95. நபிமார்களிடம் எடுத்த உறுதிமொழி

 

இவ்வசனத்தில் (3:81) நபிமார்களிடம் இறைவன் எடுத்த ஒரு உறுதிமொழி பற்றி கூறப்படுகிறது. 33:7 வசனத்திலும் இதுபற்றி கூறப்பட்டுள்ளது.

 

அந்த உறுதிமொழி எது என்பதில் இரண்டு கருத்துக்கள் உள்ளன.

 

"நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவர்கள் இறுதி நபியாக வருவார்கள். அவ்வாறு அவர்கள் வரும்போது அனைவரும் அவர்களை ஏற்று உதவ வேண்டும்'' என்பது தான் அந்த உடன்படிக்கை என்று பெரும்பாலான அறிஞர்கள் கூறுகின்றனர்.

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறுதி நபியாக வருவார்கள்; அவர்களை ஏற்க வேண்டும் என்று நபிமார்களிடம் அல்லாஹ் உறுதிமொழி எடுத்ததாகப் பொருள் கொள்ள இவ்வசனத்தில் எந்த முகாந்திரமும் இல்லை. பெரும்பாலான அறிஞர்கள் கூறுவது இவ்வசனத்துக்குச் சம்மந்தமில்லாத சொந்தக் கருத்தாகவே உள்ளது.

 

இவ்வசனம் என்ன சொல்கிறது என்பதை, இவ்வசனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள வாசகங்களை வைத்துத்தான் புரிந்து கொள்ள வேண்டும்.

 

நபிமார்களிடம் உறுதிமொழி எடுத்ததாக இவ்வசனம் பொதுவாகக் கூறுகின்றது. அதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உட்பட அனைத்து நபிமார்களும் அடங்குவார்கள்.

 

இவ்வுடன்படிக்கையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அடங்குவதால் அவர்களின் வருகை பற்றிய முன்னறிவிப்பாக இவ்வசனம் இருக்க முடியாது.

 

உம்மைத் தவிர மற்ற நபிமார்களிடம் உறுதிமொழி எடுத்தோம் என்று அல்லாஹ் கூறவில்லை. எனவே இது நபிகள் நாயகம் (ஸல்) உட்பட அனைத்து நபிமார்களிடமும் எடுக்கப்பட்ட உறுதிமொழியையே குறிக்கின்றது என்பதில் ஐயமில்லை.

 

அடுத்ததாக, என்ன உடன்படிக்கை எடுக்கப்பட்டது என்பதையும் இவ்வசனத்திலிருந்தே நாம் தெளிவாக அறிய முடிகின்றது.

 

"உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் நான் தந்த பின் இன்னொரு தூதர் உங்களிடம் வந்தால் நீங்கள் அவரை ஏற்று உதவ வேண்டும்'' என்பது தான் உடன்படிக்கை.

 

"உங்களுக்குப் பின் ஒரு தூதர் வந்தால்'' என்று இங்கே கூறப்பட்டிருந்தால் எதிர்காலத்தில் வரவுள்ள ஒரு நபியைப் பற்றிய முன்னறிவிப்பு என்று கருத முடியும்.

 

உங்களுக்குப் பின் என்று கூறாமல், "உங்களிடம் ஒரு தூதர் வந்தால்' என்று இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ளது. ஒரு நபி வாழ்ந்து கொண்டிருக்கும்போது அவரிடம் இன்னொரு நபி வருவதையே இவ்வாசகம் குறிக்கிறது.

 

"உங்களை நான் நபியாக நியமனம் செய்து விட்டேன்; இது உங்கள் தகுதியினாலோ, உழைப்பினாலோ கிடைத்தது அல்ல. மாறாக, நானாக உங்களுக்கு வழங்கியதாகும். நபியாக நியமனம் செய்யப்பட்டதால் இனிமேல் நமது தகுதிக்கு எந்தக் குறையும் ஏற்படாது என்று நீங்கள் நினைத்து விடாதீர்கள்! நீங்கள் நபியாக இருக்கும் போதே உங்களிடம் இன்னொரு தூதரை நான் அனுப்பினால் உடனே அவரை நீங்கள் ஏற்க வேண்டும். அவருக்கு உதவி செய்திட முன் வர வேண்டும். இந்த நிபந்தனையின் அடிப்படையிலேயே உங்களுக்கு இந்தத் தகுதி வழங்கப்படுகிறது'' என்பது தான் இவ்வசனத்தின் கருத்தாகும்.

