451. யஃஜுஜ், மஃஜுஜ் என்றால் யார்?

 

18:94, 21:96 ஆகிய வசனங்களில் யஃஜூஜ் மஃஜூஜ் என்ற கூட்டத்தினர் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

 

உலகம் அழியும் காலம் நெருங்கும்போது வெளிப்படும் கூட்டத்தினர் தான் யஃஜூஜ் மஃஜூஜ் ஆவர். உலகம் அழிவதற்கு முன்னர் நடக்கவுள்ளதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்த பத்து அடையாளங்களில் யஃஜுஜ், மஃஜுஜ் எனும் கூட்டத்தினரின் வருகையும் ஒன்றாகும். இது குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாக விளக்கியுள்ளனர்.

 

இந்தக் கூட்டத்தினர் நீண்ட காலமாகவே அவர்கள் இருந்து வருகின்றனர். மலைகளால் சூழப்பட்ட பகுதியில் வசிக்கின்றனர். அம்மலைகளுக்கிடையே இரும்புப் பாளங்களை அடுக்கி செம்பு உருக்கி ஊற்றப்பட்டுள்ளது. அதைத் தாண்டி அவர்களால் வரவும் முடியாது. அதைக் குடைந்து வெளியே வரவும் முடியாது. யுகமுடிவு நாளின் நெருக்கத்தில் அந்தத் தடை உடைக்கப்பட்டு அவர்கள் வெளிப்பட்டு வருவார்கள். ஒருவருடன் ஒருவர் முட்டி மோதிக்கொள்ளும் அளவுக்கு அவர்களின் எண்ணிக்கை பெருமளவில் இருக்கும் என்று 18:94-96 வரையிலான வசனங்கள் கூறுகின்றன.

 

இறுதியில் யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினர் திறந்து விடப்படுவார்கள். உடனே அவர்கள் (வெள்ளம் போல் ஒவ்வொரு மேட்டிலிருந்தும்) விரைந்து வருவார்கள் என்று 21:96 வசனம் கூறுகிறது.

 

யுகமுடிவு நாளின் நெருக்கத்தில் அவர்களுக்கு வழி திறக்கப்படும் என்பதை இந்த வசனம் அறிவிக்கின்றது. இது குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மேலும் விளக்கியுள்ளனர்.

 

....அப்போது அல்லாஹ் யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தினரை அனுப்புவான். அவர்கள் ஒவ்வொரு மேட்டிலிருந்தும் விரைந்து வருவார்கள். அவர்களில் முதலில் வருபவர்கள் தபரிய்யா என்ற ஏரியின் தண்ணீரைக் குடிப்பார்கள். பின்னால் வருபவர்களுக்குத் தண்ணீர் இருக்காது. அந்த நேரத்தில் ஈஸா நபியும், அவர்களின் தோழர்களும் இக்கூட்டத்தினால் முற்றுகையிடப்படுவார்கள். அன்று ஒரு மாட்டின் தலை இன்றைய நூறு தங்கக் காசுகளுக்குச் சமமாகத் தோன்றும் அளவுக்கு முற்றுகை நீடிக்கும். ஈஸா நபி அல்லாஹ்விடம் இறைஞ்சுவார்கள். ஒரேயடியாக யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தினர் செத்து விழுவார்கள். பின்னர் ஈஸா நபியும், அவர்களின் தோழர்களும் தூர் மலையிலிருந்து கீழே இறங்குவார்கள். ஒரு ஜான் இடம் கூட மிச்சமில்லாமல் அவர்களின் உடல் பூமி முழுவதும் சிதறி நாற்றமெடுக்கும். அப்போது ஈஸா நபியவர்கள் மீண்டும் அல்லாஹ்விடம் இறைஞ்சுவார்கள்.

 

அப்போது அல்லாஹ் ஒட்டகத்தின் கழுத்தைப் போன்ற பறவைகளை அனுப்புவான். அவை உடல்களைத் தூக்கிச் சென்று வீசி எறியும். பின்னர் அல்லாஹ் மழையைப் பொழிவிப்பான். கூடாரமோ, மண் வீடுகளோ எதையும் விட்டு வைக்காமல் அவற்றின் மேல் மழை பொழியும். பூமியைக் கண்ணாடி போல் சுத்தமாக்கும்.

 

'பூமியே உனது பழங்களை முளைக்கச் செய்! உனது அபிவிருத்தியைத் திரும்பக் கொடு' என்று (இறைவனால்) பூமிக்குக் கட்டளை பிறப்பிக்கப்படும். அந்நாளில் ஒரு மாதுளையை ஒரு பெரும் கூட்டத்தினர் சாப்பிடுவார்கள். அதன் தோல்களில் ஒரு கூட்டமே நிழல் பெறும். பாலில் பரகத் செய்யப்படும். ஒரு ஒட்டகத்தில் கறக்கும் பால் ஒரு பெரும் கூட்டத்துக்குப் போதுமானதாக இருக்கும். ஒரு மாட்டில் கறக்கப்படும் பால் ஒரு கோத்திரத்துக்குப் போதுமானதாக ஆகும். ஒரு ஆட்டில் கறக்கப்படும் பால் ஒரு குடும்பத்துக்குப் போதுமானதாக அமையும். இவர்கள் இவ்வாறு இருக்கும்போது தூய்மையான காற்றை அல்லாஹ் அனுப்புவான். அனைத்து முஸ்லிம்களின் உயிர்களையும் அது கைப்பற்றும். மிகவும் கெட்டவர்கள் மட்டுமே மிஞ்சுவார்கள். அவர்கள் வாழும்போதுதான் உலகம் அழியும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : முஸ்லிம் 5629

