398. நபியும் ரசூலும் ஒன்றே

 

நபி என்ற சொல்லையும், ரசூல் என்ற சொல்லையும் நாம் பரவலாகப் பயன்படுத்தி வருகிறோம். 'நபி, ரசூல் ஆகிய இரண்டையும் ஒரே பொருளில் நாம் பயன்படுத்தி வருகின்றோம்.

 

இவ்விரண்டுக்கும் ஏதாவது வித்தியாசம் உள்ளதா? இரண்டும் ஒரே கருத்தைச் சொல்லக் கூடிய சொற்களா? இதை நாம் விரிவாக அறிந்து கொள்வோம்.

 

நபி என்ற சொல் நபஅ என்ற சொல்லில் இருந்து பிறந்ததாகும். இச்சொல்லுக்கு அறிவிப்பவர் என்று பொருள். அல்லாஹ்விடமிருந்து செய்திகளைப் பெற்று மக்களுக்கு அறிவிப்பவர் என்ற கருத்தில் இறைத்தூதர்கள் நபி என்று குறிப்பிடப்படுகின்றனர்.

 

ரசூல் என்றால் சொந்தக் கருத்தைச் சொல்லாமல் பிறரது கருத்தை அப்படியே கொண்டு சேர்ப்பவர் அதாவது தூதர் என்பது பொருள். இறைவனிடமிருந்து செய்திகளைப் பெறுகிறார்கள் என்ற அடிப்படையில் ரசூல் - தூதர் என்று சொல்லப்படுகிறது.

 

எல்லா நபியும் இறைவனிடமிருந்து செய்தியைப் பெறுவதால் அவர் ரசூலாகவும் இருக்கிறார். எல்லா ரசூலும் இறைவனிடமிருந்து பெற்ற செய்திகளை மக்களுக்கு மறைக்காமல் அறிவித்து விடுவதால் அவர்கள் நபியாகவும் இருக்கிறார்கள்.

 

இரண்டுக்கும் பெரிய வேறுபாடு உள்ளது என்று சிலர் வாதிடுகின்றனர். ரசூல் என்றால் வேதம் கொடுக்கப்பட்டவர்கள். நபி என்றால் வேதம் கொடுக்கப்படாதவர்கள் என்று சிலர் வித்தியாசப்படுத்துகின்றனர்.

 

2:129, 2:151, 2:252, 3:164, 3:184, 4:136, 5:15, 5:67, 5:83, 6:130, 7:35, 9:97, 35:25, 39:71, 57:25, 62:2 ஆகிய வசனங்கள் ரசூலுக்கு வேதம் வழங்கப்படும் என்று சொல்வதைச் சான்றாகக் காட்டுவார்கள்.

 

ஆனால் 2:136, 2:213, 3:79, 3:81, 3:84, 5:81, 19:30, 37:112-117, 29:27, 45:16, 57:26 ஆகிய வசனங்கள் நபிக்கும் வேதம் வழங்கப்பட்டது என்று சொல்வதால் இவர்களின் இந்த வாதம் அடிபட்டுப் போகின்றது.

 

ரசூலுக்கு தனி மார்க்கம் வழங்கப்படும். நபி என்பவர் இன்னொரு நபிக்கு வழங்கப்பட்ட மார்க்கத்துக்குப் புத்துயிர் ஊட்டுவார் என்று சிலர் வாதிடுகின்றனர்.

 

9:33, 10:47, 17:15, 48:28, 61:9 ஆகிய வசனங்கள் ரசூலுக்கு தனி மார்க்கம் என்று சொல்வதை சான்றாகக் காட்டுகின்றனர். இது தவறாகும்.

 

ஏனெனில் 19:49, 66:8 ஆகிய வசனங்கள் நபிக்கும் தனி மார்க்கம் வழங்கப்பட்டதாகக் கூறுகிறது.

 

மேலும் 7:157, 7:158, 9:61, 19:51, 19:54, 43:6 ஆகிய வசனங்கள் நபியும் ரசூலும் ஒன்று என்று சொல்கின்றன.

 

நபி, ரசூல் வேறு என்று கருதும் வகையில் ஒரே ஒரு வசனம் (22:52) மட்டும் உள்ளது. ஆனாலும் அதுவும் இந்த வாதத்தை நிலைநாட்ட உதவாது.

 

இவ்வசனத்தில் (22:52) நாம் அனுப்பிய எந்த நபியானாலும், எந்தத் தூதரானாலும்... என்ற சொற்றொடர் இடம் பெறுகின்றது. நபியும் ரசூலும் ஒன்றல்ல; வெவ்வேறானவை எனக் கூறுவோர் இதைச் சான்றாகக் காட்டுவார்கள்.

 

இதை அப்படியே பொருள் கொண்டு, நபி வேறு; ரசூல் வேறு எனக் கூறினால் அதற்கு மாற்றமாக அமைந்த ஏராளமான வசனங்களை நிராகரிக்கும் நிலைமை ஏற்படும்.

 

மனிதர்களின் பேச்சு வழக்கில் ஒரே பொருளைக் குறிக்கும் இரண்டு சொற்களைப் பயன்படுத்தி, தனித்தனி பொருள் போன்று கூறும் வழக்கம் உள்ளது. குறிப்பாக எதிர்மறையாகப் பேசும்போது இது அதிக அளவில் காணப்படுகிறது. அரபு மொழி உட்பட இன்னும் ஏராளமான மொழிகளிலும் இந்த வழக்கம் உள்ளது.

 

எனக்கு எந்தக் கூட்டாளியும், நண்பனும் கிடையாது.

 

எனக்கு எந்தச் சொந்தமும், பந்தமும் இல்லை என்பன போன்ற சொற்களை நாம் பயன்படுத்துகிறோம்.

 

அதிக அழுத்தம் கொடுப்பதற்காக ஒரே கருத்தில் அமைந்த இரு சொற்களை, இரு கருத்துக்களைப் போல் பயன்படுத்துகிறோம். அது போல் மேற்கண்ட வசனத்தைப் புரிந்து கொண்டால் நபியும் ரசூலும் ஒன்றே எனக் கூறும் வசனங்களுடன் பொருந்திப் போகின்றது.

 

 








free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2019 tamilquran.in. Designed by Ahadh Media.
You 're visitors No. 293050