 

இதை இவ்வசனத்தின் வாசக அமைப்பே உறுதி செய்கிறது.

 

இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றிய முன்னறிவிப்பு என்று கருதினால் நபிமார்கள் தமது உடன்படிக்கையை நிறைவேற்றவில்லை என்று ஆகி விடும்.

 

"அவரை நம்பி அவருக்கு உதவ வேண்டும்'' என்பது தான் உடன்படிக்கையின் நிபந்தனை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வுலகிற்கு வந்தபோது எந்த நபியும் உலகில் இருக்கவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு உதவவுமில்லை.

 

பெரும்பாலான அறிஞர்களின் கூற்று முற்றிலும் தவறானது என்பதை இதிலிருந்து அறியலாம்.

 

நபி என்ற தகுதி, மனிதனின் உழைப்புக்காகவோ, திறமைக்காகவோ வழங்கப்படுவதல்ல; எனது கருணையால் வழங்கப்படுவது. வேறொருவருக்கு அதை நான் வழங்கினால் அதற்கும் கட்டுப்பட வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் இதை வழங்குகிறேன் என்பது தான் உடன்படிக்கை.

 

1. உங்களிடம் அவர் வந்தால்

2. அவரை நீங்கள் நம்ப வேண்டும்

3. அவருக்கு நீங்கள் உதவ வேண்டும்

ஆகிய வாசகங்கள் இதைத் தெளிவாகக் கூறுகின்றன.

 

ஒரு நபியை அனுப்பிய பின் அவருக்குப் பக்கபலமாக இருப்பதற்காக மேலும் சிலரை அல்லாஹ் அனுப்பியதாக 36:14 வசனம் கூறுகிறது. அவ்வாறு அனுப்பப்பட்டவர்களை முதலில் அனுப்பப்பட்ட நபிமார்கள் ஏற்றுக் கொண்டனர்.

 

பெரும்பாலான அறிஞர்கள் இவ்வசனம் கூறாத ஒரு கருத்தைக் கற்பனை செய்து கூறியதால் சில வழிகேடர்கள் இவ்வசனத்தை தங்களின் வழிகேட்டுக்கு ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்துக்குப் பின் தம்மை நபியென்று கூறிக் கொண்ட பொய்யர்கள் அனைவரும் இந்த வசனம் தங்களைப் பற்றிய முன்னறிவிப்பு என்று கூறி மக்களை ஏமாற்றாமல் இருந்ததில்லை.

 

"நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உட்பட எல்லா நபிமார்களிடமும், இனி வரும் நபியைப் பற்றி அல்லாஹ் முன்னறிவிப்புச் செய்துள்ளான். அந்த நபி நான் தான்'' என்று தம்மை நபியெனப் பொய் வாதம் செய்தவர்கள் கூறியுள்ளனர்.

 

"உங்களுக்குப் பின் ஒரு நபி வந்தால்'' என்று கூறாமல், ''ஜாஅகும் - உங்களிடம் ஒரு நபி வந்தால்'' என்று இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ளதை இந்தப் பொய்யர்கள் இருட்டடிப்புச் செய்கின்றனர்.

 

ஒரு நபி வாழும்போது அவரது பகுதிக்கு இன்னொரு நபி அனுப்பப்பட்டால் அவரை ஏற்க வேண்டும் என்பது தான் இவ்வசனத்தின் நேரடியான பொருள் எனும்போது, இது எப்படி முன்னறிவிப்பாக இருக்க முடியும்?

 

இவ்வசனம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வருகை பற்றியும் முன்னறிவிப்பு செய்யவில்லை. வேறு யாரைப் பற்றியும் முன்னறிவிப்பு செய்யவில்லை என்பதே உண்மை.

 

 








free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2019 tamilquran.in. Designed by Ahadh Media.
You 're visitors No. 48468