114. மணமுடிக்கத் தகாதவர்களை மணமுடித்திருந்தால்

 

இவ்வசனத்தில் (4:23) "இரண்டு சகோதரிகளை மணப்பது கூடாது; நடந்து முடிந்தவைகளைத் தவிர'' என்று கூறப்பட்டுள்ளது.

 

இவ்வசனத்தைச் சிலர் தவறாக விளங்கிக் கொண்டு ஏற்கனவே மனைவியின் சகோதரியையும் மணந்திருந்தால் அவர்களுடன் வாழ்க்கையைத் தொடரலாம் என்று நினைக்கின்றனர்.

 

"முன்னர் நடந்து விட்டதைத் தவிர'' என்ற விதிவிலக்கு இரண்டு சகோதரிகளை ஒரே நேரத்தில் மணந்து கொள்வதற்கு மட்டும் உரியதல்ல. இவ்வசனத்தில் கூறப்படும் 13 விஷயங்களுக்கும் பொதுவானது என்பதை முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும்.

 

உதாரணமாக உடன் பிறந்த சகோதரியை மணப்பதும் அதில் ஒன்றாகும். "நடந்து முடிந்ததைத் தவிர'' என்பது இதற்கும் பொருந்தும்.

 

இஸ்லாத்தை ஏற்பதற்கு முன் தனது சொந்தச் சகோதரியை ஒருவர் மணந்திருந்தார் என்று வைத்துக் கொள்வோம். இவர் இஸ்லாத்தை ஏற்ற பின் அதைத் தொடரலாமா? என்று கேட்டால் கூடாது என்றே அனைவரும் கூறுகின்றனர். "நடந்து முடிந்ததைத் தவிர'' என்று கூறப்பட்டுள்ளதால் ஏற்கனவே நடந்த இந்தத் திருமணத்தைத் தொடரலாம் என்று யாரும் வாதிடுவதில்லை.

 

தவறான திருமணம் செய்ததால் ஏற்பட்ட பாவம் மன்னிக்கப்படுமே தவிர அந்தப் பாவத்தைத் தொடர்வது அனுமதிக்கப்படாது.

 

இதுபோல் அக்காவையும், தங்கையையும் திருமணம் செய்திருந்தவர்கள் இஸ்லாத்தை ஏற்றால் இருவரில் ஒருவரோடு மட்டுமே வாழ்க்கையைத் தொடர வேண்டும். ஏற்கனவே நடந்த குற்றம் மன்னிக்கப்படும்.

 

"நடந்து முடிந்ததைத் தவிர'' என்பதன் பொருள் ஏற்கனவே இந்த அருவருக்கத்தக்க செயலைச் செய்ததற்காகத் தண்டிக்கப்பட மாட்டார்கள் என்பது தான். அதே செயலைத் தொடர்ந்து செய்ய அனுமதிப்பது என்பது இதன் பொருளல்ல.

 

அதே போல் தந்தையின் மனைவியரையும் மணக்கக் கூடாது என்று இதற்கு முந்தைய வசனம் 4:22 கூறுகிறது. "நடந்து முடிந்ததைத் தவிர'' என்ற விதிவிலக்கு இவ்வசனத்திலும் கூறப்பட்டுள்ளது.

 

இஸ்லாத்தை ஏற்பதற்கு முன், அல்லது இஸ்லாமியச் சட்டத்தை அறிவதற்கு முன் தந்தையின் மனைவியை ஒருவன் மணந்திருந்தால், அந்த உறவைத் தொடரலாம் என்று இதைப் புரிந்து கொள்ளக் கூடாது. இதுவரை செய்த குற்றத்துக்காக அல்லாஹ் குற்றம் பிடிக்க மாட்டான் என்றே புரிந்து கொள்ள வேண்டும்.

 

இன்று எத்தனையோ இந்துக்கள் தமது அக்காள் மகளை மணந்து கொண்ட நிலையில் இஸ்லாத்தை ஏற்கின்றனர். இவர்கள் இஸ்லாத்தை ஏற்ற பின் திருக்குர்ஆன் தடை செய்துள்ள தகாத திருமண உறவிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும். "நடந்து முடிந்ததைத் தவிர'' என்பதைத் தவறாகப் புரிந்து கொண்டு தகாத திருமணத்தைத் தொடரக் கூடாது.

 

ஏனெனில் சகோதரி மகளும் மணமுடிக்கத் தடை செய்யப்பட்டவள் என்று இவ்வசனம் (4:23) கூறுகிறது.

 

இன்னொரு முக்கியமான விஷயத்தையும் நாம் மறந்து விடக் கூடாது. தகாத வகையில் திருமணம் செய்தவர் அவ்வுறவிலிருந்து விலகினால் தான் இஸ்லாத்தில் இணைய முடியும் என்பது நிபந்தனை இல்லை.

 

இஸ்லாத்தை ஏற்காவிட்டால் நிரந்தர நரகம் கிடைக்கும். இஸ்லாத்தை ஏற்பதன் மூலம் அதிலிருந்து அவர் நிச்சயம் தப்பித்துக் கொள்வார்.

 

தவறான திருமண உறவைத் தொடர்ந்ததற்காக அவரை அல்லாஹ் மன்னித்து விட்டால் தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்வார். அதை மன்னிக்காவிட்டால் அக்குற்றத்திற்கு என்ன தண்டனையோ அதைப் பெறுவார். நிரந்தர நரகத்தைப் பெற மாட்டார்.

 

பாரம்பரிய முஸ்லிம்களாக இருந்து கொண்டு தவறான செயல்களைச் செய்பவர் போல் இவர் கருதப்படுவார்.

 

எனவே இந்தச் சட்டத்தை மட்டும் தான் நாம் இத்தகையோருக்குக் கூற வேண்டும். திருமண உறவுகளை முறித்தால் தான் இஸ்லாத்தில் சேர முடியும் எனக் கூறக்கூடாது.

 

 








free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2019 tamilquran.in. Designed by Ahadh Media.
You 're visitors No. 227853