44. பிறையைத் தீர்மானிப்பதில் கருத்து வேறுபாடு சரியா?

 

இவ்வசனத்தில் (2:185) "ரமளான் மாதம் பிறந்து விட்டால் நோன்பு நோற்க வேண்டும்'' என்று கூறாமல் "யார் ரமளானை அடைகிறாரோ அவர் நோன்பு நோற்கட்டும்'' என்று கூறப்பட்டுள்ளது.

 

பொதுவாக மாதம் துவங்குவதைப் பற்றிப் பேசும்போது இவ்வாறு யாரும் கூறுவதில்லை. திருக்குர்ஆன் தக்க காரணத்துடன் தான் வழக்கத்தில் இல்லாத ஒரு வார்த்தைப் பிரயோகத்தை இந்த இடத்தில் பயன்படுத்தியிருக்கிறது.

 

பிறை சம்பந்தமான முக்கியமான சான்றாக இந்த வசனம் அமைந்து உள்ளது.

 

திருக்குர்ஆன் ஏகஇறைவனின் வார்த்தை என்பதை நாம் அறிவோம். மனித வார்த்தைகளில் காணப்படும் தவறுகள் இறைவனின் வார்த்தைகளில் இருக்காது; இருக்கவும் முடியாது.

 

தேவையில்லாத ஒரு சொல் கூட அதில் இடம் பெறாது என்பதில் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் அழுத்தமான நம்பிக்கை உண்டு. இந்த நம்பிக்கையை மனதில் இருத்தி இந்த வசனத்தை ஆராய்வோம்.

 

உங்களில் யார் ரமளான் மாதத்தை அடைகிறாரோ அவர் ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது கடமை

 

என்ற சொற்றொடரில் உங்களில் யார் அம்மாதத்தை அடைகிறாரோ என்ற வாசகம் இல்லாமலே ரமளானில் நோன்பு நோற்பது கடமை என்ற கருத்து கிடைத்து விடும்

 

அப்படியானால் இந்தச் சொற்றொடரின் பயன் என்ன? நடைமுறை வழக்கத்தில் இது போன்ற வார்த்தைகளை யாருமே பயன்படுத்துவதில்லை.

 

ஃப

மன்

ஷஹித

மின்

கும்

அல்

ஷஹ்ர

 

(எனவே உங்களில் யார் அந்த மாதத்தை அடைகிறாரோ) ஆகிய ஏழு சொற்கள் தேவையை விட அதிகமாகப் பயன்படுத்தப்பட்டது போல் தோன்றுகிறது.

 

இந்தச் சொற்கள் ஒரு பயனும் இல்லாமல் ஒரு கருத்தையும் கூறாமல் வீணாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதா? நிச்சயமாக இல்லை. அல்லாஹ்வின் வேதத்தில் ஒரு வார்த்தையும் பொருளற்றதல்ல.

 

ரமளான் மாதத்தில் நோன்பு கடமை என்பதுடன் வேறு ஏதோ ஒரு செய்தியையும் சொல்வதற்காகவே இந்த வார்த்தைகளை அல்லாஹ் பயன்படுத்தியிருக்க வேண்டும். ஏனெனில் தேவையற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை விட்டும் அவன் தூயவன்.

 

உங்களில் யார் அம்மாதத்தை அடைகிறாரோ என்ற வாசகத்தில் இறைவன் கூற வரும் செய்தி என்ன என்பதை ஆராய்வோம்.

 

இதைப் புரிந்து கொள்வதற்கு இது போன்ற நடையில் பயன்படுத்தப்பட்ட சொற்றொடர்களை முன்மாதிரியாக நாம் எடுத்துக் கொள்ளலாம். இதற்கு முந்தைய வசனம் கூட இது போன்ற நடையில் தான் அமைந்திருக்கிறது. அதையே எடுத்துக் கொள்வோம்.

