363. பெண்களைத் தொட்டால் உளூ நீங்குமா?

 

இவ்வசனத்தில் (5:6) "பெண்களைத் தீண்டி, தண்ணீர் கிடைக்காவிட்டால் தயம்மும் செய்ய வேண்டும்'' என்று கூறப்பட்டுள்ளது.

 

பெண்களைத் தீண்டுதல் என்ற சொல் தொடுதல் எனவும், தாம்பத்தியம் எனவும் இரு பொருள் தரும் சொல்லாகும். எனவே இந்த இடத்தில் எவ்வாறு பொருள் கொள்வது என்பதில் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு உள்ளது.

 

தொடுதல் என்று பொருள் கொள்ளும் அறிஞர்கள் "பெண்களை ஆண்கள் தொட்டாலும், ஆண்களைப் பெண்கள் தொட்டாலும் உளூ நீங்கி விடும். மீண்டும் உளூச் செய்ய வேண்டும்'' என்று சட்டம் வகுத்துள்ளனர். இது தவறாகும்.

 

இவ்வசனத்தில் தீண்டுதல் என்பது தாம்பத்தியம் என்ற பொருளில் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உளூச் செய்த நிலையில் தம் மனைவியைத் தொட்டுள்ளனர். அதற்காக மீண்டும் உளூச் செய்யவில்லை.

 

"நபிகள் நாயகம் (ஸல்) தொழும்போது நான் குறுக்கே படுத்து உறங்குவேன். அவர்கள் ஸஜ்தாச் செய்யும்போது என் காலைத் தமது விரலால் தொடுவார்கள். உடனே என் காலை மடக்கிக் கொள்வேன். அவர்கள் ஸஜ்தாச் செய்ததும் கால்களை நீட்டிக் கொள்வேன். அன்று வீடுகளில் விளக்குகள் இருக்கவில்லை'' என்று ஆயிஷா (ரலி) அறிவிக்கின்றார்கள். நூல்: புகாரி 513, 519, 1209

 

பெண்களைத் தொட்டால் உளூ நீங்கும் என்றால் தொழுது கொண்டிருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது மனைவியின் காலைத் தொட்டிருக்க மாட்டார்கள்.

 

ஒரு இரவு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் காணவில்லை. நான் துழாவிப் பார்த்தபோது ஸஜ்தாவில் இருந்த அவர்களின் பாதங்கள் மீது என் கைகள் பட்டன எனவும் ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள். நூல் : முஸ்லிம் 839

 

பெண்களைத் தொடுதல் என்பது இவ்வசனத்தின் பொருளாக இருந்தால் இவ்வாறு நடந்ததும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகையை முறித்து விட்டு, மீண்டும் உளூச் செய்து தொழுதிருப்பார்கள்.

 

எனவே இவ்வசனத்தில் தீண்டுதல் என்பது தாம்பத்தியம் என்ற பொருளில்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று இந்த ஹதீஸ்களை ஆதாரமாகக் கொண்டு முடிவு செய்வதே சரியானதாகும்.

 

 








free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2019 tamilquran.in. Designed by Ahadh Media.
You 're visitors No. 292896