355. அணுகுண்டு பற்றிய முன்னறிவிப்பு

 

இந்த 105 வது அத்தியாயம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறப்பதற்கு முன்னர் மக்காவில் நடந்த ஓர் அதிசய நிகழ்வைக் கூறுகிறது.

 

இறைவனை வணங்குவதற்காக உலகில் முதன் முதலில் எழுப்பப்பட்ட ஆலயம் கஅபா ஆகும். இந்த ஆலயத்தில் வழிபாடு நடத்த திரளான மக்கள் வந்து செல்வதில் பொறாமைப்பட்ட அப்ரஹா என்ற மன்னன், கஅபாவை இடித்துத் தகர்க்க யானைப் படையுடன் வந்தான்.

 

கஅபா ஆலயத்தை யானைப் படையினர் அழித்து விடாமல் தடுத்து அபாபீல் எனும் பறவைகள் மூலம் இறைவன் அந்தப் படையினரை அழித்தான்.

 

அப்பறவைகள் சூடான சிறு கற்களை யானைப்படை மீது வீசி அவர்களை மெல்லப்பட்ட வைக்கோல் போல் ஆக்கி விட்டன.

 

இந்த வரலாற்றைத்தான் இந்த அத்தியாயம் குறிப்பிடுகின்றது.

 

இந்த நிகழ்ச்சி நடந்த ஆண்டில் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்த ஆண்டில் இது நடந்ததால் சிறு வயதிலேயே இந்த நிகழ்ச்சி பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டு அறிந்திருந்தார்கள்.

 

மக்காவைச் சேர்ந்த ஒவ்வொருவருக்கும் இது தெரிந்த நிகழ்ச்சியாகவே இருந்தது. இந்த நிகழ்ச்சி நடந்த பின் இதிலிருந்து மக்கள் ஆண்டுக் கணக்கைத் துவக்கினார்கள்.

 

அரபுகள் அனைவருக்கும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் இது நன்றாகத் தெரிந்திருக்கும்போது, அவர்களுக்கே இதைச் சொல்லிக் காட்டுவது தேவையில்லை.

 

அரபுகள் அறிந்து வைத்திருந்ததை விட மிகக் குறைவான விபரத்தைத்தான் இந்த அத்தியாயம் கூறுகின்றது.

 

எனவே இந்தச் சம்பவத்தை அவர்களுக்குச் சொல்வது இதன் நோக்கமில்லை.

 

மனிதர்கள் அறிந்து கொள்ள வேண்டிய, மனிதர்கள் சிந்திக்க வேண்டிய இரண்டு செய்திகள் இதில் உள்ளன; அவற்றைச் சிந்திக்கச் சொல்வது தான் இதன் நோக்கமாக இருக்க முடியும்.

 

கடந்த காலத்தில் நான் எனது அருளைச் சொரிந்து உங்களை அதிசயமான முறையில் பாதுகாத்தேன், அதை எண்ணிப் பார்த்து நன்றி செலுத்துங்கள் என்பது முதலாவது செய்தி.

 

இன்னொரு செய்தி ஆழமாகச் சிந்திக்கும்போது விளங்கும் செய்தி.

 

சிந்தனையைச் செலுத்த வேண்டிய ஒரு செய்தி இதனுள் அடங்கியிருக்கிறது என்பதற்காகவே நீர் கவனிக்கவில்லையா என்று இந்த அத்தியாயம் துவங்குகிறது.

 

யானை மிகப் பெரிய உயிரினம். அவற்றைச் சிறிய உயிரினமான பறவை இனம் அழித்த விதத்தைப் பற்றித்தான் இந்த அத்தியாயம் சிந்திக்கச் சொல்கிறது.

 

அப்பறவைகள் தமது அலகுகளில் தாங்கி வந்த கற்கள் சாதாரணக் கற்கள் அல்ல. அதிக வெப்பமுடைய கற்கள் என்று குர்ஆன் கூறுகின்றது.

 

இது வெளிவெப்பத்தைக் குறிக்காது. ஏனெனில், வெளிப்படையான வெப்பம் என்றால் யானைகளை அழிக்கும் அளவுக்கு வெப்பத்தைப் பலவீனமான அப்பறவைகளால் எப்படித் தாங்கியிருக்க முடியும்?

 

மேலும் வெளிவெப்பமுடைய கற்களாக இருந்தால் அவை தரையில் விழுவதற்குள் சூடு ஆறியிருக்கும். அக்கற்களால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது.

 

எனவே, கீழே விழுந்து வெடித்துச் சிதறும்போது ஏற்படும் வெப்பத்தையே இது குறிக்கிறது.

 

சக்தி வாய்ந்த அணுகுண்டுகளில் அதிக வெப்பம் இருந்தாலும் அவை வெடிக்கும்போதுதான் அந்த வெப்பம் பாதிப்பை ஏற்படுத்தும். வெடிக்காத வரை சாதாரண பொருளைப் போல் அவற்றைத் தொடலாம்.

 

இந்த நிகழ்ச்சியில், பறவைகள் வீசிய சிறு கற்கள் யானைப் படையைக் கூழாக ஆக்கி விட்டது என்றால் அக்கல்லுக்குள் கடுமையான சக்தி அழுத்தி வைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிகிறது.

 

இதைத்தான் இறைவன் இங்கு சிந்திக்கச் சொல்கிறான்.

 

உலகிலுள்ள அனைத்துப் பொருட்களும் அணுக்களால் ஆனவை. அந்த அணுக்களை உடைத்தால் அதில் இருந்து மாபெரும் சக்தி வெளிப்படும் என்று மனிதன் இப்போது கண்டுபிடித்து விட்டான்.

 

சிறிய அளவு அணுகுண்டு ஒரு ஊரையே அழிக்கப் போதுமானது என்று நிரூபித்துக் காட்டிவிட்டான். அந்தக் குண்டுகளை உயரமான இடத்திலிருந்து போட்டால் குண்டு வீசியவர்களைப் பாதிக்காது. தரையில் இருந்து போட்டால், குண்டு போட்டவர்களும் அழிந்து போய் விடுவார்கள்.

 

இந்த உண்மைகள் அனைத்தையும் உள்ளடக்கும் விதமாகத்தான் இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது.

 

மனிதர்களே! நீங்கள் முயற்சித்தால் அதிக வெப்பத்தை வெளிப்படுத்தும் சக்தியை சிறிய பொருளுக்குள் அடக்க முடியும். அப்பொருளை வெடிக்க வைத்து எதனையும் அழிக்க இயலும். உங்களுக்கு அழிவு ஏற்படாத வகையில் இதைச் செய்ய முடியும். இவற்றைப் பற்றிக் கொஞ்சம் சிந்தியுங்கள் என்று சொல்வது போல இந்த (105வது) அத்தியாயம் அமைந்துள்ளது.

 

மேலும் விபரத்திற்கு 412வது குறிப்பைக் காண்க!

 

 








free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2019 tamilquran.in. Designed by Ahadh Media.
You 're visitors No. 228310