 

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன்சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. உங்களில் யார் நோயாளியாக இருக்கிறாரோ, அல்லது பயணத்திலிருக்கிறாரோ அவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளலாம். அதற்குச் சக்தியுள்ளவர்கள் ஓர் ஏழைக்கு உணவளிப்பது பரிகாரம். நன்மைகளை மேலதிகமாகச் செய்வோருக்கு அது நல்லது. நீங்கள் அறிந்தால் நோன்பு நோற்பதே சிறந்தது. (திருக்குர்ஆன் : 2:184)

 

உங்களில் யார் நோயாளியாக இருக்கிறாரோ அல்லது பயணத்தில் இருக்கிறாரோ அவர் வேறு நாட்களில் நோன்பு நோற்கட்டும் என்று இந்த வசனத்தில் இறைவன் கூறுகிறான்.

 

உங்களில் யார் நோயாளியாக இருக்கிறாரோ என்றால் நோயாளி அல்லாதவர்களும் உங்களில் இருப்பார்கள் என்ற கருத்து அதில் அடங்கியுள்ளது. எல்லோருமே நோயாளிகளாக இருந்தால் யார் நோயாளியாக இருக்கிறாரோ என்று பயன்படுத்த முடியாது.

 

இந்த வசனத்தைப் புரிந்து கொள்வது போல் யார் அம்மாதத்தை அடைகிறாரோ என்ற வாசகத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் இரண்டுமே ஒரே மாதிரியான நடையில் அமைந்த சொற்றொடர்களாகும் .

 

உங்களில் யார் அம்மாதத்தை அடைகிறாரோ என்றால் உங்களில் அம்மாதத்தை அடைந்தவர்களும் இருப்பார்கள்; அடையாதவர்களும் இருப்பார்கள் என்று தான் பொருள் கொள்ள வேண்டும்.

 

இந்த வசனங்களில் மட்டுமின்றி திருக்குர்ஆனின் எந்த வசனங்களில் யார் அடைகிறாரோ, யார் போகிறாரோ என்பது போல் பயன்படுத்தப்பட்டுள்ளதோ அத்தனை இடங்களையும் இப்படித்தான் புரிந்து கொள்ள முடியும்.

 

நேர்வழி பெறுபவர்கள், பெறாதவர்கள் என இரு சாரார் இருக்கும்போது தான் யார் எனது வழியைப் பின்பற்றுகிறாரோ (திருக்குர்ஆன் 2:38) என்று கூற முடியும்.

 

ஹஜ்ஜை மேற்கொள்பவர்களும் ஹஜ்ஜை மேற்கொள்ளாதவர்களும் இருக்கும்போது தான் யார் ஹஜ்ஜை மேற்கொள்கிறாரோ (திருக்குர்ஆன் 2:197) என்று கூற முடியும்.

 

குர்பானிப் பிராணியைப் பெற்றுக் கொள்பவர்களும் குர்பானிப் பிராணியைப் பெற்றுக் கொள்ளாதவர்களும் இருக்கும்போது தான் யார் குர்பானிப் பிராணியைப் பெற்றுக் கொள்ளவில்லையோ (திருக்குர்ஆன் 2.196) என்று கூற முடியும்.

 

இந்த நடையில் இன்னும் பல வாசகங்களைக் குர்ஆனிலும், நபிமொழிகளிலும் காணலாம். மனிதர்களின் பேச்சு வழக்கிலும் இத்தகைய வார்த்தைப் பிரயோகங்களைக் காணலாம்.

 

உங்களில் யார் பொய் சொல்லாமல் இருக்கிறார்களோ அவர்களுக்குப் பரிசுகள் தருவேன் என்று மனிதர்களிடம் கூறலாம். ஆனால் மலக்குகளைப் பார்த்து உங்களில் யார் பொய் சொல்லாமல் இருக்கிறார்களோ அவர்களுக்குப் பரிசுகள் தருவேன் என்று கூற முடியாது. அவ்வாறு கூறினால் மலக்குகளில் பொய் சொல்பவர்களும் உள்ளனர் என்ற கருத்து வந்து விடும்.

 

இந்த அடிப்படையில் தான் மேலே நாம் எடுத்துக் காட்டிய வசனத்தையும் ஆராய வேண்டும்.

