220. வேதத்தை மறக்காத நபிகள் நாயகம்

 

இவ்வசனத்தில் (87:6) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வேதத்தை மறக்க மாட்டார்கள் என்று கூறப்படுகிறது.

 

பொதுவாக மனிதர்கள் பல விஷயங்களை மறப்பவர்களாக உள்ளனர். இத்தகைய மறதியிலிருந்து நபிமார்களும் விதிவிலக்குப் பெற்றவர்கள் அல்லர்.

 

ஆயினும் இறைவன் புறத்திலிருந்து வருகின்ற தூதுச் செய்திகளை நபிமார்கள் மறந்து விட்டால் மக்களுக்கு தூதுச்செய்தியில் ஒரு பகுதி கிடைக்காமல் போய்விடும். எனவேதான் இவ்வசனத்தில் "நாம் ஓதிக்காட்டுவோம்; நீர் மறக்க மாட்டீர்'' எனக் கூறி வேதத்தைப் பொறுத்த வரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மறதி ஏற்படாது எனக் கூறப்படுகிறது.

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமக்கு அருளப்பட்ட திருக்குர்ஆன் வசனங்களில் எந்த ஒன்றையும் மறதியின் காரணமாக நமக்குக் கூறாமல் விட்டிருப்பார்களோ என்று கருதக் கூடாது என்பதற்கு இது ஆதாரமாக அமைந்துள்ளது.

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ள ஹதீஸ்கள் கட்டுக்கதை என்று நாம் கூறுகிறோம். இதற்கு ஏராளமான சான்றுகளை 285, 357, 395, 468, 495, 499 வது குறிப்புகளில் தெளிவுபடுத்தியுள்ளோம்.

 

நபிகள் நாயகத்துக்குச் சூனியம் வைக்கப்பட்டு அதன் காரணமாக அவர்கள் மனநோய்க்கு ஆளானார்கள் என்று நம்பினால் அது குர்ஆனில் சந்தேகத்தை ஏற்படுத்தும்; மனநோய் காரணமாக குர்ஆன் அல்லாததை குர்ஆன் என்று சொல்லி இருப்பார்களோ என்ற சந்தேகத்தை அது ஏற்படுத்தும் என்பதையும் ஒரு காரணமாகக் குறிப்பிட்டோம்.

 

நபிகள் நாயகத்துக்கு பொதுவாக மறதி ஏற்பட்டாலும் குர்ஆனை மட்டும் மறக்காத நிலை ஏற்படுத்தப்பட்டது போல், அவர்களுக்கு மனநோய் ஏற்பட்டாலும் குர்ஆனில் இல்லாததை குர்ஆனில் சேர்த்து விடாமல் இறைவன் பாதுகாத்து இருக்க மாட்டானா? என்று சிலர் கேள்வி எழுப்பி சூனியத்தை நிலை நாட்டும் ஆதாரமாக இதைப் பயன்படுத்துகின்றனர்.

 

மறதி வேறு; மனநோய் வேறு என்பதை 357 வது குறிப்பில் நாம் தெளிவுபடுத்தியுள்ளோம்.

 

 
free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2019 tamilquran.in. Designed by Ahadh Media.
You 're visitors No. 159775