362. மிஃராஜ் பற்றி குர்ஆன்

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு இரவில் வின்னுலகம் சென்று திரும்பினார்கள். இது மிஃராஜ் பயணம் என்று சொல்லப்படுகிறது. இது குறித்து ஏராளமான ஹதீஸ்கள் உள்ளன.

 

ஆனால் 17:1 வசனத்தில் மக்காவில் இருந்து ஜெருசலம் வரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு இரவில் அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. அங்கிருந்து வின்னுலகம் அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படவில்லை. எனவே மிஃராஜ் பயணத்தை நம்புவது குர்ஆனுக்கு எதிரானது என்று சிலர் வாதிடுகின்றனர்.

 

இது தவறான கருத்து என்பதை 263வது குறிப்பில் விளக்கியுள்ளோம்.

 

53:5 முதல் 53:18 வரை உள்ள வசனங்கள் மிஃராஜ் பயணத்தை மெய்ப்பிக்கும் வகையில் அமைந்துள்ளன.

 

ஜிப்ரீல் எனும் வானவரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முதன் முதலில் சந்தித்ததை 53:5 முதல் 53: 12 வரையுள்ள வசனங்கள் கூறுகின்றன. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முதல் தூதுச் செய்தியை ஜிப்ரீல் எனும் வானவர் கொண்டு வந்தபோது அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சந்தித்தது பற்றி இவ்வசனங்கள் கூறுகின்றன.

 

ஜிப்ரீலை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மற்றொரு தடவையும் சந்தித்தார்கள் என்றும், அந்தச் சந்திப்பு சொர்க்கத்தில் உள்ள சித்ரதுல் முன்தஹா எனும் இடத்தில் நடந்தது என்றும் 53:13 முதல் 53:18 வரை உள்ள வசனங்கள் கூறுகின்றன.

 

சித்ரதுல் முன்தஹா என்ற இடத்தில் ஜிப்ரீலை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சந்தித்தார்கள் என்றால் வின்னுலகத்துக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டால் தான் அது சாத்தியமாகும். ஏனெனில் சித்ரதுல் முன்தஹா சொர்க்கத்தின் அருகில் உள்ளதாக இவ்வசனம் கூறுகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வின்னுலகம் அழைத்துச் செல்லப்பட்டால் தான் சித்ரதுல் முன்தஹாவுக்கு அருகில் ஜிப்ரீல் என்ற வானவரை அவர்கள் சந்தித்து இருக்க முடியும்.

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சித்ரதுல் முன்தஹா வரை வின்னுலகம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்கள் என்று இவ்வசனங்கள் கூறுவதற்கு விளக்கமாகத் தான் மிஃராஜ் பற்றிய ஹதீஸ்கள் அமைந்துள்ளன. முரணாக அமையவில்லை.

 

"மிஃராஜ் பற்றி குர்ஆனில் கூறப்படவில்லை'' என்று காரணம் கூறி மிஃராஜை நம்ப மறுப்பவர்களுக்கு இவ்வசனங்கள் தெளிவான மறுப்பாக அமைந்துள்ளன.

 

மேலும் இது பற்றி மேலும் விபரம் அறிய 263, 267, 315 ஆகிய குறிப்புகளைக் காண்க!

 

 
free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2019 tamilquran.in. Designed by Ahadh Media.
You 're visitors No. 159777