152. திருக்குர்ஆன் எழுத்து வடிவில் அருளப்படவில்லை.

 

152. திருக்குர்ஆன் எழுத்து வடிவில் அருளப்படவில்லை.

 

முஸ்லிம்களில் சிலர், திருக்குர்ஆன் எழுத்து வடிவில் அருளப்பட்டதாகக் கூறுகின்றனர். இவ்வசனங்கள் (2:97, 4:153,. 6:7, 7:157, 7:158, 20:114, 25:5, 26: 195, 29:48, 75:16, 75:18, 87:6) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எழுத்து வடிவில் திருக்குர்ஆன் அருளப்பட்டது என்று கூறுவோருக்கு மறுப்பாக அமைந்துள்ளன.

 

"எழுத்து வடிவில் தந்திருந்தாலும் இவர்கள் ஏற்க மாட்டார்கள்" என்று 6:7வசனத்தில் கூறப்படுவதில் எழுத்து வடிவில் அருளப்படவில்லை என்ற கருத்து அடங்கியுள்ளதை அறியலாம்.

 

வானத்திலிருந்து அவர்களுக்கு வேதத்தை நீர் இறக்க வேண்டும் என்று வேதமுடையோர் உம்மிடம் கேட்கின்றனர் என்று 4:153 வசனம் கூறுகிறது. எழுத்து வடிவமாக ஒரு நூல் வானிலிருந்து இறங்க வேண்டும் என அன்றைய மக்கள் கேட்டதிலிருந்து எழுத்து வடிவில் அருளப்படவில்லை என்பதை ஐயத்திற்கிடமின்றி அறியலாம்.

 

இவ்வேதம் எழுத்து வடிவில் அருளப்படவில்லை; மாறாக ஜிப்ரீல் என்ற வானவர் மூலம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உள்ளத்தில் பதிவு செய்யப்பட்டது என்று 2:97, 26:194 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.

 

உமது நாவை இதற்காக அவசரப்பட்டு அசைக்காதீர். அதைத் திரட்டுவதும், ஓதச் செய்வதும் நம்மைச் சேர்ந்தது. எனவே நாம் அதை ஓதும்போது அந்த ஓதுதலைப் பின்பற்றுவீராக! பின்னர் அதைத் தெளிவுபடுத்துவது நம்மைச் சேர்ந்தது என்று 75:16-19 வசனங்கள் கூறுகின்றன.

 

ஜிப்ரீல் (அலை) அவர்கள், குர்ஆனை எழுத்து வடிவில் கொடுத்திருந்தால் அவசரம் அவசரமாக நபிகள் நாயகம் (ஸல்) மனனம் செய்ய முயற்சிக்க வேண்டியதில்லை. ஜிப்ரீல் (அலை) போன பிறகு அவர் எழுத்து வடிவில் தந்து விட்டுப் போனதை வாசிக்கச் செய்து மனதில் பதிய வைத்துக் கொள்ள முடியும்.

 

எழுத்து வடிவில் இல்லாததால் தான் மறந்து விடுவோமோ என்று பயந்து தமது நாவை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வேகவேகமாக அசைக்கிறார்கள். அவ்வாறு அசைக்கத் தேவையில்லை. உள்ளத்தில் பதிவு செய்ய வைப்பது என்னுடைய வேலை என்று இறைவன் பொறுப்பேற்றுக் கொண்டதை இவ்வசனம் சொல்கிறது.

 

எழுத்து வடிவில் திருக்குர்ஆன் அருளப்படவே இல்லை என்பதற்கு இதுவும் மிகத் தெளிவான சான்று.

 

உமக்கு நாம் ஓதிக்காட்டுவோம். நீர் மறக்க மாட்டீர். அல்லாஹ் நாடியதைத் தவிர. அவன் பகிரங்கமானதையும், மறைவானதையும் அறிகிறான் என்று 87:6,7 வசனங்கள் கூறுகின்றன.

 

நாம் உமக்கு ஓதிக் காட்டுவோம் என்ற வாசகம் திருக்குர்ஆன் எழுத்து வடிவில் அருளப்படவில்லை என்பதைக் கூறுகிறது. அதை நீர் மறக்க மாட்டீர் என்பது மேலும் இதை வலுப்படுத்துகிறது. மறக்க முடியாத நினைவாற்றல் வழங்கப்பட்டிருப்பதால் எழுத்து வடிவம் அவர்களுக்குத் தேவையில்லை என்பதும் இதனுள் அடங்கியுள்ளது.

 

எனவே திருக்குர்ஆன் எழுத்து வடிவில் அருளப்படவே இல்லை என்பது சந்தேகமற நிரூபணமாகிறது.

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எழுதவும், படிக்கவும் தெரியாது என்று திருக்குர்ஆன் பல வசனங்களில் தெளிவுபடுத்துகின்றது.

 

இது குறித்து அறிய 312வது குறிப்பைக் காண்க!

 

 








free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2019 tamilquran.in. Designed by Ahadh Media.
You 're visitors No. 292869