121. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் மன்னிப்பை வேண்டலாமா?

 

பாவம் செய்தவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, தாங்களும் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கேட்டு, அவர்களுக்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் பாவமன்னிப்புத் தேடினால் அல்லாஹ் மன்னிப்பான் என்று இவ்வசனம் (4:64) கூறுகிறது.

 

இதை ஆதாரமாகக் காட்டி, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அடக்கத்தலம் சென்று நமக்காகப் பாவமன்னிப்புத் தேடுமாறு நபியவர்களிடம் கேட்கலாம் என்று கூறி சிலர் மக்களை வழிகெடுத்து வருகின்றனர்.

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்தவர்கள், பாவம் செய்து விட்டு தாமும் மன்னிப்புக் கேட்டு நபிகள் நாயகமும் அல்லாஹ்விடம் அவர்களுக்காக பாவமன்னிப்புக் கேட்டால் அல்லாஹ் மன்னிப்பான் என்று தான் இவ்வசனம் கூறுகிறதே தவிர மரணித்த பிறகு அடக்கத்தலம் சென்று பாவமன்னிப்புக் கோருமாறு கூறவில்லை.

 

இவ்வாறு வாதிடுவோர் ஒவ்வொரு பாவம் செய்தவுடன் மதீனாவுக்குச் சென்று விட்டு வர வேண்டும். இவர்களின் வாதப்படி பெரிய செல்வந்தர்களுக்கு மட்டும் தான் மன்னிப்புக் கிடைக்கும். மதீனாவுக்குச் செல்ல முடியாத ஏழைகளுக்குக் கிடைக்காது.

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழும்போது, அவர்கள் அல்லாஹ்விடம் அம்மக்களுக்காகப் பாவமன்னிப்புக் கேட்கும்போது இறைவன் மன்னிக்க அதிக வாய்ப்பு உண்டு என்பதைத் தவிர இதற்கு வேறு அர்த்தம் இல்லை.

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தோழர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த பின் ஒவ்வொரு பாவம் செய்யும்போதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அடக்கத்தலம் சென்று தமக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கேட்குமாறு வேண்டவில்லை.

 

தர்கா வழிபாட்டை நியாயப்படுத்துவோரின் இதர வாதங்கள் எப்படி தவறானவை என்பதை அறிந்து கொள்ள 17, 41, 49, 79, 83, 100, 104, 122, 140, 141, 193, 213, 215, 245, 269, 298, 327, 397, 427, 471 ஆகிய குறிப்புகளையும் காண்க!

 

 








free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2019 tamilquran.in. Designed by Ahadh Media.
You 're visitors No. 210273