102. சிறு கவலை தீர பெருங்கவலை

 

மனம் தளர்ந்து பாதிக்கப்பட்டவர்களை எவ்வாறு ஆறுதல்படுத்துவது என்பதை இவ்வசனம் (3:153) அழகாக சொல்லித் தருகிறது.

 

உஹதுப் போரில் முஸ்லிம்களுக்கு வெற்றி நழுவிப் போனதுடன் உயிரிழப்புகளும், காயங்களும் அதிக அளவில் ஏற்பட்டன. இதனால் முஸ்லிம்கள் மனச் சோர்வு அடைந்து தளர்ந்து போயிருந்த நேரத்தில் அதை விடப் பெரும் கவலையாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொல்லப்பட்டார்கள் என்ற வதந்தி அமைந்தது.

 

அவர்களுக்கு ஏற்பட்ட அந்தக் கவலைகள் இதனால் மறைந்தன. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொல்லப்பட்டு விட்டார்களே என்ற ஒரே கவலைதான் அப்போது இருந்தது.

 

அந்தக் கவலையைப் போக்கும் விதமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உயிருடன் உள்ள செய்தி கிடைத்தவுடன் நபித்தோழர்கள் பெரும் உத்வேகம் பெற்றனர். மீண்டும் வெற்றிவாகை சூடினார்கள்.

 

மனோதத்துவ ரீதியாக இது போன்ற நடவடிக்கைகளால் தான் கவலையை மறக்கடிக்கச் செய்ய இயலும் என்று இன்று கண்டறியப்பட்டுள்ளது.

 

இவர்கள் கண்டுபிடிப்பதற்குப் பல நூறு வருடங்களுக்கு முன்பே திருக்குர்ஆன் (3:153) இந்த வழிமுறையைக் கடைப்பிடித்து "உங்களுக்கு வெற்றி தவறியதற்காகவும், துன்பம் ஏற்பட்டதற்காகவும் நீங்கள் கவலைப்படாமலிருக்க அதை விடப் பெருங்கவலையை அவன் உங்களுக்குப் பரிசளித்தான்'' என்று கூறுகிறது.

 

குர்ஆன் இறைவேதம் என்பதை இது நிரூபிக்கிறது.

 

மனக் கவலையில் ஆழ்ந்திருப்பவர்களையும், மனநோய்க்கு ஆளானவர்களையும் குணப்படுத்த, அதை விடப் பெரும் கவலையை கற்பனையாக அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு பெரும் கவலையை ஏற்படுத்திய உடன் ஏற்கனவே இருந்த சிறிய கவலைகள் மறைந்து விடும். பெரும் கவலை மட்டுமே முழு உள்ளத்தையும் ஆக்கிரமித்துக் கொள்ளும். கற்பனையாக ஏற்படுத்திய கவலையை கற்பனை எனப் புரிய வைத்தால் அனைத்துக் கவலைகளிலிருந்தும் அவர் விடுபடுவார்.

 

மனோதத்துவ நிபுணர்கள் கையாளும் இந்த வழிமுறையைக் காரணத்துடன் இவ்வசனம் விளக்குகின்றது.

 

தூக்கத்தைக் கொடுத்தது மேலும் பயன் தந்ததாக இதற்கு அடுத்த வசனத்தில் திருக்குர்ஆன் கூறுகிறது.

 

பொய்யான பெரும் கவலையை ஏற்படுத்தி, தூக்கத்தையும் ஏற்படுத்தி, பின்னர் பொய்யான பெரும் கவலையை நீக்கினால் எல்லா விதமான கவலைகளும் பறந்து போய் விடும்.

 

20ஆம் நூற்றாண்டில் மிகப் பெரிய ஆய்வுகளுக்குப் பின் கண்டறியப்பட்ட இந்த வழிமுறையை 14 நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் என்றால் நிச்சயம் இது இறைவன் புறத்திலிருந்து கிடைத்த செய்தியாகத்தான் இருக்க வேண்டும்.

 

திருக்குர்ஆன் இறைவேதம் எனக் கூறும் சான்றுகளில் இதுவும் ஒரு சான்று எனலாம்.

 

 








free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2019 tamilquran.in. Designed by Ahadh Media.
You 're visitors No. 43409