289. விதியை நம்புதல் மூட நம்பிக்கையா?

 

இவ்வசனத்தில் (57:23) விதியை ஏன் நம்ப வேண்டும் என்பதற்கான காரணமும் அதனால் கிடைக்கும் நன்மையும் சொல்லப்படுகிறது.

 

விதியை நம்புவது இஸ்லாத்தின் முக்கிய கொள்கைகளில் ஒன்றாகும். இஸ்லாம் மார்க்கத்தில் எல்லா நம்பிக்கைகளுக்கும் அறிவுப்பூர்வமாக விளக்கம் அளிக்க முடியும் என்றாலும், விதியைப் பற்றி சர்ச்சை செய்யக்கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லி விட்டார்கள்.

 

ஏனென்றால் ஒரு கோணத்தில் பார்க்கும்போது விதி இருப்பது போலவும், இன்னொரு கோணத்தில் பார்க்கும்போது விதி இல்லாதது போலவும் ஒரு மயக்கம் மனிதனுக்கு ஏற்படும்.

 

விதி என்று ஒன்று இருந்தால் "நான் நல்லவனாகவோ, கெட்டவனாகவோ நடப்பதற்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்? எனது கெட்ட செயலுக்காக எனக்கு ஏன் நரகத்தைத் தரவேண்டும்?" என்பன போன்ற பல கேள்விகள் இதில் எழும்.

 

விதி என்று ஒன்று இல்லாவிட்டால் "நான் என்ன செய்யப் போகிறேன்'' என்பது இறைவனுக்குத் தெரியாது என்று ஆகி விடும். நாளை நான் என்ன செய்யப் போகிறேன் என்பது தெரியாத ஒருவன் எப்படி இறைவனாக இருக்க முடியும்? என்ற கேள்வி வரும்.

 

விதி இல்லை என்று சொன்னாலும் விபரீதம்!

 

விதி இருக்கிறது என்று சொன்னாலும் விபரீதம்!

 

எனவே தான் விதியை நம்ப வேண்டும்; அதே நேரத்தில் விதியின் மீது பழி போட்டு விடாமல் நம் செயல்பாட்டை அமைத்துக் கொள்ள வேண்டும். இதை விளங்கிக் கொள்ளும் அறிவை அல்லாஹ் நமக்குத் தரவில்லை என்று தோல்வியையும் ஒப்புக் கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது.

 

அறிவுப்பூர்வமான பல்லாயிரக்கணக்கான கொள்கை கோட்பாடுகளைத் தந்த இறைவன் நம்மைச் சோதிப்பதற்காகக் கூட இந்த நிலையை ஏற்படுத்தியிருக்கலாம்.

 

அதே நேரத்தில் விதியைப் பற்றி மற்ற மதங்களில் உள்ள நம்பிக்கையைப் போல் இஸ்லாத்தில் விதியைப் பற்றிய நம்பிக்கை அமையவில்லை.

 

"எல்லாமே விதிப்படி நடக்கும். எனவே உழைக்காதே! நோய் வந்தால் மருத்துவம் செய்யாதே!'' என்று சில மதங்களில் கூறப்படுவது போல் இஸ்லாம் கூறவில்லை.

 

மாறாக எது நடந்து முடிந்து விட்டதோ அந்த விஷயங்களில் மட்டுமே விதியின் மேல் பாரத்தைப் போடுமாறு இஸ்லாம் வழிகாட்டுகிறது.

 

எது நடக்கவில்லையோ அந்த விஷயங்களில் விதி என்று ஒன்று இல்லாவிட்டால் எப்படி நடக்க வேண்டுமோ அப்படி நடக்குமாறு வழிகாட்டுகிறது; உழைக்கச் சொல்கிறது; பாடுபடச் சொல்கிறது.

 

எனவே இஸ்லாம் கூறுவது போல் விதியை நம்புவதால் மனிதனின் முன்னேற்றத்துக்குக் கடுகளவும் அது தடையாக இராது.

 

அதே நேரத்தில் விதியை நம்புவதால் மனித குலத்துக்குக் கிடைக்கும் நன்மைகளை நினைத்துப் பார்த்தால் அதற்காகவாவது விதியை நம்புவதுதான் மனித குலத்துக்கு உகந்ததாகும்.

 

ஒரு மனிதன் தனது முழுச் சக்தியையும் பயன்படுத்தி ஒரு காரியத்தில் ஈடுபடுகிறான். அந்தக் காரியம் கைகூடவில்லை என்று வைத்துக் கொள்வோம்.

 

விதியை நம்புகின்றவன் "நாம் என்ன தான் முயன்றாலும் இறைவனின் நாட்டமும் இருக்க வேண்டுமல்லவா?'' எனக் கருதி சீக்கிரத்தில் இயல்பு நிலைக்கு வந்து விடுவான்.

 

விதியை நம்பாதவன் இதை எப்படி எடுத்துக் கொள்வான்?

 

இவ்வளவு பாடுபட்டும் கைகூடவில்லையே என்று புலம்பியே அவன் மனநோயாளியாவான். அந்த அளவுக்குப் போகாவிட்டாலும் அவன் இயல்பு நிலைக்கு வருவது மிகவும் தாமதமாகும்.