 

* அம்மாதத்தை ஒருவர் அடைந்திருக்கும்போது மற்றவர் அடைந்திருக்க மாட்டார்.

 

* ஒருவர் ரமளானை அடைந்த பின் இன்னொருவர் ரமளானை அடைவார்.

 

இப்படி இருந்தால் மட்டுமே யார் ரமளானை அடைகிறாரோ என்று கூற முடியும்.

 

அனைவரும் ஒரே நேரத்தில் ரமளானை அடைகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். எல்லோருமே ரமலானை அடைந்திருக்கும்போது உங்களில் யார் அடைகிறாரோ எனக் கூறுவது வீணான வார்த்தைப் பிரயோகமாக அமைந்து விடும்.

 

மரணித்தவர் ரமளானை அடைய மாட்டார்; உயிரோடுள்ளவர் ரமளானை அடைவார் அல்லவா? இதை இறைவன் கூறியிருக்கலாம் அல்லவா? என்று சிலர் இதற்கு விளக்கம் கூறியுள்ளனர். இது ஏற்க முடியாத விளக்கமாகும். ஏனெனில் குர்ஆன் உயிருள்ளவனைப் பார்த்துப் பேசுவதாகும். உயிருள்ளவனை எச்சரிக்கை செய்வதற்காக அருளப்பட்டது.

 

'உங்களில்' என்று முன்னிலையில் பேசப்படுவது உயிருள்ளவர்களை நோக்கித்தான். உயிருள்ளவர்களில் தான் ரமளானை அடைந்தவர்களும், அடையாதவர்களும் இருப்பார்கள்.

 

நோன்பு மட்டுமின்றி குர்ஆனில் கூறப்பட்ட எல்லாக் கட்டளைகளும் உயிருடன் உள்ளவர்களுக்கு உரியது தான். நுண்ணறிவாளனாகிய அல்லாஹ், உங்களில் உயிரோடு உள்ளவர்கள் நோன்பு நோற்க வேண்டும். செத்தவர்கள் நோன்பு நோற்கத் தேவையில்லை என்று கூறுவானா?

 

யார் அம்மாதத்தை அடைகிறாரோ என்பதைக் கண்டு கொள்ளாமல் செல்பவர்களை விட இப்படி விவேகமற்ற விளக்கம் தருபவர்கள் தான் குர்ஆனை அதிகம் அவமதிப்பவர்கள்.

 

உலகில் உயிரோடு வாழும் மக்களில் ரமளானை அடைந்தவர்களும் இருக்கலாம். அடையாதவர்களும் இருக்கலாம். அடைந்தவர் நோன்பு பிடியுங்கள். அடையாதவர் எப்போது அடைகிறாரோ அப்போது நோன்பு பிடியுங்கள் என்பதே இதன் கருத்தாக இருக்க முடியும்.

 

ஒருவர் அடைந்து மற்றவர் அடையாமல் இருப்பாரா? அது எப்படி? என்று அறிவியல் அறிவு வளராத காலத்தில் கேட்கலாம். உலகம் தட்டை என்று எண்ணிக் கொண்டிருந்த காலத்தில் இவ்வாறு கேட்கலாம். இன்றைக்குக் கேட்க முடியாது.

 

ஏனெனில் உலக மக்கள் அனைவரும் ஒரே நேரத்தில் அல்லது ஒரே நாளில் ரமளானை அடைவதில்லை.

 

பிறையைப் பார்த்து மாதத்தின் முதல் நாளைத் தீர்மானிக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள். (பார்க்க: புகாரி 1906, 1909)

 

வானில் பிறை தோன்றி அதைக் கண்ணால் பார்க்கும்போது முதல் பிறை என்கிறோம். பிறை கண்ணுக்குத் தெரிவதற்குப் பல்வேறு அம்சங்கள் ஒருங்கிணைய வேண்டும்.

 

* பிறை பிறந்து குறைந்தது 15 முதல் 20 மணி நேரமாவது ஆகியிருக்க வேண்டும். இதற்குக் குறைவான நேரம் கொண்ட பிறையைக் கண்களால் காண முடியாது.

