294. 'ஷைத்தான் போடும் குழப்பம்' என்பதன் பொருள்

 

இவ்வசனத்தில் (22:52) இறைத்தூதர்கள் ஓதிக் காட்டியதில் ஷைத்தான் குழப்பத்தை ஏற்படுத்துவான் எனக் கூறப்படுகிறது.

 

'ஓதிக் காட்டியதில்' என்று நாம் தமிழாக்கம் செய்த இடத்தில் அரபு மூலத்தில் 'உம்னிய்யத்' என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

 

இச்சொல்லுக்கு உள்ளம் என்றும், ஓதிக்காட்டுதல் என்றும் இரு அர்த்தங்கள் உள்ளன.

 

சில மொழிபெயர்ப்பாளர்கள் இச்சொல்லுக்கு உள்ளம் என்று மொழி பெயர்த்துள்ளனர். இவர்களது மொழிபெயர்ப்பின்படி இறைத்தூதர்களின் உள்ளங்களில் ஷைத்தான் தனது தீய கருத்துக்களைப் பதியச் செய்து விடுவான் என்ற கருத்து வரும்.

 

இவ்வாறு செய்யப்பட்ட மொழிபெயர்ப்பை அடிப்படையாகக் கொண்டு தான் ஸல்மான் ருஷ்டி என்பவன் 'சாத்தானின் வசனங்கள்' என்ற நூலை எழுதினான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உள்ளத்தில் ஷைத்தான் தனது கருத்துக்களைப் போட முடியும் என்று இவ்வசனம் கூறுவதாக அவன் வாதிட்டான்.

 

இவ்வாறு அவன் வாதிடுவதற்கு இவ்வசனத்திற்குத் தவறான பொருள் செய்த அறிஞர்களே பொறுப்பேற்க வேண்டும்.

 

இறைவன் தனது தூதுச் செய்தியைப் பாதுகாப்பதாகக் கூறி இருக்கும் பொழுது, இறைத்தூதரின் உள்ளத்தில் ஷைத்தான், தான் விரும்புவதைப் போட முடியுமா? என்று சிந்தித்திருந்தால் இவ்வாறு அவர்கள் பொருள் கொண்டிருக்க மாட்டார்கள்.

 

ஓதிக் காட்டுதல் என்று பொருள் கொள்ளும்போது இந்த விபரீதம் ஏற்படாது.

 

இறைத்தூதர்கள் தமக்கு அறிவிக்கப்படும் செய்திகளை மக்களுக்கு ஓதிக் காட்டியவுடன் அது பற்றிப் பலவிதமான சந்தேகங்களையும், ஆட்சேபணைகளையும் மக்களிடம் ஷைத்தான் தோற்றுவிப்பான் என்பதே இவ்வசனத்தின் கருத்தாகும்.

 

ஆனாலும் அவர்கள் விளைவித்த குழப்பங்களுக்கு தக்க பதிலடி கொடுப்பதன் மூலம் ஷைத்தானின் குழப்பத்தை அல்லாஹ் முறியடிப்பான்.

 

 








free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2019 tamilquran.in. Designed by Ahadh Media.
You 're visitors No. 228179