275. முஹம்மது நபியையும் நம்ப வேண்டும்

 

இவ்வசனத்தில் (63:1) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ்வின் தூதர் என்று நயவஞ்சகர்கள் கூறியதையும், அதில் அவர்கள் பொய் சொல்வதையும் அல்லாஹ் கூறுகிறான்.

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இஸ்லாத்தை ஏற்பவர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து "நீங்கள் அல்லாஹ்வின் தூதர் தான்'' என்று உறுதி கூறி வந்தனர். அந்த அடிப்படையில் நயவஞ்சகர்களும் மற்றவர்கள் கூறுவது போல் "நீங்கள் அல்லாஹ்வின் தூதரே'' என்று கூறினர்.

 

இவ்வாறு கூறியது அவர்களின் உள்ளத்திலிருந்து வராததால் அவர்கள் பொய்யர்கள் என்று அல்லாஹ் சொல்கின்றான்.

 

சில அறிவீனர்கள் இதைப் புரிந்து கொள்ளாமல், "லாயிலாஹ இல்லல்லாஹ் என்று மட்டும் தான் சொல்ல வேண்டும்; முஹம்மதுர் ரசூலுல்லாஹ் (முஹம்மது அல்லாஹ்வின் தூதர்) என்று சொல்வது நயவஞ்சகர்களின் பண்பு'' என்று கூறுகின்றனர்.

 

இது முற்றிலும் தவறாகும்.

 

ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ்வின் தூதர் என்று நயவஞ்சகர்கள் கூறிய சொல்லை தவறு என்று இறைவன் அறிவிக்கவில்லை; நயவஞ்சகர்கள் தமது உள்ளத்தில் இல்லாத ஒன்றை வாயால் கூறியதைத்தான் அல்லாஹ் கண்டிக்கின்றான்.

 

நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை நம்பினோம் என்று வாயால் கூறினார்கள். ஆனால் உண்மையில் அல்லாஹ்வை நம்பவில்லை. அதே போல நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விஷயத்திலும் பொய்யையே சொல்கிறார்கள் என்பதற்காக அவர்களை இவ்வசனத்தில் கண்டிக்கிறான்.

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ்வின் தூதர் என்று உறுதிமொழி கொடுப்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் வழக்கத்தில் இருந்தது என்றும், அந்த வழக்கத்தை அல்லாஹ் ஏற்றுக் கொண்டிருக்கிறான் என்றும் அந்த உறுதிமொழி உளப்பூர்வமாக இருக்க வேண்டும் என்றும் இவ்வசனம் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.

 

 
free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2019 tamilquran.in. Designed by Ahadh Media.
You 're visitors No. 151647