 

* சூரியன் மறைந்த பிறகு பிறை மறைய வேண்டும். சூரியன் மறைவதற்கு முன் பிறை மறைந்து விட்டால், பிறை வானில் இருந்தாலும் அதைக் காண முடியாமல் சூரிய ஒளி தடுத்து விடும்.

 

* மேகம் இல்லாமல் வானம் தெளிவாக இருக்க வேண்டும். மெல்லிய மேகம் கூட தலைப்பிறையை மறைத்து விடும்.

 

* சூரியன் மறைந்து சுமார் 20 - 30 நிமிடங்கள் கழித்து பிறை மறைய வேண்டும். ஏனெனில் சூரியன் மறைந்து அதன் ஒளி அடிவானத்தில் இருந்தால் அந்த வெளிச்சத்தை மீறி பிறை நம் கண்களுக்குத் தென்படாது.

 

* பார்ப்பவரின் கண்கள் குறைபாடு இல்லாமல் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் சிறிய வெண்மேகத்தைக் கூட அவர் பிறை என்று கருதி விடுவார்.

 

இது போன்ற பல காரணங்கள் ஒருங்கே அமைந்திருந்தால் மட்டுமே தலைப்பிறையைக் காண முடியும்.

 

ஒரு ஊரைச் சேர்ந்தவர்கள் பிறையின் வயது 14 மணியாக இருக்கும்போது சூரியன் மறையும் நேரத்தை அடைகிறார்கள். இவர்களின் ஊருக்கு நேராக பிறை இருந்தாலும் உரிய நேரத்தை அப்பிறை அடையாததால் அது இவர்களின் கண்களுக்குத் தென்படாது.

 

உதாரணமாக சிங்கப்பூரைச் சேர்ந்தவர்கள் சூரியன் மறையும் நேரத்தை அடையும்போது பிறையின் வயது 14 மணியாக இருந்தால் அது அவர்களின் கண்களுக்குத் தென்படாது.

 

சென்னையை விட சிங்கப்பூர் இரண்டரை மணி நேரம் முந்தி உள்ளது. எனவே சென்னைவாசிகள் இரண்டரை மணி நேரம் கழித்தே சூரியன் மறையும் நேரத்தை அடைவார்கள். இந்த இரண்டரை மணி நேரத்தில் பிறையின் வயதும் இரண்டரை மணி நேரம் அதிகமாகி விடும். 14+2.30=16.30 மணி வயதை பிறை அடைந்து விடும். இது கண்ணால் காண்பதற்குரிய அளவாகும்.

 

சூரியன் மறைந்தவுடன் மாலை ஆறு மணிக்கு நாம் சென்னையில் தலைப் பிறையைப் பார்க்கிறோம். இவ்வாறு நாம் பிறை பார்க்கும் நேரத்தில் சிங்கப்பூரில் இரவு சுமார் எட்டரை மணியாக இருக்கும்.

 

நாம் பிறை பார்த்து விட்டதால் நாம் ரமளானை அடைந்து விட்டோம். சிங்கப்பூர்வாசிகள் பிறை பார்க்காமலே பிறை பார்க்கும் நேரத்தைக் கடந்ததால் அவர்கள் ரமளானை அடையவில்லை. மறுநாள் தான் அவர்கள் பிறையைப் பார்க்க முடியும். எனவே மறுநாள் தான் அவர்கள் ரமளானை அடைகிறார்கள். இப்படி இரண்டு ஊரைச் சேர்ந்தவர்களும் இரு வேறு நாட்களில் ரமலானை அடைகிறார்கள்.

 

சென்னையில் பிறை பார்த்ததால் சிங்கப்பூருக்கும், ஏன் உலக முழுமைக்கும் ரமளான் பிறந்து விட்டது என்று யாரேனும் வாதிட்டால் அவர்கள் இவ்வசனத்தின் கருத்தை நிராகரித்தவர்களாகிறார்கள்.

 

ஏனெனில் இந்தக் கருத்துப்படி அனைவரும் ஒரு நேரத்தில் ரமளானை அடைந்து விட்டனர் என்று ஆகிறது. யார் அடைகிறாரோ என்ற அல்லாஹ்வின் வார்த்தை அர்த்தமற்றதாக ஆக்கப்படுகிறது.

