248. பூமிக்கு முளைகளாக மலைகள்

 

பூமியில் அமைக்கப்பட்டுள்ள மலைகளை முளைகளாக நாட்டியிருக்கிறோம் என்று இவ்வசனங்களில் (15:19, 16:15, 21:31, 27:61, 31:10, 41:10, 50:7, 77:27, 78:7, 79:32) அல்லாஹ் கூறுகிறான்.

 

ஒரு பொருள் இன்னொரு பொருளை விட்டும் பிரிந்து விடாதிருப்பதற்காக அறையப்படுவதே முளைகளாகும்.

 

இந்தப் பூமி பல்வேறு அடுக்குகளால் அமைக்கப்பட்டுள்ளது. மேல் அடுக்குகள் எடை குறைந்தவையாகவும், உள் அடுக்குகள் கனத்த எடை உடையவையாகவும் உள்ளன.

 

வேகமாகப் பூமி சுழலும்போது உள்ளடுக்கில் உள்ள கனமான பொருட்களும், மேலடுக்கில் உள்ள எடை குறைவாக உள்ள பொருட்களும் ஒரே வேகத்தில் சுற்ற இயலாது.

 

இந்த நிலை ஏற்பட்டால் மேல் அடுக்கில் உள்ள மனிதர்கள் தூக்கி எறியப்படுவார்கள்; கட்டடங்கள் நொறுங்கி விடும்.

 

இதைத் தடுக்க வேண்டுமானால் கனமான அடுக்குகளையும், கனம் குறைந்த அடுக்குகளையும் இணைக்கும் விதமாக முளைகள் நாட்டப்பட வேண்டும். இதற்காகவே மலைகள் உருவாக்கப்பட்டன என்று இவ்வசனங்கள் கூறுகின்றன.

 

பூமியின் மேலே நாம் பார்க்கும் மலைகளின் உயரத்தை விட அதிக அளவு ஆழத்தில் பூமிக்கு அடியிலும் மலைகள் அறையப்பட்டுள்ளன.

 

ஆங்காங்கே இவ்வளவு ஆழமாக நிறுவப்பட்டுள்ள மலைகளின் காரணமாக மேல் அடுக்குகளும், கீழ் அடுக்குகளும் ஒன்றையொன்று பிரிந்து விடாத வகையில் இணைந்து சுழல முடிகிறது.

 

இந்த மாபெரும் அறிவியல் உண்மை 14 நூற்றாண்டுகளுக்கு முன்னரே கூறப்பட்டிருப்பது, திருக்குர்ஆன் இறைவேதம் என்பதற்கு சான்றாக அமைந்துள்ளது.

 

மேலும் விபரத்திற்கு 408வது குறிப்பைக் காண்க!

 

 








free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2019 tamilquran.in. Designed by Ahadh Media.
You 're visitors No. 228330