80. மட்டமான பொருளைப் பிறருக்குக் கொடுக்கலாமா?

 

இவ்வசனத்தில் (2:267) கண்ணை மூடிக்கொண்டே தவிர எதை வாங்கிக் கொள்ள மாட்டீர்களோ அத்தகைய மட்டமான பொருளைச் செலவிட நினைக்காதீர்கள் என்று சொல்லப்படுகிறது.

 

இதை மேலோட்டமாகப் பார்க்கும்போது நாம் பயன்படுத்திய பொருட்களையும், பழைய பொருட்களையும் மற்றவர்களுக்குக் கொடுக்கக் கூடாது என்ற கருத்தைத் தருவது போல் அமைந்துள்ளது.

 

ஆனால் இவ்வசனம் அருளப்பட்ட வரலாற்றுப் பின்னணி இவ்வசனத்தின் சரியான பொருள் என்ன என்பதை விளக்கும்.

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் மக்காவில் இருந்து அகதிகளாக மதீனா வந்த சிலர் பள்ளிவாசலிலேயே தங்கி இருந்தனர். பேரிச்சம் பழம் விளைந்து அறுவடை செய்யும்போது அதில் ஓரிரு குலைகளைக் கொண்டு வந்து உள்ளூர் நபித்தோழர்கள் பள்ளிவாசலில் தொங்க விடுவார்கள்.

 

ஏழைகளும், பள்ளிவாசலில் தங்கியிருந்த நபித்தோழர்களும் தேவைப்படும்போது எடுத்து அதை உண்பார்கள். மதீனாவில் நன்மையான காரியங்களுக்குச் செலவிடாத சிலர் இருந்தனர். இவர்கள் அறுவடை செய்யும்போது உண்ணத்தகாதவை என ஒதுக்கப்பட்ட குலைகளைக் கொண்டு வந்து பள்ளிவாசலில் தொங்க விடுவார்கள். யாருமே சாப்பிட முடியாத பொருட்களைக் கொண்டு வந்து தாங்களும் தர்மம் செய்ததாகக் காட்டிக் கொண்ட இவர்களைக் கண்டித்துத் தான் இவ்வசனம் அருளப்பட்டது. (பார்க்க : திர்மிதி)

 

நமக்கு அதை அன்பளிப்பாகக் கொடுத்தால் நாம் கண்ணை மூடிக் கொண்டு இருந்தால் தவிர நாம் வாங்க மாட்டோம் என்ற தரத்தில் அப்பொருள் இருந்தால் அதை நாம் தர்மம் செய்யக் கூடாது. நமக்கு அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்டால் அதை வாங்கிக் கொள்வோம் என்றால் அது போன்ற பொருட்களை தர்மம் செய்யலாம்.

 

இது குறித்து மேலும் அறிய 78வது குறிப்பையும் வாசிக்கவும்.

 

 








free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2019 tamilquran.in. Designed by Ahadh Media.
You 're visitors No. 210323