174. பாலுணர்வை ஏற்படுத்திய மரம்

 

தடை செய்யப்பட்ட மரத்தை ஆதம், ஹவ்வா ஆகிய இருவரும் சுவைத்த உடன் அவர்களின் மறைவிடம் அவர்களுக்குத் தெரிந்தது என்று இவ்வசனங்களில் (7:20, 7:22, 20:121) கூறப்பட்டுள்ளது.

 

இதை எவ்வாறு புரிந்து கொள்வது என்பதில் பலவித கருத்துக்கள் கூறப்படுகின்றன.

 

ஆதம் (அலை) அவர்கள் சொர்க்கத்தில் ஆடை அணிந்திருந்தனர். தடுக்கப்பட்ட மரத்தைச் சுவைத்தவுடன் ஆடை விலகி நிர்வாணமானார்கள். உடனே சொர்க்கத்தின் இலைகளால் தம்மை மறைத்துக் கொள்ளலானார்கள்.

 

இது பெரும்பாலான அறிஞர்களின் கருத்து.

 

மேற்கண்ட வசனங்களின் வாசக அமைப்பு இந்தக் கருத்தைச் சொல்வதால் இக்கருத்தையே அதிகமான அறிஞர்கள் கூறுகின்றனர்.

 

ஆனால் இக்கருத்தில் பல சந்தேகங்கள் எழுகின்றன.

 

சொர்க்கத்தில் நிர்வாணமாக மாட்டீர் என்று அல்லாஹ் கூறுவதாக 20:118 வசனம் கூறுகிறது. அல்லாஹ் இப்படி ஒரு உறுதிமொழி அளித்திருந்தால் அது மாறக்கூடாது. ஆனால் அம்மரத்தைச் சுவைத்தவுடன் அவர்கள் நிர்வாணமானார்கள் என்று கூறினால் அல்லாஹ் அளித்த வாக்குறுதி நிறைவேறாத நிலை ஏற்படுகிறது.

 

முரண்பாடு இல்லாத வகையில் இதற்கு எப்படி விளக்கம் கொடுப்பது?

 

20:118 வசனத்துக்கு "மரத்தைச் சுவைப்பது வரை நிர்வாணமாக மாட்டீர்'' என்று விளக்கம் கொடுத்தால் இந்த முரண்பாடு நீங்கிவிடும். மரத்தைச் சுவைத்து விட்டால் அதற்குத் தண்டனை நிர்வாணம் தான் என்ற கருத்தும் இதில் அடங்கும்.

 

ஆனால் மற்றொரு முரண்பாடு இப்போது ஏற்படுகிறது. மரத்தைச் சுவைத்ததற்காக நிர்வாணம் தண்டனையாக அளிக்கப்பட்டது என்றால் உடனே இலைகளால் நிர்வாணத்தை மறைத்துக் கொள்ள அங்கே வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கக் கூடாது. நிர்வாணம் என்ற தண்டனை சிறிது நேரம் கூட இல்லாமல் போய் விடுகிறது.

 

மரத்தைச் சுவைக்காமல் இருக்கும் வரை நீர் நிர்வாணமாக மாட்டீர் என்பதற்கு நிர்வாணத்தை உணர மாட்டீர் என்று பொருள் கொள்ளலாம். ஆண், பெண் இன வேறுபாட்டை அதுவரை அவர்கள் அறியாததால் அவர்கள் நிர்வாணமாக இருந்தாலும் அதை உணராமல் இருந்தனர்.

 

"அம்மரத்தைச் சுவைப்பதற்கு முன் இருவருக்கும் பாலுணர்வு இல்லாததால், நிர்வாணத்தை உணராமல் இருந்தனர். அம்மரத்தைச் சுவைத்தவுடன் பாலுணர்வும், இனக்கவர்ச்சியும் ஏற்பட்டதால் நிர்வாணத்தை உணர்ந்து சொர்க்கத்தின் இலைகளால் மறைத்துக் கொண்டனர்" என்று பொருள் கொள்ளும்போது முரண்பாடு வராது.

 

இவ்வாறு பொருள் கொள்வதற்கு மேலும் சில காரணங்களும் உள்ளன.

