241. ஓடிக் கொண்டேயிருக்கும் சூரியன்

 

இவ்வசனங்களில் (13:2, 31:29, 35:13, 36:38 39:5) சூரியன் குறிப்பிட்ட காலம் வரை ஓடிக்கொண்டே இருக்கும் என்றும், ஏனைய எல்லாக் கோள்களும் இவ்வாறே ஓடுவதாகவும் கூறப்படுகிறது. 21:33, 36:40 வசனங்களிலும் இவ்வாறு கூறப்படுகிறது.

 

பூமி தட்டையாக இருக்கிறது என்று மனிதன் ஒரு காலத்தில் நம்பினான்.

 

பிறகு உருண்டையாக இருக்கிறது என்றான். உருண்டையாக இருக்கின்ற பூமியே இந்தக் குடும்பத்தின் மையப்பகுதி என்று கூறி, சூரியன் பூமியைச் சுற்றி வருகிறது என்றான்.

 

பிறகு சூரியனை பூமி சுற்றி வருகிறது, சூரியன் அப்படியே இருக்கிறது என்றான்.

 

இன்று பூமி தன்னைத் தானே சுற்றிக் கொள்கிறது; சூரியனையும் சுற்றுகிறது; பூமி தன்னைத் தானே சுற்றுவதற்கு ஒரு நாள் என்றும், சூரியனைச் சுற்றி முடிக்கின்ற காலம் ஒரு வருடம் என்றும் மனிதன் அறிந்து கொண்டான்.

 

பூமி இவ்வாறு சூரியனைச் சுற்றும்போது சூரியன் என்ன செய்கிறது என்றால் அது தன்னைத் தானே சுற்றிக் கொண்டு இந்தப் பூமியையும், தன் குடும்பத்தைச் சேர்ந்த மற்ற கோள்களையும் இழுத்துக் கொண்டு மணிக்கு ஒன்பது லட்சம் கி.மீ. வேகத்தில் ஓடிக்கொண்டே இருக்கின்றது என்று இன்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

 

சூரியன் சுழன்று கொண்டே இருக்கின்றது என்பது மட்டுமல்ல; ஓடிக் கொண்டும் இருக்கின்றது. அதுவும் ஒரு குறிப்பிட்ட காலம் வரை ஓடிக் கொண்டே இருக்கும் என்றும் சொல்ல வேண்டுமானால் நிச்சயம் அது இறைவனின் கூற்றாகத்தான் இருக்க முடியும்.

 

இந்த உண்மையை 14 நூற்றாண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த, எழுதப்படிக்கத் தெரியாத முஹம்மது நபியால் ஒருக்காலும் சொல்லி இருக்கவே முடியாது.

 

இங்கே பயன்படுத்தி இருக்கின்ற வார்த்தைப் பிரயோகத்தை நேர்மையான பார்வையுடன் ஒருவர் கவனித்தால் நிச்சயமாக இது மனிதனது வார்த்தையல்ல; கடவுளின் வார்த்தையே என்பதைத் தெளிவாக அறிந்து கொள்வார். திருக்குர்ஆன் இறைவேதம் தான் என்பதற்குரிய சான்றுகளில் இதுவும் ஒன்றாக அமைந்துள்ளது.

 

 
free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2019 tamilquran.in. Designed by Ahadh Media.
You 're visitors No. 159616