379. இறைவனல்லாதவர்கள் மீது சத்தியம் செய்யலாமா?

 

திருக்குர்ஆனில் எராளமான வசனங்களில் சூரியன், சந்திரன், பகல், இரவு, காலம் போன்ற பலவற்றின் மீது இறைவன் சத்தியம் செய்து கூறுகிறான்.

 

அந்த வசனங்கள் வருமாறு:

 

16:72, 19:68, 25:44, 37:1, 37:2, 37:3, 43:2, 44:2, 51:1, 51:7, 52:1, 52:2, 52:4, 52:5, 52:6, 68:1, 77:2, 77:3, 77:5, 81:17, 81:18, 84:17, 85:1, 85:2, 85:3, 86:1, 86:11, 86:12, 89:1, 89:2, 89:3, 89:4, 90:3, 91:1, 91:2, 91:3, 91:4, 91:5, 91:6, 91:7, 92:1, 92:2, 92:3, 93:1, 93:2, 95:1, 95:2, 95:3, 100:5, 103:1

 

அல்லாஹ் இப்படி பலவற்றின் மீது சத்தியம் செய்வதால் நாமும் எந்தப் பொருளின் மீதும் சத்தியம் செய்யலாம் என்று புரிந்து கொள்ளக் கூடாது.

 

ஏனெனில் அல்லாஹ் அல்லாத எவர் மீதும், எதன் மீதும் சத்தியம் செய்வதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்.

 

"யாரேனும் சத்தியம் செய்வதாக இருந்தால் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்யட்டும். அல்லது மௌனமாக இருக்கட்டும்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி 2679)

 

"எச்சரிக்கை! யாரேனும் சத்தியம் செய்வதாக இருந்தால் அல்லாஹ்வைத் தவிர எவர் மீதும் சத்தியம் செய்ய வேண்டாம்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். குரைஷிகள் தங்கள் தந்தையர் மீது சத்தியம் செய்து வந்தனர். இதைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "உங்கள் தந்தையர் மீது சத்தியம் செய்யாதீர்கள்'' எனக் கூறினார்கள். (நூல்: புகாரி 3836)

 

ஒரு மனிதர் "கஅபாவின் மேல் ஆணையாக'' என்று கூறி சத்தியம் செய்ததை இப்னு உமர் (ரலி) செவியுற்றார்கள். இதைக் கேட்டவுடன் "அல்லாஹ் அல்லாதவர் மீது சத்தியம் செய்யக் கூடாது'' என்று கூறினார்கள். மேலும் "யார் அல்லாஹ் அல்லாதவர் மீது சத்தியம் செய்கிறாரோ அவர் இணைகற்பித்து விட்டார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றுள்ளேன்'' எனவும் கூறினார்கள். (நூல்: திர்மிதீ 1455)

 

தாய் தந்தையர் மீதோ, குர்ஆன் மீதோ, வேறு எதன் மீதோ சத்தியம் செய்யக் கூடாது. அவ்வாறு செய்வது அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கும் மாபெரும் குற்றத்தில் அடங்கும்.

 

அப்படியானால் இறைவன் ஏன் பலவற்றின் மீது சத்தியம் செய்கிறான் என்ற காரணத்தை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

 

மனிதர்கள் சத்தியம் செய்வதற்கான காரணமும், இறைவன் சத்தியம் செய்வதற்கான காரணமும் வெவ்வேறாகும்.

 

நாம் நமது கூற்றில் உண்மையாளர்களாக இருக்கிறோம் என்பதை நிரூபிப்பதற்காகத்தான் நாம் சத்தியம் செய்து கூறுகிறோம்.

 

நான் கூறுவது முற்றிலும் உண்மையே! நான் பொய் கூறினால் அல்லாஹ்வுக்கு அது தெரியும். இதற்கு அல்லாஹ்வையே சாட்சியாக்குகிறேன் என்ற கருத்திலேயே நாம் சத்தியம் செய்கிறோம். நான் பொய் சொன்னால் அல்லாஹ் எனக்குத் தண்டனை வழங்கட்டும் என்ற கருத்தும் இதனுள் அடங்கியுள்ளது.

 

"சூரியன் மீது சத்தியமாக நான் சொல்வது உண்மை" என்று நாம் சொல்வதாக வைத்துக் கொள்வோம். நாம் உண்மை சொல்கிறோமா பொய் சொல்கிறோமா என்பது சூரியனுக்குத் தெரியும் என்ற நம்பிக்கை அதன் பின்னால் உள்ளது. அல்லாஹ்வுக்கு எப்படி நான் சொல்வது உண்மையா அல்லவா என்பது தெரியுமோ அது போல் சூரியனுக்கும் தெரியும் என்ற நம்பிக்கை இதனுள் அடங்கியுள்ளதால் இது இணைவைத்தலில் சேர்ந்து விடுகிறது.

 

எனவே நாம் எந்தச் சத்தியம் செய்வதாக இருந்தாலும் அல்லாஹ்வின் மீது மட்டுமே செய்ய வேண்டும். அல்லாஹ்வைத் தவிர எதன் மீதும், எவர் மீதும் சத்தியம் செய்வது கடுமையான குற்றமாகும்.

 

ஆனால் இறைவன், இது போன்ற காரணங்களுக்காகச் சத்தியம் செய்வதில்லை. இறைவனைக் கண்காணித்து, கட்டுப்படுத்தும் ஒரு சக்தி இருந்தால்தான் இந்தக் காரணத்திற்காக இறைவன் சத்தியம் செய்ய முடியும். இறைவனை மிஞ்சிய ஒரு சக்தி இல்லாததால், சில பொருட்களின் மீது இறைவன் சத்தியம் செய்வது, அப்பொருட்களின் சிறப்பையும், முக்கியத்துவத்தையும் நமக்கு உணர்த்துவதற்காகத்தான்.

 

எனவே இறைவன் ஒரு பொருள் மீது சத்தியம் செய்தால் அப்பொருள் முக்கியமானது என்று மட்டுமே அர்த்தம்.

 

மனிதன் ஒரு பொருள் மீது சத்தியம் செய்தால், தனக்கு மேலுள்ள கடவுளாக அந்தப் பொருளைக் கருதுகிறான் என்று அர்த்தம். எனவே இறைவன் மற்ற பொருட்கள் மீது சத்தியம் செய்வதைச் சான்றாகக் கொண்டு நாமும் அது போல் செய்யக் கூடாது.

 

 
free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2019 tamilquran.in. Designed by Ahadh Media.
You 're visitors No. 159588