பு மகனுக்கு உண்டு என அன்றைய சமுதாயம் நம்பி வந்தது.

 

வளர்க்கப்பட்டவர், தனது மனைவியை விவாகரத்துச் செய்த பின் வளர்த்தவர் அப்பெண்ணை மணந்து கொள்ளலாம்; அது, மருமகளை விவாகம் செய்ததாக ஆகாது என்ற சட்டத்தை உலகிற்குச் சொல்ல வேண்டும் என்பது இத்திருமணத்திற்குரிய காரணம்.

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸைனப் மீது ஆசைப்பட்டு, ஸைதை விவாகரத்து செய்யச் சொன்னதாக இஸ்லாத்தின் எதிரிகள் சிலர் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

 

ஸைனப் மீது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஆசை இருந்தால் கன்னிப் பருவத்திலேயே ஸைனபை அவர்கள் திருமணம் செய்திருக்க முடியும். ஏனெனில் அவர்கள் தான் அப்பெண்ணிற்குப் பொறுப்பாளராகவும் இருந்தார்கள். ஆனால் அவர்கள் தான் ஸைதுக்கே மணமுடித்துத் தருகிறார்கள்.

 

எனவே இறைவனின் நாட்டப்படியே இத்திருமணம் நடந்தது. இளமையோடு இருக்கும்போது அவரை மணந்து கொள்ளாமல், பல வருடங்கள் ஸைதுடன் வாழ்க்கை நடத்திய பிறகு அவரை மணந்து கொண்டதற்கு உடல் ரீதியான காரணத்தைக் கூறுவது முற்றிலும் தவறாகும்.

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல திருமணங்கள் செய்தது ஏன் என்பதை அறிய 378வது குறிப்பைக் காண்க!

 

வளர்ப்பு மகன் குறித்து மேலும் விளக்கம் பெற 317வது குறிப்பைப் பார்க்கவும்.

 

 








free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2019 tamilquran.in. Designed by Ahadh Media.
You 're visitors No. 292911