350. வஹீ மூன்று வகைப்படும்

 

இவ்வசனத்தில் (42:51) இறைவன் தனது தூதுச்செய்தியை மூன்று வழிகளில் மனிதர்களுக்கு அருளுவான் எனக் கூறப்படுகிறது.

 

* வஹீயின் மூலம் பேசுவது

 

* திரை மறைவிலிருந்து நேரடியாகப் பேசுவது

 

* தூதரை அனுப்பி அவர் மூலம் செய்தியைத் தெரிவிப்பது

 

ஆகியவை அம்மூன்று வழிகளாகும்.

 

இரண்டாவதாகக் கூறப்படும் திரை மறைவிலிருந்து நேரடியாகப் பேசுதல் என்பதற்கு மூஸா (அலை) அவர்களுடன் அல்லாஹ் நேருக்குநேர் உரையாடியதை உதாரணமாகக் கூறலாம்.

 

மூஸா (அலை) அவர்கள் இறைவனை நேரில் பார்க்காவிட்டாலும் அல்லாஹ் கூறியதைத் தமது செவிகளால் கேட்டார்கள் என்பதை 4:164, 7:143,144, 19:51,52, 28:30, 20:11,12,13 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.

 

ஒரு தூதரை அனுப்பி அவர் வழியாக இறைவன் பேசுவான் என்பது, ஜிப்ரீல் போன்ற வானவர்கள் மூலம் இறைத்தூதர்களுக்குச் செய்தி அறிவிப்பதாகும். இதை 2:97, 3:39, 3:42, 3:45, 11:69, 11:77, 15:52,53, 15:61,62, 16:2, 16:102, 19:19, 20:21, 22:75, 26:193, 29:31, 51:28, 53:56, 81:19 ஆகிய வசனங்களில் இருந்து அறியலாம். திருக்குர்ஆனும் இந்த வகையான இறைச் செய்திதான்.

 

மனிதர்களுடன் அல்லாஹ் பேசுவதற்குரிய மூன்று வழிகளில் நேரடியாகப் பேசுவது என்பதன் பொருள் நமக்கு விளங்குகிறது. வானவர்கள் வழியாகச் சொல்லி அனுப்புவதன் பொருளும் நமக்கு விளங்குகிறது. வஹீயின் மூலம் பேசுதல் என்ற மூன்றாவது வகை என்பது என்ன? இதைத் தான் விளக்க வேண்டியுள்ளது.

 

பொதுவாக வஹீ எனும் சொல் இறைவன் புறத்திலிருந்து வழங்கப்படும் அனைத்து வகைச் செய்திகளையும் குறிக்கும் என்றாலும் இவ்வசனத்தில் அவ்வாறு பொதுவான கருத்தைக் கொடுக்க முடியாது.

 

இரண்டு வகையான வஹீயை வேறு வார்த்தைகளால் கூறிவிட்டு மூன்றாவதாக "வஹீயின் மூலம்'' எனக் கூறப்பட்டுள்ளதால் அவ்விரண்டு வகையிலும் சேராத மற்றொரு வகை வஹீயை மட்டுமே இது குறிக்க முடியும். இவ்விரு வகை தவிர ஏதேனும் வஹீ இருக்கிறதா என்றால் "தான் கூற விரும்புவதைத் தனது தூதரின் உள்ளத்தில் இறைவன் பதிவு செய்தல்'' என்பது தான் அந்த மூன்றாவது வஹீ.

 

வஹீயில் இப்படி ஒரு வகை உள்ளது என்பதைத் திருக்குர்ஆன் சொல்லிக் காட்டுகிறது.

 

தேனீக்கள் எவ்வளவு தொலைவு பறந்து சென்றாலும் எவ்விதத் தடுமாற்றமும் இல்லாமல் தமது கூட்டுக்கு வந்து விடும் என்பதைப் பற்றி திருக்குர்ஆன் பேசும்போது 16:68 வசனத்தில் "தேனீக்களுக்கு உமது இறைவன் வஹீ அறிவித்தான்'' என்று கூறுகிறது.

 

அதாவது, தான் கூற விரும்பும் செய்தியைத் தேனீக்களுக்கு உள்ளுணர்வாக இறைவன் ஏற்படுத்தினான் என இவ்வசனம் கூறுகிறது. இது போன்ற வஹீ மூலமும் இறைவன் தனது தூதர்களிடம் பேசுவான். இது மூன்றாவது வகையாகும்.

 

இந்த மூன்று வகையான வஹீயையும் நம்புபவர் தான் உண்மையில் குர்ஆனை நம்பியவராவார்.

 

இதை விடுத்து, குர்ஆன் மட்டும் போதும் என யாரேனும் வாதிட்டால் அவர்கள் மூன்று வகைகளில் வானவர் வழியாக வந்த ஒரு வகையை மட்டுமே நம்புகிறார்கள். மற்ற இரு வகைகளை மறுக்கிறார்கள். அதாவது இறைவன் நேருக்கு நேராகப் பேசி அருளிய செய்தியை மறுக்கின்றனர். உள்ளுணர்வு மூலம் இறைவன் அறிவிக்கும் செய்தியையும் மறுக்கின்றனர்.

 

மூன்று வகையான இறைச்செய்திகள் உள்ளதாகக் கூறும் இந்த வசனத்தையும் மறுக்கிறார்கள்.

 

வானவர்கள் வழியாகக் குர்ஆன் அல்லாத வேறு வஹீயும் வந்திருக்கலாம். அவற்றையும் இவர்கள் மறுத்தவர்களாகின்றனர்.

 

இறைவன் அருளியதைப் பின்பற்றுங்கள் என்ற கட்டளையில் பெரும் பகுதியை இவர்கள் மறுக்கின்றனர். ஹதீஸ்களைப் பின்பற்றுவோர் தான் அல்லாஹ் அருளியதை முழுமையாக நம்புகின்றனர்.

 

திருக்குர்ஆனின் கட்டளைகளைப் பின்பற்றுவதுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலையும் பின்பற்ற வேண்டும் என்பதைப் பற்றி மேலும் அறிய 18, 36, 39, 50, 55, 56, 57, 60, 67, 72, 105, 125, 127, 128, 132, 154, 164, 184, 244, 255, 256, 258, 286, 318, 352, 358, 430 ஆகிய குறிப்புகளையும் காண்க!

 

 








free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2019 tamilquran.in. Designed by Ahadh Media.
You 're visitors No. 292928