 

அவர்கள் எந்த நாட்டில் இவ்வாறு அடைக்கப்பட்டுள்ளனர் என்பதை அல்லாஹ்வும், அவனது தூதரும் நமக்குக் கூறவில்லை. யுகமுடிவு நாளின் நெருக்கத்தில் அவர்கள் வெளிப்பட வேண்டுமானால் மற்ற மனிதர்கள் அவர்களை அறிந்து கொள்ளாமலிருப்பது அவசியம். அதற்காக இறைவன் மறைத்து வைத்திருக்கலாம்.

 

நவீன கருவிகளையும், ஆகாய விமானங்களையும், தொலைநோக்கிக் கருவிகளையும் கண்டுபிடித்துள்ள காலகட்டத்தில் அப்படி ஒரு கூட்டம் அடைக்கப்பட்டிருந்தால் உலகத்திற்குத் தெரியாமல் இருக்குமா? செம்பு உருக்கி ஊற்றப்பட்டால் அதன் பளபளப்பை வைத்து இனம் காணலாமே என்று சிலர் கேட்கின்றனர். இந்தக் கேள்வி தவறானதாகும்.

 

மனிதனிடம் இத்தகைய நவீன சாதனங்கள் இருந்தாலும் அவை முழுஅளவுக்கு இன்னமும் பயன்படுத்தப்படவில்லை. மிக உயரத்திலிருந்து கொண்டு பூமியைப் படம் பிடித்திருக்கிறார்கள். பார்த்திருக்கிறார்களே தவிர பூமியின் ஒவ்வொரு அங்குலத்தையும் ஏன் ஒவ்வொரு ஏக்கரையும் மனிதன் இந்தக் கருவிகள் மூலம் இதுவரை ஆராயவில்லை. பூமியிலேயே இருக்கும் சில பகுதிகளை இப்போதும் கூட கண்டுபிடித்ததாகச் செய்திகள் வருவதிலிருந்து இதை உணரலாம்.

 

இந்த மண்ணுலகில் மனிதனின் கால்படாத நிலப்பரப்புகள் ஏராளம் உள்ளன. ஆகாயத்தில் வட்டமடித்து சக்தி வாய்ந்த தொலைநோக்கிக் கருவிகள் மூலம் ஒவ்வொரு ஏக்கராக ஆராய முற்பட்டாலும் மரங்கள், காடுகள் போன்ற தடைகள் இல்லாவிட்டால் தான் பூமியில் உள்ளவர்களைப் பார்க்க முடியும். தடைகள் இருந்தால் அந்தக் காடுகளைத்தான் பார்க்க முடியும்.

 

காடுகளும், குகைகளும், தொலைநோக்கிக் கருவிகள் மூலம் பார்ப்பதைத் தடுத்து விடுகின்றன.

 

மலைகளால் சூழப்பட்ட காடுகளிலோ, அல்லது குகைகளிலோ யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினர் இருந்தால் எந்தச் சாதனங்கள் மூலமும் அவர்கள் இருப்பதை அறிந்து கொள்ள முடியாது.

 

செம்பு எனும் உலோகம் விரைவில் பாசி படிந்து பச்சை நிறத்துக்கு மாறி விடுவதால் அதன் பளபளப்பை வைத்தும் கண்டுபிடிக்க முடியாது. தொலைவிலிருந்து பார்க்கும்போதும், அருகிலிருந்து பார்க்கும்போதும் கூட மலைகளில் புல் வளர்ந்திருப்பது போன்ற தோற்றமே தென்படும்.

 

எவரது கண்களுக்கும் புலப்படாமல் இந்தக் கூட்டத்தினர் இந்தப் பூமியின் ஒரு பகுதியில் வாழ்ந்து வருவது சந்தேகப்பட வேண்டியதல்ல.

 

இனி வருங்காலத்தில் மனிதன் முயன்று அவர்களை நெருங்கலாம். அந்த நேரம் அவர்கள் வெளியே வர வேண்டிய காலமாக யுகமுடிவு நாளின் நெருக்கமாகத்தான் இருக்க முடியும்.

 

யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தினரின் எண்ணிக்கை மிகமிக அதிகமாக இருக்கும் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன்மொழியிலிருந்து அறிய முடிகின்றது.

 

உங்களில் ஒருவர் என்றால் யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தினர் ஆயிரம் என்ற கணக்கில் நரகவாசிகளின் எண்ணிக்கை இருக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : புகாரி 3348.

 

 








free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2019 tamilquran.in. Designed by Ahadh Media.
You 're visitors No. 293071