450. ஹாரூனின் சகோதரி என்றால் யார்?

 

இவ்வசனத்தில் (19:28) மர்யம் அவர்கள் ஹாரூனின் சகோதரி என்று அழைக்கப்பட்டுள்ளார்.

 

திருக்குர்ஆனில் குறைகாணப் புகுந்த சில கிறித்தவர்கள் ஹாரூன் என்பவர் மோசே காலத்தைச் சேர்ந்தவர். அவருக்கு எப்படி மர்யம் சகோதரியாக இருக்க முடியும்? என்று கேள்வியை நீண்ட காலமாக எழுப்பி வருகின்றனர். குர்ஆனில் வரலாற்றுப் பிழை உள்ளது என்றும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

 

ஒருவனை ஷைத்தானின் சகோதரன் என்று சொன்னால் இருவரும் ஒருதாய் வயிற்று மக்கள் என்று புரிந்து கொள்ள மாட்டோம். ஷைத்தானின் தன்மை இவனிடம் உள்ளது என்று புரிந்து கொள்வோம்.

 

யூதர்களில் வழிபாட்டுத் தலங்களுக்கான சேவை செய்யும் பொறுப்பு லேவியருக்கும், இதற்கான பூஜை செய்யும் வழிமுறையைக் கற்றுக் கொடுக்கும் பொறுப்பு ஆரோன் எனும் ஹாரூனுக்கும் கர்த்தரால் ஒப்படைக்கப்பட்டது. எனவே ஆலயத்தில் சேவை செய்பவர்கள் ஹாரூனின் சகோதரர்கள் எனப்பட்டனர்.

 

இதை யாத்திராகமம் 27:21 வசனத்திலும், யாத்திராகமம் 28:41-43 வசனங்களிலும், யாத்திராகமம் 27 முதல் கடைசி வரை உள்ள அதிகாரங்களிலும் காணலாம். லேவியராகமம் முதல் அதிகாரத்திலும் இதைக் காணலாம்.

 

மேரி எனும் மர்யம் அவர்கள் ஆலயப் பணிக்காக அர்ப்பணிக்கப்பட்டு இருந்தார்கள். பெண்ணாக இருந்தும் அவர்கள் இப்பணிக்காகத் தேர்வு செய்யப்பட்டு இருந்தனர். கர்த்தருக்கு பூஜை செய்பவர்கள் மற்றவர்களை விட ஒழுக்கத்தில் சிறந்து விளங்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்ப்பார்கள்.

 

கர்த்தரின் ஆலயத்தில் பணி செய்யும் பொறுப்பில் நீ இருந்தும் - அதாவது ஹாரூனின் சகோதரியாக இருந்தும் - இப்படி குழந்தையுடன் வந்து நிற்கிறாயே என்று அம்மக்கள் கேட்டனர்.

 

எனவே ஹாரூனின் சகோதரியே என்பது வரலாற்றுப் பிழை அல்ல. பைபிள் கூட சொல்லத் தவறிய மகத்தான உண்மையாகும்.

 

ஹாரூரின் சகோதரியே என்று அழைத்து உனது தந்தை கெட்டவராக இருந்ததில்லை. உனது தாயும் நடத்தை கெட்டவராக இருந்ததில்லை என்று அவர்கள் கூறியதாக இவ்வசனம் சொல்கிறது.

 

எந்த அர்த்தத்தில் ஹாரூனின் சகோதரி என்று அவர்கள் கூறினார்கள் என்பதை இதிலிருந்து அறியலாம்.

 

உன் தாயும், தந்தையும் நல்லவர்களாக இருந்துள்ளனர். நீயும் ஹாரூனுடைய பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளாய். அப்படி இருக்கும்போது தந்தையில்லாமல் பிள்ளை பெற்று வந்து நிற்கிறாயே என்பது தான் இதன் பொருள்.

 

உண்மை பேசுபவனை அரிச்சந்திரனுக்குத் தம்பி என்று இந்துக்கள் கூறுவார்கள். அவர்கள் நம்பிக்கைப்படி அரிச்சந்திரன் உண்மைக்கு எடுத்துக் காட்டாகத் திகழ்ந்தவன்.

 

பொய்யனைக் குறிப்பிட கோயபல்சின் அண்ணன் என்பார்கள்.

 

கோயபல்சுக்கு உடன்பிறந்தவன் என்று யாரும் இதைப் புரிந்து கொள்ள மாட்டார்கள்.

 

மர்யம் அவர்கள் பிறக்கும் முன்பே ஆலயத்துக்காக நேர்ச்சை செய்யப்பட்டார்கள். பிறந்த பின் ஆலயத்திலேயே தங்கி இறைப்பணி செய்து வந்தார்கள். இதனால் அவர் ஹாரூனின் சகோதரி என்று அந்த மக்கள் சொன்னது சரியாகத் தான் உள்ளது. பைபிள் சொல்லத் தவறிய உண்மையாகவும் இது அமைந்துள்ளது.

 

 








free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2019 tamilquran.in. Designed by Ahadh Media.
You 're visitors No. 228001