32. பள்ளிவாசல்களை விட்டுத் தடுக்கக் கூடாது

 

இவ்வசனங்கள் (2:114, 96:8-18) பள்ளிவாசல்களுக்கு உரிமையாளன் அல்லாஹ் மட்டுமே; அதில் அல்லாஹ்வை மட்டும் வழிபடும் எவரையும் தடுக்கக் கூடாது என்று கூறுகின்றன.

 

உலகில் உள்ள பல்வேறு மதங்களில் தீண்டாமையின் பீடங்களாக வழிபாட்டுத் தலங்களே அமைந்துள்ளன.

 

குளம், கிணறு, சாலைகள் மற்றும் அரசு நிறுவனங்களைப் பயன்படுத்துதல் ஆகியவற்றில் தீண்டாமை ஓரளவு ஒழிக்கப்பட்டாலும் வழிபாட்டுத் தலங்களில் மட்டும் நூறு சதவிகிதம் தீண்டாமை கடைப்பிடிக்கப்படுகின்றது. குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே வழிபாட்டுத் தலங்களின் மூலஸ்தானம் வரை சென்று வழிபட முடியும் என்ற நிலையை எவராலும் மாற்ற முடியவில்லை என்பதைக் காண்கிறோம்.

 

ஆனால் இந்த நிலை முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலமான பள்ளிவாசல்களில் மட்டும் இல்லை. ஏனெனில், பள்ளிவாசல்களின் உரிமையாளன் அல்லாஹ் என்பது இஸ்லாத்தின் நம்பிக்கை.

 

அல்லாஹ்வுக்குச் சொந்தமான இல்லத்தில் அவனைத் துதிப்பதற்கு யார் வந்தாலும் தடுக்கக் கூடாது. அவ்வாறு தடுப்பது பெரும் பாவம் என்று இவ்வசனம் (2:114) பிரகடனம் செய்கிறது. இது போன்ற அறிவுரைகளின் காரணமாகவே, இஸ்லாத்தில் தீண்டாமையைக் காண முடியவில்லை.

 

எந்தக் காரணத்துக்காகவும், முஸ்லிம்களில் எவரையும் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது என்று தடுப்பது மிகப்பெரும் பாவமாகும்.

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் ஆலயமான கஅபாவில் தொழுதபோது அவர்களை எதிரிகள் தொழவிடாமல் தடுத்தனர்.

 

இதைப் பற்றி 96:9-18 வசனங்களில் அல்லாஹ் கடுமையான எச்சரிக்கை விடுக்கிறான்.

 

"அவர்கள் தமது சபையைக் கூட்டட்டும். நான் என் சபையைக் கூட்டுகிறேன்'' என்று மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் கூறுவது, அல்லாஹ்வை அஞ்சும் மக்களுக்குக் கடுமையான எச்சரிக்கையாகும்.

 

இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கஅபா ஆலயத்தில் தொழுதபோது இணைகற்பித்த அன்றைய மக்கள் அவர்களின் கழுத்தில் ஒட்டகக் குடலைப் போட்டுக் கேலி செய்தனர். இறைவா இவர்களை நீ பார்த்துக் கொள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் முறையிட்டனர். அவர்கள் அனைவரையும் வேரற்ற மரங்களாக இறைவன் வீழ்த்தினான். (பார்க்க : புகாரி 240, 520, 2934, 3185, 3854, 3960)

 

எனவே அல்லாஹ்வின் பள்ளிவாசலில் அல்லாஹ்வைத் தொழவரும் மக்களைத் தடுப்பது மிகவும் கடுமையான குற்றம் என்பதை முஸ்லிம்கள் உணர வேண்டும். இது அல்லாஹ்வுக்கு எதிராகச் செய்யப்படும் போர்ப்பிரகடனம் என்பதைப் புரிந்து இது போன்ற செயல்களில் இருந்து விலகிக் கொள்ள வேண்டும்.

 

 








free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2019 tamilquran.in. Designed by Ahadh Media.
You 're visitors No. 210236