263. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விண்வெளிப் பயணம்

 

ஒரு இரவில், மஸ்ஜிதுல் ஹராம் என்ற மக்காவிலிருந்து, ஜெருஸலமில் உள்ள மஸ்ஜிதுல் அக்ஸா வரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அழைத்துச் சென்ற செய்தியை இவ்வசனத்தில் (17:1) அல்லாஹ் கூறுகிறான்.

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதை மேலும் விளக்கமாக பைத்துல் முகத்தஸில் இருந்து வின்னுலகத்துக்கு தான் அழைத்துச் செல்லப்பட்டதாகவும், ஒவ்வொரு வானத்தையும் கடந்து இறைவனின் ஏராளமான அத்தாட்சிகளைப் பார்த்ததாகவும், அல்லாஹ்வை நேரில் பார்க்காவிட்டாலும் அல்லாஹ்விடம் உரையாடியதாகவும், அப்போதுதான் ஐந்து வேளைத் தொழுகையை அல்லாஹ் கடமையாக்கியதாகவும் விளக்கியுள்ளனர்.

 

இது குறித்து முழுமையாக அறிய புகாரி 349, 3887 ஆகிய ஹதீஸ்களைப் பார்க்கலாம்.

 

ஒரு இரவில் ஏழு வானங்களையும் கடந்து சென்று விட்டு பல்வேறு அத்தாட்சிகளையும் பார்த்து விட்டு திரும்ப இயலுமா?

 

அப்படியானால் எவ்வளவு வேகத்தில் பயணம் செய்திருக்க முடியும்?

 

அவ்வளவு வேகத்தில் பயணம் செய்வதை மனிதனின் உடல் தாங்குமா?

 

என்பன போன்ற கேள்விகள் இதில் எழுப்பப்படலாம்.

 

இதில் எதுவுமே மனிதர்களுக்குச் சாத்தியமாகாது என்பது உண்மை தான். இப்பயணத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சுயமாக மேற்கொண்டார்கள் என்றால் நிச்சயமாக இது சாத்தியமில்லை தான்.

 

இப்பயணம் படைத்த இறைவனால் நிகழ்த்தப்பட்டதாகும். எதை நாடுகிறானோ அதைச் செய்ய வல்லவன் தான் இறைவன். இதுதான் இயலும். இந்த அளவுக்குத்தான் இயலும். இவை இயலாது என்ற நிலையில் இருந்தால் அவன் இறைவனாகவே இருக்க முடியாது.

 

வின்வெளிப் பயணம் பற்றி பேசும் இவ்வசனத்தில் தனது அடிமையான முஹம்மது நபியை ஒரு இரவில் அழைத்துச் சென்றவன் பலவீனங்களுக்கு அப்பாற்பட்ட தூயவன் என்று கூறப்படுகிறது.

 

தனக்கு எல்லாம் இயலும் என்பதைச் சொல்வதற்காகவே இதைப்பற்றி அல்லாஹ் பேசுகிறான் என்பதை இந்த வாக்கியத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். "இதைச் செய்தவன் இறைவனாகிய நான் தான்" என்று கூறி இந்த சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறான்.

 

இறைவனிடமிருந்து ஒரு விநாடி நேரத்துக்குள் வானவர் ஜிப்ரீல் இறைவனது கட்டளையைக் கொண்டு வருகிறார். இதை நாம் நம்புகிறோம். அங்கிருந்து இங்கே ஒரு விநாடிக்குள் வானவர் வருவதற்குப் பதிலாக இங்கிருப்பவர் வானுலகம் அழைத்துச் செல்லப்படுகிறார். இரண்டுக்கும் அடிப்படை ஒன்று தான்.

 

வானவர் என்பதால் அவர் ஒளிவேகத்தில் அதையும் மிஞ்சும் வேகத்தில் செல்ல முடியும். ஆனால் மனிதனுக்கு இது இயலுமா என்றால் மிஃராஜ் ஹதீஸில் இதற்கான விடை அடங்கியுள்ளது.

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை வானவர் அழைத்துச் செல்ல வந்தபோது புராக் எனும் வாகனம் கொண்டு வரப்பட்டதாக புகாரி 3887வது ஹதீஸிலும், இன்னும் பல ஹதீஸ்களிலும் கூறப்படுகிறது.

 

அதன் அளவைப் பற்றிக் கூறும்போது குதிரையை விட சற்று சிறியதாகவும், கோவேறுக் கழுதையை விட சற்று பெரிதாகவும் இருந்தது என்றும் அது கண்ணுக்கு எட்டிய தூரத்துக்கு ஒரு அடியை வைக்கும் எனவும் அந்த ஹதீஸ் கூறுகிறது.

 

ஒரு குதிரை அளவுக்கு உள்ள வாகனத்தினால் அதிகபட்சம் அரை மீட்டர் அளவுக்குத்தான் அடியெடுத்து வைக்க முடியும். கண்ணுக்கு எட்டிய தூரம் அடி எடுத்து வைக்கும் என்றால் இது காலடியைக் கூறவில்லை. அதன் பறக்கும் சக்தியைத்தான் கூறுகிறது. கண்ணுக்கு எட்டிய தூரத்துக்கு அடியை எடுத்து வைக்கும் என்றால் ஒளிவேகத்தில் பயணம் என்று பொருள்.