 

* உலகின் ஒரு பகுதியில் பிறை காணப்பட்டால் முழு உலகுக்கும் ரமளான் வந்து விட்டது என்ற வாதத்தை இவ்வசனம் அடியோடு நிராகரிக்கிறது.

 

* உலகின் ஒரு பகுதியில் பிறை காணப்பட்ட தகவல் கிடைத்தால் முழு உலகுக்கும் ரமளான் வந்து விட்டது என்ற வாதத்தையும் இவ்வசனம் அடியோடு நிராகரிக்கிறது.

 

* உலகின் ஏதோ ஒரு பகுதியில் பிறை இன்று தோன்றும் என்று கணிக்கப்படுகிறது. அவ்வாறு கணிக்கப்பட்டால் அது அப்பகுதியில் மட்டுமின்றி அகில உலகுக்கும் தலைப்பிறையாகும் என்ற வாதத்தையும் இவ்வசனம் அடியோடு நிராகரிக்கின்றது.

 

எல்லோரும் ஒரே நேரத்தில் மாதத்தை அடைய மாட்டார்கள் என்பது திருக்குர்ஆன் கருத்து.

 

இவ்வசனம் தலைப்பிறையை எவ்வாறு தீர்மானிக்க வேண்டும் என்பதைக் கூறாவிட்டாலும் 'எவ்வாறு தீர்மானிக்கக் கூடாது' என்பதைக் கூறுகிறது. உலகம் முழுவதும் ஒரே பெருநாள் என்ற கருத்து ஏற்புடையதல்ல என்றும் பிரகடனம் செய்கிறது.

 

யார் அடைகிறாரோ என்று நாம் மொழியாக்கம் செய்த இடத்தில் ஷஹித என்ற அரபுச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

 

இது குறித்து சிலர் எழுப்புகின்ற ஆட்சேபணைகளைப் பார்ப்போம்.

 

ஃபமன் ஷஹித என்பதற்கு யார் அடைகிறாரோ என்று பொருள் கிடையாது என்று ஆட்சேபணை செய்கின்றனர். யார் பயணத்தில் இல்லாமல் இருக்கிறாரோ என்பது தான் இதன் பொருள் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

 

தமிழில் வெளியான அனைத்து திருக்குர்ஆன் மொழிபெயர்ப்புகளிலும் "யார் அம்மாதத்தை அடைகிறாரோ'' என்றே தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.

 

ஷஹித என்பதன் நேரடியான பொருள் அடைந்தான் என்பது தான். யார் அம்மாதத்தை அடைகிறாரோ என்றுதான் எல்லா விரிவுரையாளர்களும் விளக்கம் அளித்துள்ளனர்.

 

அன்றைக்கு இருந்த வானியல் அறிவின்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு நேரத்தில் அம்மாதத்தை அடைவார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியாததால் இதற்கு வேறு விளக்கம் கொடுப்பது தான் சரியாக இருக்கும் என்று சில விரிவுரையாளர்கள் கருதினார்கள்.

 

யார் நோயாளியாக இல்லாமல் பயணத்தில் இல்லாமல் இருக்கிறாரோ என்று விளக்கம் கொடுத்தால் பொருத்தமாக இருக்கும் என்று கருதி அவ்வாறு விளக்கம் கொடுத்தார்கள். அது அவர்கள் சுயமாகக் கொடுத்த விளக்கம் தானே தவிர ஷஹித என்ற வார்த்தைக்கே அந்த அர்த்தம் கிடையாது.

 

ஃபமன் ஷஹித என்ற வார்த்தைக்கு யார் அடைகிறாரோ என்பது தான் நேரடிப் பொருள். நேரடிப் பொருள் பொருத்தமானதாக அவர்களுக்குத் தோன்றாததால் வேறு விளக்கம் கொடுத்தனர். அன்றைய அறிவியல் அறிவுக்கேற்ப அப்படித்தான் அவர்களால் விளக்கம் கொடுக்க முடியும்.

