212. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தூய வாழ்க்கை

 

இவ்வசனத்தில் (10:16) தமது தூய வாழ்க்கையை ஆதாரமாகக் காட்டி தூதுத்துவத்தை நிறுவுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கட்டளையிடப்படுகிறது.

 

தாம் இறைத்தூதர் என்பதற்குத் தமது கடந்த கால வாழ்க்கையை முக்கியமான சான்றாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கள் மத்தியில் முன்வைத்தார்கள்.

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் யாரையும் ஏமாற்றியதாகவோ, யாருக்கும் அநீதி இழைத்ததாகவோ அம்மக்கள் அறிந்ததில்லை.

 

ஊரில் மிகப்பெரும் செல்வந்தராக இருந்தும் அதனால் ஏற்படும் செருக்கு எதனையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் அம்மக்கள் கண்டதில்லை. மாறாக தமது செல்வத்தைப் பிறருக்கு வாரி வழங்குவதில் இன்பம் காண்பவராகவே அவர்களைக் கண்டார்கள்.

 

சுயநலனில்லாத அவர்களின் பரிசுத்த வாழ்க்கையைத்தான் அம்மக்கள் கண்டார்கள்.

 

"இவரை முழுமையாக நம்பலாம்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீது அவர்களுக்கு ஏற்பட்ட நம்பிக்கை தான் இஸ்லாத்தை அவர்கள் ஏற்பதற்கு முதல் காரணமாக இருந்தது.

 

எந்த ஒரு மனிதனும் தனது கடந்த கால வாழ்க்கையை மக்களுக்கு நினைவூட்டி என்னை நம்புங்கள் எனக் கூற முடியாது. ஏனெனில் எவரது கடந்தகால வாழ்க்கையும் முழு அளவுக்குத் தூய்மையாக இருக்க முடியாது. மகான்களேயானாலும் அவர்களின் இப்போதைய நிலையைத்தான் பார்க்க வேண்டுமே தவிர கடந்த காலத்தைப் பார்க்கக் கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் "நதி மூலமும் ரிஷி மூலமும் பார்க்கக் கூடாது'' என்ற சொல்வழக்கு இங்கு உள்ளது.

 

தாம் இறைத்தூதர் என்பதற்கு தமது கடந்த கால வாழ்க்கையையே சான்றாகக் காட்டும் தைரியம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மட்டுமே இருந்தது.

 

இதை முன்வைத்தே இறைத்தூதர் என்பதை நிலைநாட்டுமாறு திருக்குர்ஆனும் அவர்களுக்குக் கட்டளையிட்டது.

 

இறைத்தூதர் என்று தம்மை அறிமுகப்படுத்துவதற்கு முன் பொய், பித்தலாட்டம், ஒழுக்கக்கேடு, தீய பழக்கங்கள் போன்ற அனைத்திலிருந்தும் அவர்கள் விடுபட்டு பரிசுத்தமான வாழ்க்கை வாழ்ந்துள்ளார்கள் என்பதற்கு இவ்வசனம் சான்றாகவுள்ளது.

 

இறைத்தூதராக ஆன பின்பு அதை விடத் தூய்மையான வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்து காட்டினார்கள் என்பது தனி விஷயம்.

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்மை இறைத்தூதர் என்று சொன்னபோது தமக்கு எதிராக எழுப்பப்பட்ட எல்லா விமர்சனங்களையும் எப்படி முறியடித்தார்கள் என்பதை மேலும் அறிய 468வது குறிப்பைக் காண்க!

 

 








free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2019 tamilquran.in. Designed by Ahadh Media.
You 're visitors No. 210312