 

மின் ஆற்றல் மூலம் வேகமாகச் செல்லும் வாகனத்தை மனிதன் உருவாக்க முடிகிறது என்றால் அதையும் மிஞ்சும் சக்தி வாய்ந்த அதிவேகத்தில் செல்லும் வாகனத்தை உருவாக்குவது இறைவனுக்கு எளிதானது தான். இது போன்ற வாகனம் இல்லாமலே இறைவனால் வின்னுலகத்துக்கு அழைத்துச் செல்ல இயலும் என்றாலும் நாம் எளிதாக நம்பி ஏற்றுக் கொள்ளும் ஏற்பாடுகளையும் செய்து இறைவன் அருள் புரிந்துள்ளான்.

 

புராக் என்ற சொல்லுக்கு மின்னல் என்பது பொருள். இப்பெயரும் ஒளிவேகத்தில் செல்லும் வாகனம் என்பதை உறுதி செய்கிறது.

 

ஒளி வேகத்தில் பயணம் செய்தால் ஒரு இரவில் வின்னுலகம் சென்று வருவது சாத்தியமானது தான். அந்த வேகத்தில் செல்லும் வாகனம் மனிதனால் கண்டுபிடிக்கப்படாததால் தான் இது சாத்தியமில்லாததாகத் தெரிகின்றது.

 

வேகமாகச் செல்லும் வாகனம் என்றாலும் அந்த வேகத்தில் மனிதன் பயணித்தால் இதயம் வெடித்துச் சித்றிவிடுமே என்ற சந்தேகம் அடுத்து வரலாம்.

 

வின்வெளியில் பயணம் செய்பவனின் இதயம் இறுக்கமடைந்து விடும் என்பது உண்மை. இதைத் திருக்குர்ஆனே தெளிவாகச் சொல்லியும் இருக்கிறது.

 

(இது குறித்து அறிய 6:125வது வசனத்தையும் 72வது குறிப்பையும் காண்க!)

 

இறைவன் நாடினால் இதயம் வெடித்துச் சிதறாத வகையில் அழைத்துச் செல்ல முடியும் என்றாலும் மனிதர்கள் நம்புவதற்கு எளிதாக இருக்கும் பொருட்டு வின்வெளிப்பயணத்துக்கு அழைத்துச் செல்லும்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இதயத்தைப் பிளந்து சில மாற்றங்களை வானவர்கள் மூலம் அல்லாஹ் செய்தான்.

 

இது புகாரி 349, 3207 ஆகிய ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது.

 

வேகமாகப் பயணம் செல்லும்போது பாதிப்பு ஏற்படாத பாதுகாப்பு ஏற்பாடும் இதில் அடங்கி இருக்கலாம்.

 

அதாவது விரைவான பயணத்தை மேற்கொள்ளும்போது நபிகள் நாயகம் அவர்களைப் பாதிக்காத வகையில் அவர்களின் இதயத்தில் உரிய ஏற்படுகளை இறைவன் செய்து விட்டதால் அந்த வேகத்தை அவர்களால் தாங்கிக் கொள்ள முடிந்தது.

 

அல்லாஹ்வின் வல்லமையைப் புரிந்து அவனை நம்பும் மக்களுக்கு இது சாதாரணமானது தான்.

 

அடுத்து வழிகெட்ட ஒரு கூட்டத்தினர் மிஃராஜை மறுக்கின்றனர். அவர்களின் மறுப்பு சரியானது தானா என்பதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

 

மக்காவில் இருந்து ஜெருஸலம் வரை அழைத்துச் சென்றது தான் குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. அங்கிருந்து வின்வெளிக்கு அழைத்துச் சென்றதாக குர்ஆனில் கூறப்படவில்லை. எனவே ஜெருஸலம் வரை சென்றதை மட்டும் தான் நாம் நம்ப வேண்டும் என்பது தான் அவர்களின் வாதம்.

 

வின்வெளிப் பயணம் அறிவுக்கு எட்டவில்லை என்பதற்காக இவர்கள் மறுப்பார்களானால் மக்காவில் இருந்து ஜெருஸலம் சென்றதையும் அவர்கள் மறுக்க வேண்டும். அன்றைய காலத்தில் மனிதப் பார்வையில் அதுவும் சாத்தியமற்றது தான்.

 

குர்ஆனில் சொல்லபட்டதைத்தான் நம்புவோம் ஹதீஸில் சொல்லப்பட்டதை நம்ப மாட்டோம் என்பதற்காக அவர்கள் மறுத்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஹதீஸ்களும் வஹீதான் என்பதை 36, 39, 50, 55, 56, 57, 60, 67, 72, 105, 125, 127, 128, 132, 164, 244, 255, 256, 258, 267, 318, 329, 350, 352, 430 ஆகிய குறிப்புகளை வாசித்து அறிந்து கொள்ளட்டும்

 

மேலும் வின்னுலகப் பயணம் பற்றி குர்ஆனிலும் சொல்லப்பட்டு உள்ளதை 315, 267, 362 ஆகிய குறிப்புகளில் விளக்கியுள்ளோம்.

 

 








free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2019 tamilquran.in. Designed by Ahadh Media.
You 're visitors No. 227983