 

"மரத்திலிருந்து அவர்கள் சுவைத்தவுடன் அவ்விருவருக்கும் அவ்விருவரின் மறைவிடம் தெரிந்தது'' என்ற வாக்கியத்தை அல்லாஹ் பயன்படுத்தியுள்ளான்.

 

"மறைவிடம் தெரிந்தது'' என்று மட்டும் சொல்லி இருந்தால் நிர்வாணமானார்கள் என்று பொருள் கொள்ளலாம். "அவ்விருவருக்கும் தத்தமது மறைவிடம்'' என்ற சொற்றொடரை இறைவன் பயன்படுத்தியுள்ளான்.

 

ஒருவர் ஆடை அணிந்திருந்தாலும் அவருக்கு அவருடைய மறைவுறுப்பு அவ்வப்போது தெரியத்தான் செய்யும். ஆடை விலகியவுடன் தான் அவர்களுக்கே அவர்களின் மறைவுறுப்பு தெரிய வேண்டும் என்பதில்லை.

 

அவர்களுக்கே அவர்களின் மறைவுறுப்பு தெரிந்தது என்று கூறப்படுவதால் "மறைவுறுப்பு கண்ணுக்குத் தெரிந்தது" என்ற கருத்தில் இது பயன்படுத்தப்படவில்லை; கருத்துக்குத் தெரிந்தது என்ற பொருளில் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை அறியலாம்.

 

மேலும் "மரத்தைச் சுவைத்தவுடன் அவர்களின் வெட்கத்தலங்கள் அவர்களுக்குத் தெரிந்தன" என்று இறைவன் கூறுகிறான். 'தெரிந்தன' என்று நாம் தமிழாக்கம் செய்த இடத்தில், 'பதத்' என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

 

இச்சொல் சில இடங்களில் "கண்ணுக்குத் தெரிதல்" என்ற பொருளிலும், அதிகமான இடங்களில், மனதில் தோன்றுதல் என்ற பொருளிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

 

உதாரணமாக, யூஸுஃப் நபியவர்கள் சிறையில் அடைக்கப்பட்டதைப் பற்றி 12:35 வசனத்தில் இறைவன் கூறும்போது, "சான்றுகளைக் கண்ட பின்னரும் குறிப்பிட்ட காலம் வரை அவரைச் சிறையில் அடைக்க வேண்டும் என்று அவர்களுக்குத் தோன்றியது'' என்று கூறுகிறான்.

 

இவ்வசனத்தில் "தோன்றியது'' என்று தமிழாக்கம் செய்த இடத்தில் 'பதத்' என்ற சொல்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. இங்கே கண்ணுக்குத் தெரிந்தது என்று பொருள் கொள்ள முடியாது

 

6:28, 3:154, 5:101, 12:77, 39:48, 45:33 ஆகிய வசனங்களிலும், 'பதத்' என்ற சொல் கண்களுக்குத் தெரிதல் என்ற பொருளில் பயன்படுத்தப்படவில்லை.

 

எனவே தான், 7:22, 20:121 ஆகிய வசனங்களிலும், அவ்விருவருக்கும் தமது வெட்கத்தலங்களின் தனித்தன்மை பற்றித் தெரிய வந்தது என்று நாம் பொருள் கொண்டுள்ளோம்.

 

உதாரணமாக குழந்தைப் பருவத்தில் இருப்பவர்களுக்கு தங்களின் மறைவுறுப்பு கண்களுக்குத் தெரிந்தாலும் அந்த உறுப்பு பற்றிய விபரம் எதுவும் அவர்களுக்குத் தெரியாது. பருவ வயதை அடைந்த உடன் அல்லது அந்தப் பருவத்தை நெருங்கிய உடன் அந்த உறுப்புக்களின் தனித்தன்மையைத் தெரிந்து கொள்கின்றனர்.

 

இதுபோல் ஆதம், ஹவ்வா இருவரும் அம்மரத்தைச் சுவைப்பதற்கு முன்னர் இந்த விஷயத்தில் மட்டும் குழந்தை நிலையில் இருந்தனர். அம்மரத்தைச் சுவைத்தவுடன் பருவ வயதை அடைந்தவர்கள் போலானார்கள் என்று புரிந்து கொள்வதுதான் சரியானதாகத் தெரிகின்றது.

 

 








free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2019 tamilquran.in. Designed by Ahadh Media.
You 're visitors No. 228166