 

ஷஹித என்பதற்கு நேரடியான பொருள் என்ன என்பதைப் புரிந்து கொள்ள இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் கூற்றை சான்றாகக் கொள்ளலாம்.

 

ஊரில் இருக்கும்போது ரமளானை அடைந்தால் அவர் நோன்பு நோற்க வேண்டும். பயணத்தில் இருக்கும்போது ரமளானை அடைந்தால் விரும்பினால் நோன்பு நோற்கலாம். விரும்பினால் விட்டுவிடலாம் என்று இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்கள். நூல்: தப்ஸீர் தப்ரீ

 

இங்கே அடைந்தால் என்று இரு இடங்களில் நாம் தமிழாக்கம் செய்துள்ளோம். அந்த இரு இடங்களிலும் இப்னு அப்பாஸ் (ரலி), 'ஷஹித' என்ற வார்த்தையைத்தான் பயன்படுத்தியுள்ளார்கள்.

 

ஷஹித என்ற வார்த்தைக்கு ஊரில் இருப்பது என்பது பொருளாக இருந்தால் பிரயாணியாக இருக்கும்போது ஊரில் இருந்தால் என்ற கருத்து வரும். இது உளறலாக அமைந்து விடும். பிரயாணியாக இருக்கும்போது ஊரில் இருக்க முடியாது.

 

ஆக ஷஹித என்பதற்கு யார் அடைகிறாரோ என்று நாம் பொருள் செய்திருப்பது நூறு சதவிகிதம் சரியானது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

 

நேரடியான பொருளைக் கொடுத்து அது பொருந்தியும் போகிறதென்றால் வேறு எந்த விளக்கவுரையும் தேவையில்லை.

 

இன்னும் சிலர் வேறு விதமாக ஆட்சேபிக்கின்றனர்.

 

யார் அம்மாதத்திற்கு சாட்சியாக இருக்கிறாரோ அவர் நோன்பு நோற்கட்டும் என்பதுதான் இதன் பொருள் என்று அவர்கள் கூறுகின்றனர்.

 

ஷஹித என்பதற்கு அடைந்தான் என்று பொருள் உள்ளது போல் சாட்சி கூறினான் என்ற பொருளும் உண்டு என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இந்த வசனத்தில் இவ்வாறு பொருள் கொள்ள முடியாது. பொருள் கொள்ளக் கூடாது.

 

பல அர்த்தங்களைக் கொண்ட சொற்கள் எல்லா மொழிகளிலும் உண்டு. அதற்காக அந்த அர்த்தங்களில் எதை நாம் விரும்புகிறோமோ அதைச் செய்து விட முடியாது. அச்சொல் பயன்படுத்தப்பட்ட இடத்தையும், எந்த அர்த்தம் பொருத்தமாக இருக்கிறது என்பதையும் கவனித்துத்தான் பொருள் செய்ய வேண்டும்.

 

யார் சாட்சியாக உள்ளாரோ அவர் நோன்பு நோற்கட்டும் என்று பொருள் கொண்டால் ஊரில் நாலைந்து பேர் தான் நோன்பு நோற்க வேண்டும். ஏனெனில் ஊரில் உள்ள எல்லா மக்களும் பிறை பார்த்ததாக சாட்சி கூற மாட்டார்கள். எல்லா மக்களும் பிறை பார்க்க மாட்டார்கள். எனவே, "யார் சாட்சியாக இருக்கிறாரோ'' என்ற அர்த்தத்தைச் செய்தால் 99 சதவிகிதம் மக்கள் நோன்பு நோற்கத் தேவையில்லை என்ற விபரீதமான கருத்து வந்து விடும்.

 

எனவே இவ்வசனத்தைக் கவனமாகச் சிந்தித்தால் அனைவரும் ஒரே நாளில் ஒரே நேரத்தில் ரமளானை அடைவார்கள் என்ற கருத்தைத் தரும் அனைத்து வாதங்களும் தவறானவை என்பது தெளிவாகும்.

 

 








free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2019 tamilquran.in. Designed by Ahadh Media.
You 're visitors No. 44927