445.வேதத்தை வியாபாரமாக்குதல்

 

இவ்வசனங்களில் (2:41, 2:174, 2:187, 3:199, 5:44, 9:9) அல்லாஹ்வின் வசனங்களை அற்பவிலைக்கு விற்கக் கூடாது எனக் கூறப்பட்டுள்ளது.

 

திருக்குர்ஆனை அல்லது அதன் தமிழாக்கத்தை அச்சிட்டு விற்பனை செய்வதை இது குறிக்காது.

 

அல்லாஹ்வின் வசனங்களை யூதர்கள் வியாபாரமாக ஆக்கியதைக் கண்டித்துத்தான் மேற்கண்ட வசனங்கள் அருளப்பட்டன. யூதர்கள் தங்களின் வேதப்புத்தகத்தை அச்சிட்டு விற்பனை செய்து கொண்டிருந்ததைக் கண்டித்து இவ்வசனம் பேசவில்லை என்பது எளிதில் விளங்கும் உண்மையாகும்.

 

அந்தக் காலத்தில் நூல்களை அச்சிடுவதும், அதை வியாபாரம் செய்வதும் கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே புத்தக வியாபாரம் குறித்து இவ்வசனம் பேசவில்லை என்பதில் சந்தேகம் இல்லை.

 

அல்லாஹ்வின் வசனங்களை அற்ப விலைக்கு விற்காதீர்கள் என்பது நேரடிப் பொருளில் பயன்படுத்தப்படவில்லை. மாறாக வேதத்தில் உள்ளதை உள்ளபடி மக்கள் மத்தியில் சொன்னால் அதற்காக மறுமையில் மகத்தான கூலி கிடைக்கும். அவ்வாறு செய்யாமல் உலக ஆதாயம் கருதி வேதத்தில் உள்ளதை மறைப்பது தான் இங்கே வியாபாரம் என்று கூறப்படுகிறது.

 

இதன் கருத்து என்ன என்பதை 3:187வது வசனம் தெளிவுபடுத்துகிறது. அல்லாஹ்வின் வசனங்களை மறைத்து அற்பக் கிரயத்துக்கு விற்று விடாதீர்கள் என இவ்வசனம் கூறுகிறது. அற்பக் கிரயத்துக்காகவும், மனிதர்களுக்கு அஞ்சியும் வேதத்தை மறைப்பதும், வேதத்தில் உள்ளபடி தீர்ப்பளிக்காமல் இருப்பதும் தான் வேதத்தை வியாபாரமாக்குதல் என்பதன் கருத்தாகும்

 

மேற்கண்ட வசனங்களில் இருந்தே இது தெரிய வரும்.

 

குர்ஆனை அச்சிட்டு விற்பனை செய்வதும், அதன் தமிழாக்கத்தையும், போதனைகளையும் அச்சிட்டு விற்பதும் குர்ஆனை விற்பதில் அடங்காது.

 

அச்சுத் தொழில், புத்தக விற்பனை என்பனவற்றில் தொழில் என்ற முறையில் முதலீடு செய்யப்படுகின்றது. அச்சிடுவோர், அச்சுக் கோர்ப்போர், பைண்டிங் செய்வோர் ஆகியோருக்குச் சம்பளம் கொடுக்கப்படுகிறது.

 

மேலும் அச்சிடப்பட்ட நூல்களைப் பாதுகாத்து வைக்கவும் விற்பனை செய்யவும் தேவைப்படும் இடத்துக்காக வாடகை கொடுக்க வேண்டும்; அதற்காக ஊழியரை நியமித்து சம்பளம் கொடுக்க வேண்டும்; மின் கட்டணம் செலுத்த வேண்டும்.

 

எனவே தொழில் என்ற முறையில்தான் இதை எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர குர்ஆனை விற்பது என்ற குற்றத்தில் அடங்காது.

 

இன்னும் சொல்லப்போனால் வேதம் மக்களிடம் சென்றடைய வேண்டுமானால் இப்படிச் சிலராவது முயற்சித்தால் தான் சென்றடைய முடியும். வேதத்தை அச்சிட்டு விற்கக் கூடாது என்றால் வேதம் மக்களுக்குக் கிடைக்காமல் போய் விடும்.

 

 
free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2019 tamilquran.in. Designed by Ahadh Media.
You 're visitors No. 159527