 

கேரளாவில் தற்கொலை செய்பவர்கள் பற்றிய ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், ஆண், பெண் என்ற பாலின அடிப்படையிலும், மதங்களின் அடிப்படையிலும், ஜாதி அடிப்படையிலும், படித்தவன் படிக்காதவன் என்ற அடிப்படையிலும் தற்கொலை செய்வோரின் பட்டியல் தயாரிக்கப்பட்டது. இந்தப் பட்டியலில் முஸ்லிம்கள் மட்டுமே மிகக் குறைந்த விகிதத்தில் இருந்தனர்.

 

இதற்கான காரணத்தை அந்த ஆய்வுக் குழுவினர் ஆய்வு செய்தபோது, எந்தத் துன்பம் ஏற்பட்டாலும், "இறைவனின் நாட்டம்" என்று கூறி சாதாரணமாக முஸ்லிம்கள் எடுத்துக் கொள்வதால் தற்கொலைக்கு அவர்கள் தூண்டப்படுவதில்லை என்று கண்டறிந்தனர்.

 

விதியை நம்புவதால் இரண்டு நன்மைகள் ஏற்படும் என்று இவ்வசனத்தில் (57:23) அல்லாஹ் கூறுகிறான்.

 

நமக்கு செல்வங்களையும், வசதிகளையும், வாய்ப்புகளையும் அல்லாஹ் தாராளமாக வழங்கினால் நம்மிடம் ஆணவமும், கர்வமும் குடியேறும்.

 

விதியை நம்புவதன் மூலம் இந்த மனநோயிலிருந்து விடுபடலாம்.

 

"இந்தச் செல்வங்கள் அல்லாஹ்வின் விதிப்படி தான் நமக்குக் கிடைத்துள்ளனவே தவிர நம்மால் அல்ல'' என்று நினைத்தால் ஆணவம் இருந்த இடம் தெரியாமல் மறையும்.

 

அதுபோல் தாங்க முடியாத துன்பம் நமக்கு ஏற்பட்டால் நாம் இடிந்து போய் விடுவோம். பல நாட்கள், பல மாதங்கள் எதிலும் ஈடுபாடு காட்டாமல் விரக்தியடைந்து விடுவோம்.

 

இந்த மனநோயையும் விதியின் மீதுள்ள நம்பிக்கை நீக்கும்.

 

"நம்மால் என்ன செய்ய முடியும்? அல்லாஹ்வின் நாட்டம் அவ்வளவு தான்'' என்று நினைத்தால் மிக விரைவாக ஒருவன் இயல்பு நிலையை அடைவான்.

 

இவ்விரு நன்மைகளும் விதியை நம்புவதால் மனித குலத்துக்கு ஏற்படுவதாக இவ்வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.

 

நடந்து விட்ட விஷயத்திற்குத்தான் விதியை நினைக்க வேண்டும்; நடக்காத விஷயங்களில் எது விதி என்று நமக்குத் தெரியாத காரணத்தால், விதி என்று ஒன்று இல்லாதது போல் நமது நடவடிக்கைகளை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதை இந்த வசனத்திலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.

 

இன்றைய நவீன கண்டுபிடிப்புகள் கூட விதியைப் பற்றி பேசும்போது முரண்பட்ட நிலைபாட்டை எடுக்கும் வகையில்தான் அமைந்துள்ளன.

 

மனிதனின் பெரும்பாலான செயல்களுக்கு அவனிடம் உள்ள செல்களும், மரபணுக்களும் தான் காரணம் என்று இப்போது ஆய்வு செய்து சொல்கிறார்கள். அந்த அணுக்கள் காரணமாகவே மனிதர்களின் நடத்தைகளும், குணநலன்களும் மாறுபட்டதாக உள்ளன என்றும் கூறுகின்றனர்.

 

அதாவது ஒருவனிடம் திருட்டுப் புத்தி உள்ளது என்றால் அதற்கேற்ற வகையில் அவனது செல்கள் அமைந்துள்ளன என்கிறார்கள்.

 

அவனது கெட்ட செயலுக்கு அவனிடம் உள்ள செல்கள்தான் காரணம் என்றால் அவனது குற்றங்களுக்காக அவனைத் தண்டிப்பது நியாயமில்லை என்று கூற வேண்டுமல்லவா?

 

ஆனால் அவ்வாறு கூறாமல் திருடனைத் தண்டிக்க வேண்டும் என்பதையும் நியாயப்படுத்துகிறார்கள்.

 

அதாவது விதி விஷயத்தில் இதுவரை இவர்கள் கேட்டுவந்த கேள்விக்கு இவர்களே இலக்காகி விடுகிறார்கள். இதில் இருந்து விதி என்பது மனித அறிவின் மூலம் புரிந்து கொள்ள முடியாத ஒன்று என்பதும், விதி என ஒன்று உள்ளது என்பதும் உறுதியாகிறது.

 

 








free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2019 tamilquran.in. Designed by Ahadh Media.
You 're visitors No. 228088