180. இரகசியமாகவும், பணிவாகவும் பிரார்த்தனை செய்தல்

 

இவ்வசனம் (7:55) இறைவனிடம் எவ்வாறு பிரார்த்தனை செய்வது என்ற வழிமுறையைக் கற்றுத் தருகிறது.

 

ஒரு அதிகாரியிடமோ, அமைச்சரிடமோ நமது கோரிக்கைகளை எழுப்புவது என்றால் அதற்கென சில ஒழுங்குகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை நாம் அறிந்து வைத்துள்ளோம்.

 

நமது கோரிக்கையைக் கேட்கும்போது அடுக்குமொழியில் வசனம் பேசினால், அல்லது ராகம் போட்டு கோரிக்கையை எழுப்பினால் கோரிக்கை எவ்வளவு நியாயம் என்றாலும் அந்த அதிகாரி ஏற்க மாட்டார். அல்லது கடுமையான சப்தத்தில் கோரிக்கையை எழுப்பினாலும் கோரிக்கை நிராகரிக்கப்படும்.

 

மனிதனிடம் கோரிக்கை வைக்கும்போது காட்டப்படும் பணிவை விட அதிகமாக அல்லாஹ்விடம் பணிவைக் காட்ட வேண்டும். அதைத்தான் அல்லாஹ் இங்கே கூறுகிறான்.

 

பணிவுடன் உங்கள் இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள் என்பது முதலாவது ஒழுங்கு. அல்லாஹ்விடம் கேட்கும்போது ராகம் போட்டோ, அடுக்கு மொழியிலோ கேட்டால் அங்கே பணிவு எடுபட்டுப் போய்விடும்.

 

பணிவு இல்லாமலும், யாரிடம் கேட்கிறோம் என்ற உணர்வு இல்லாமலும் பெரும்பாலான பள்ளிவாசல்களில் சடங்காகப் பிரார்த்தனை செய்கின்றனர். அது தவறான செயல் என்பதை இவ்வசனத்திலிருந்து அறிந்து கொள்ளலாம்

 

மேலும் இரகசியமாகப் பிரார்த்திப்பதும் பிரார்த்தனையின் மற்றொரு ஒழுங்காக இவ்வசனத்தில் கூறப்படுகிறது.

 

கூட்டாக சப்தமிட்டுக் கேட்பது முறையான பிரார்த்தனை இல்லை என்பது இதிலிருந்து தெரியவரும்.

 

ஒவ்வொருவருக்கும் தனித்தனித் தேவைகள் உள்ளன. அவரவர் தத்தமது தேவையை தமது மொழியில் பணிவுடனும், இரகசியமாகவும் கேட்பதே பிரார்த்தனையின் முக்கிய ஒழுங்காகும்.

 

இறைவன் எவ்வாறு பிரார்த்திக்குமாறு நமக்குக் கட்டளையிடுகிறானோ, அவ்வாறு செய்யப்படும் பிரார்த்தனையைத்தான் ஏற்றுக் கொள்வான் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

 

இது பற்றி மேலும் விபரங்கள் அறிய 190, 192, 270 ஆகிய குறிப்புகளையும் காண்க!

 

 








free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2019 tamilquran.in. Designed by Ahadh Media.
You 're visitors No. 228146