287. குர்ஆன் கூறும் பெருவெடிப்புக் கொள்கை

 

இவ்வசனத்தில் (21:30) வானம், பூமி அனைத்தும் ஒரே பொருளாக இருந்தது; அதை நாமே பிளந்தெடுத்தோம் என்று கூறப்படுகின்றது.

 

அதன் பின்னர் புகை மண்டலம் ஏற்பட்டதையும், அதைத் தொடர்ந்து வானம் மற்றும் கோள்கள் உருவாக்கப்பட்டதையும் 41:11 வசனம் கூறுகின்றது.

 

இந்த உலகம் எவ்வாறு படைக்கப்பட்டது என்பது பற்றி பலவிதமான கட்டுக் கதைகளைத்தான் முந்தைய நூல்கள் கூறுகின்றன.

 

திருக்குர்ஆனோ இன்றைய விஞ்ஞானிகள் சொல்கின்ற அதே கருத்தை 1400 ஆண்டுகளுக்கு முன்பே கூறியது.

 

இந்தப் பிரபஞ்சம் முழுவதும் ஒரேயொரு சிறிய பொருளுக்குள் அடக்கப்பட்டிருந்தது. திடீரென அது வெடித்துச் சிதறியதால் அதன் துகள்கள் புகை மண்டலமாகப் பிரபஞ்சம் முழுவதும் பரவியது. பின்னர், அந்தத் துகள்கள் ஆங்காங்கே ஒன்று திரண்டு சூரியனாகவும், இன்னபிற கோள்களாகவும், துணைக்கோள்களாகவும், கோடானுகோடி விண்மீன்களாகவும் உருவாயின.

 

இதைத்தான் இன்றைய அறிவியல் உலகமும் சொல்கிறது. இந்தப் பேருண்மை 1400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு மனிதருக்கு எப்படித் தெரியும்? படைத்த இறைவனின் வார்த்தையாகத் திருக்குர்ஆன் இருந்தால் மாத்திரமே இதைக் கூற முடியும்.

 

எனவே திருக்குர்ஆன் இறைவேதம் என்பதற்கு இதுவும் சான்றாக அமைந்திருக்கிறது.

 

இது தொடர்பாக 353வது குறிப்பையும் காண்க!

 

 








free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2019 tamilquran.in. Designed by Ahadh Media.
You 're visitors No. 228107