125. பயணத்தில் தொழுகையைச் சுருக்குதல்

 

இவ்வசனத்தில் (4:101) பயணத்தின்போது தொழுகையைச் சுருக்கித் தொழலாம் எனக் கூறப்படுகிறது.

 

இதற்கு ஒரு நிபந்தனையும் விதிக்கப்படுகிறது. எதிரிகளால் ஆபத்து ஏற்படும் என அஞ்சினால் நீங்கள் தொழுகையைச் சுருக்கிக் கொள்ளலாம் என்பது தான் அந்த நிபந்தனை.

 

இன்றைக்கு அச்சமில்லாத சூழ்நிலையிலும் பயணங்களில் நாம் தொழுகையைச் சுருக்குகிறோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அச்சமில்லாத சூழ்நிலையில் பயணங்களில் தொழுகையைச் சுருக்கியுள்ளனர்.

 

இது இவ்வசனத்திற்கு முரணானது என்று சிலருக்குத் தோன்றலாம். ஏனெனில் அச்சமான சூழ்நிலையில் தான் தொழுகையைச் சுருக்கலாம் என்று இவ்வசனம் கூறுகிறது. அச்சமில்லாத நிலையிலும் தொழுகையைச் சுருக்கலாம் எனக் கூறுவது குர்ஆனுக்கே எதிரானதாகத் தோன்றலாம்.

 

ஆனால் உண்மையில் முரண் ஏதும் இல்லை. தொழுகையைச் சுருக்குதல் என்பது இரு வகைப்படும்.

 

* ஒன்று அச்சமான நிலையிலும், போர்க்களத்திலும் சுருக்குதல்

 

* மற்றொன்று அச்சமில்லாதபோது சாதாரணப் பயணங்களில் சுருக்குதல்

 

இவ்விரு சுருக்குதலும் வெவ்வேறு வகையானவை.

 

அச்சமான நேரத்திலும், போர்க்களத்திலும் தொழுகையைச் சுருக்குவது என்றால் எல்லாத் தொழுகையையும் ஒரே ஒரு ரக்அத்துடன் முடித்தல் என்பது பொருள்.

 

நான்கு ரக்அத் தொழுகையானாலும், மூன்று ரக்அத் தொழுகையானாலும், இரண்டு ரக்அத் தொழுகையானாலும் அவற்றுக்குப் பதிலாக ஒரு ரக்அத் தொழுதால் போதும்.

 

இதை அடுத்த வசனத்திலிருந்து (4:102) அறிந்து கொள்ளலாம்.

 

எனவே ஒரு ரக்அத்தாகச் சுருக்குதல் என்பது இவ்வசனம் கூறுவது போல் அச்சமான சூழ்நிலையில் மட்டுமே. அச்சமில்லாத நேரத்தில் ஒரு ரக்அத் ஆகச் சுருக்கினால் அது இவ்வசனத்திற்கு எதிரானதாகும்.

 

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சாதாரணப் பயணத்தில் ஒரு ரக்அத்துடன் சுருக்கவில்லை. மாறாக நான்கு ரக்அத் தொழுகைகளை மட்டும் இரண்டாகச் சுருக்கினார்கள். மற்ற தொழுகைகளைச் சுருக்கவில்லை.

 

இந்தச் சுருக்குதல் இவ்வசனத்துக்கு எதிரானதல்ல. இவ்வசனம் கூறாத இன்னொரு வகையான சுருக்குதலாகும்.

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு திருக்குர்ஆன் அல்லாத வேறு வஹீயும் வந்துள்ளது. அந்த அடிப்படையில் அவர்கள் சாதாரணப் பயணங்களின்போது சுருக்கினார்கள்.

 

சாதாரணப் பயணங்களில் சுருக்குதல் வேறு! அச்சமான நிலையில் சுருக்குதல் வேறு என்பதை விளங்கிக் கொண்டால் குழப்பம் வராது.

 

திருக்குர்ஆனின் கட்டளைகளைப் பின்பற்றுவதுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலையும் பின்பற்ற வேண்டும் என்பதைப் பற்றி மேலும் அறிய 18, 36, 39, 50, 55, 56, 57, 60, 67, 72, 105, 127, 128, 132, 154, 164, 184, 244, 255, 256, 258, 286, 318, 350, 352, 358, 430 ஆகிய குறிப்புகளையும் காண்க!

 

 








free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2019 tamilquran.in. Designed by Ahadh Media.
You 're visitors No. 44521