79. இறந்தவருக்கு ஆற்றல் உள்ளதா?

 

இவ்வசனத்தில் (2:259) நல்லடியார் ஒருவரின் அற்புத வரலாற்று நிகழ்ச்சி கூறப்படுகிறது. நல்லடியார் ஒருவரை அல்லாஹ் நூறு ஆண்டுகள் மரணிக்கச் செய்கிறான். அடக்கம் செய்யப்படாமல் பூமியின் மேற்பரப்பிலேயே அவரது உடல் கிடந்தது.

 

ஆயினும் தாம் எத்தனை ஆண்டுகள் இவ்வாறு இருந்தோம் என்பதை அவரால் அறிய இயலவில்லை. ஒரு நாள் தூங்கியதாகவே அவர் நினைக்கிறார். பூமிக்குள் அடக்கம் செய்யப்படாமல் பூமியின் மேற்பரப்பிலேயே இந்த நல்லடியாரின் உடல் இருந்தும் தனக்கு என்ன நேர்ந்தது என்பதை அவரால் அறிய முடியவில்லை என்றால் பூமிக்குள் அடக்கம் செய்யப்பட்டவர்கள் எவ்வாறு இவ்வுலகில் மற்றவர்களின் நிலைகளை அறிவார்கள் என்பதைச் சிந்திக்க வேண்டும்.

 

இறந்தவர்களிடம் சில முஸ்லிம்கள் பிரார்த்தனை செய்கின்றனர். அவர்கள் இறந்து அடக்கம் செய்யப்பட்டுப் பல ஆண்டுகள் உருண்டோடினாலும் அவர்களிடம் பிரார்த்தனை செய்கிறார்கள். இவ்வாறு பிரார்த்தனை செய்வது சரியானதல்ல என்பதை இந்த நிகழ்ச்சியில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

 

மேலும் இவ்வசனத்தில் குறிப்பிடப்படும் இவர் நல்லடியார் என்று நம்மால் உறுதியாகச் சொல்ல முடியும். ஆனால் தர்காக்களில் அடக்கம் செய்யப்பட்டவர்கள் அனைவரும் நல்லடியார்களாகத்தான் இருப்பார்கள் என்று எந்த உறுதியும் கூற முடியாது. மறுமையில் தான் அது பற்றிய விபரம் தெரியும். எனவே சமாதிகளில் வழிபாடுகள் நடத்துவோருக்கு எதிராக இந்த ஒரு வசனமே போதுமானதாகும்.

 

தர்கா வழிபாட்டை நியாயப்படுத்துவோரின் இதர வாதங்கள் எப்படி தவறானவை என்பதை அறிந்து கொள்ள 17, 41, 49, 83, 100, 104, 121, 122, 140, 141, 193, 213, 215, 245, 269, 298, 327, 397, 427, 471 ஆகிய குறிப்புகளையும் காண்க!

 

 








free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2019 tamilquran.in. Designed by Ahadh Media.
You 're visitors No. 256514