229. யூஸுஃப் நபி மனதால் நாடியது குற்றமா?

 

"அவளும் அவரை நாடினாள்; அவரும் அவளை நாடி விட்டார்'' என்று இவ்வசனத்தில் (12:24) கூறப்படுகிறது.

 

யூஸுஃப் நபி அவர்களின் எஜமானி தவறான நோக்கத்தில் யூஸுஃப் நபியை அணுகியபோது ஆரம்பத்தில் யூஸுஃப் நபி கட்டுப்பாடாக இருந்தாலும் ஒரு சமயத்தில் தடுமாற ஆரம்பித்தார். ஆனாலும் அல்லாஹ்வின் அருளால் உடனடியாகத் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டார் என்று இவ்வசனத்தில் கூறப்படுகிறது.

 

ஆனால் சில அறிஞர்கள் இதற்கு மாற்றமாகக் கூறுகின்றனர்.

 

"அவள் அவரை நாடினாள். அல்லாஹ்வின் அத்தாட்சியை அவர் பார்த்திராவிட்டால் அவரும் அவளை நாடியிருப்பார்'' என்று பொருள் கொண்டு, யூஸுஃப் நபி அப்பெண்ணை நாடவே இல்லை என்று அவர்கள் கூறுகின்றனர்.

 

யூஸுஃப் நபி அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதராக இருந்தார்கள். அவர்கள் எப்படி ஒரு பெண் மீது மையல் கொள்ள முடியும் என்ற எண்ணத்தின் காரணமாகவே இவர்கள் அவ்வாறு பொருள் கொள்கின்றனர்.

 

ஆனால் இவ்வசனத்துக்கு இவ்வாறு பொருள் கொள்வது அரபுமொழி மரபுக்கும், இலக்கணத்துக்கும் எதிரானது என்று இப்னு கஸீர் போன்ற அறிஞர்கள் கூறுகின்றனர்.

 

அரபுமொழி மரபுப்படி "அவள் அவரை நாடினாள்; அவரும் அவளை நாடினார். அல்லாஹ்வின் அத்தாட்சியை அவர் பார்த்திராவிட்டால் (தவறியிருப்பார்)'' என்று பொருள் கொள்வது தான் சரியானது. திருக்குர்ஆன் தெளிவான அரபுமொழியில் அருளப்பட்டிருப்பதால் வேறு காரணங்கள் கூறி அம்மொழி மரபுக்கு எதிராகப் பொருள் கொள்ள முடியாது.

 

மேலும் உள்ளத்தில் சலனம் ஏற்படுவது இஸ்லாத்தில் குற்றமல்ல. சலனத்துக்குச் செயல்வடிவம் கொடுப்பது தான் குற்றமாகும்.

 

தனிமையில் ஒருவரை அழகான பெண் வயப்படுத்தும்போது யாராக இருந்தாலும் சலனம் ஏற்படத்தான் செய்யும். அது போல் யூஸுஃப் நபிக்கும் ஏற்பட்டது. அவர்கள் உடனடியாக சுதாரித்துக் கொண்டு விலகி விடுகிறார்கள். இது இறைத்தூதரின் தகுதியில் எந்தக் குறைவையும் எற்படுத்தாது.

 

மேலும் இதே அத்தியாயத்தின் 53வது வசனத்தில் "என் உள்ளம் தூய்மையானது என்று நான் சாதிக்கவில்லை'' என்று யூஸுஃப் நபி கூறியதாகக் கூறப்பட்டுள்ளது. உள்ளத்தின் இது போன்ற சலனங்களிலிருந்து ஆண்மையுடைய யாராலும் தப்பிக்க முடியாது.

 

எந்த ஆணும் ஒரு பெண்ணிடம் தனிமையில் இருந்தால் மூன்றாவதாக ஷைத்தான் இருப்பான் என்பது நபிமொழி. (திர்மிதீ 1091).

 

எனவே யூஸுஃப் நபியவர்களின் உள்ளத்தில் சலனம் ஏற்பட்டதாகத் திருக்குர்ஆன் தெளிவாகக் கூறும்போது வேறு விளக்கம் கொடுக்க நியாயமான காரணம் ஏதுமில்லை.

 

 








free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2019 tamilquran.in. Designed by Ahadh Media.
You 're visitors No. 228332