69. பெண்களுக்கு இத்தா ஏன்?
கணவனை இழந்த பெண்கள் உடனே மறுமணம் செய்யக் கூடாது என்றும், எவ்வளவு நாட்களுக்குப் பின்னர் அவர்கள் மறுமணம் செய்யலாம் என்றும் இவ்வசனங்கள் (2:234, 2:235, 33:49, 65:1, 2:228, 2:231, 2:232, 65:1) கூறுகின்றன. இது இத்தா காலம் என்று சொல்லப்படுகிறது.
2:234, 2:235 வசனங்களில் கணவனை இழந்த பெண்கள் நான்கு மாதம், பத்து நாட்கள் முடியும் வரையிலும் மறுமணம் செய்யக் கூடாது என்று கூறப்படுகின்றது.
கர்ப்பினிகளாக இருந்தால் அவர்கள் பிரசவிக்கும் வரை இத்தாவைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், மாதவிடாய் அற்றுப் போன வயதானவராக இருந்தால் மூன்று மாதங்கள் இத்தாவைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று 65:4 வசனம் கூறுகின்றது.
இந்த வகை இத்தா, விவாகரத்து செய்யப்பட்ட பெண்களுக்கு மட்டும் உரியது என்று சிலர் கூறுவது ஏற்கத்தக்கதல்ல. இவ்வசனத்தில் பொதுவாக பெண்களின் இத்தா என்றுதான் சொல்லப்பட்டுள்ளது. இது விவாகரத்து செய்யப்பட்ட பெண்களுக்கும், கணவனை இழந்த பெண்களுக்கும் பொதுவான சட்டம் தான் என்பதே சரி.
கணவனுடன் வாழ்ந்தவள் அவனது கருவைச் சுமந்திருக்கலாம்; அந்த நிலையிலேயே அவள் இன்னொருவனை மணந்து கொண்டால் அந்தக் குழந்தையின் எதிர்காலம் பாதிப்படையும். இரண்டாம் கணவன் அக்குழந்தை தனது குழந்தை இல்லை எனக் கூறுவான்.
முதல் கணவனின் குடும்பத்தாரும் அது தமது குடும்பத்துக் குழந்தை இல்லை எனக் கூறி விடக்கூடும். தந்தை யார் என்பது தெரியாததால் மனரீதியான பாதிப்பு அக்குழந்தைக்கு ஏற்படும். தகப்பனிடமிருந்து கிடைக்க வேண்டிய சொத்துரிமை கிடைக்காமல் போய் விடும்.
"இன்னொருவரின் குழந்தையைச் சுமந்து கொண்டு என்னை ஏமாற்றி விட்டாள்'' என்று இரண்டாம் கணவன் நினைத்தால் அப்பெண்ணின் எதிர்காலமும் கேள்விக் குறியாகி விடும்.
"கருவில் குழந்தை இருப்பதை அறிய ஒரு மாதம் போதும்? அந்த மாதத்தில் மாதவிலக்கு ஏற்பட்டால் குழந்தை இல்லை என்பது தெரிந்து விடுமே? நான்கு மாதம் பத்து நாட்கள் அதிகமல்லவா?'' என்று சிலர் நினைக்கலாம்.
இது நியாயமான கேள்வி தான். ஆனால் நடைமுறையில் சில சிக்கல்களைத் தவிர்க்கவே இஸ்லாம் நான்கு மாதங்களும், பத்து நாட்களும் காத்திருக்கச் சொல்கிறது.
ஒரு பெண் தான் கருவுற்றிருப்பதை முதல் மாதமே அறிந்து கொண்டாலும் அதை அவள் மறைக்க முயற்சிக்கலாம். தான் கருவுறவில்லை என்று கூறி இன்னொருவனைத் திருமணம் செய்யலாம். நான்கு மாதம் பத்து நாட்கள் கழிந்த பின் இவ்வாறு கூற முடியாது. கர்ப்பமாக இருப்பது வெளிப்படையாகவே மற்றவர்களுக்கும் தெரிந்து விடும்.
மேலும் சமீபத்தில் இஸ்ரேல் நாட்டு விஞ்ஞானிகள் கண்டறிந்த உண்மையும் இத்தாவின் அவசியத்தை உணர்த்துகின்றது. ஒரு ஆணுடன் ஒரு பெண் உடலுறவு கொண்டால் அதனால் ஏற்பட்ட பதிவுகள் நான்கு மாதங்கள் கழித்தே மறையும் என்பதுதான் அந்தக் கண்டுபிடிப்பாகும்.
குறைப் பிரசவமாக ஒரு குழந்தையை அவள் பெற்றெடுத்தால் அது முந்தைய கணவனுடையதாக இருக்குமோ என்று இரண்டாம் கணவன் சந்தேகப்படுவான். நான்கு மாதம் பத்து நாட்கள் கடந்த பின்பு அவன் இப்படிக் கூற முடியாது. வயிற்றில் குழந்தை இருந்தால் நான்கு மாதத்தில் வெளிப்படையாகத் தெரிந்திருக்குமே என்று அவன் உண்மையை விளங்கிக் கொள்வான்.
இத்தகைய காரணங்களால், பெண்களுக்கு நன்மை செய்வதற்காக, அவர்களது எதிர்காலம் மகிழ்ச்சியாக அமைவதற்காக, அவர்களது குழந்தையின் எதிர்காலப் பாதுகாப்புக்காக இறைவன் இந்த ஏற்பாட்டைச் செய்துள்ளான்.
சில முஸ்லிம்கள் நான்கு மாதம், பத்து நாட்கள் கணவனை இழந்த பெண்களை இத்தா என்ற பெயரில் இருட்டறையில் அடைத்துக் கொடுமைப்படுத்துகின்றனர். இது குற்றமாகும். மறுமணம் செய்யாமல் இருப்பதும், திருமணத்தைத் தூண்டும் அலங்காரங்களைத் தவிர்ப்பதும் தான் இத்தா என்பதை அவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.
இது தவிர இன்னொரு வகை இத்தாவும் உண்டு. மனைவியை கணவன் விவாகரத்துச் செய்தால் அவர்கள் மறுமணம் செய்யாமல் காத்திருக்கும் காலமும் இத்தா எனப்படும். அதாவது விவாகரத்து முடிந்த உடன் பெண்கள் மறுமணம் செய்யாமல் மூன்று மாதவிடாய்க் காலம் காத்திருக்க வேண்டும். இந்த காலகட்டத்துக்குள் கணவன் அவளுடன் சேர்ந்து கொள்ளலாம். இந்த இத்தாவை 2:228, 2:231, 2:232, 33:49, 65:1 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.
இந்த இத்தாவுக்கு தனியாக எந்தக் கட்டுப்பாடும் மார்க்கத்தில் சொல்லப்படவில்லை. அந்தக் காலம் முடிவதற்குள் மறுமணம் செய்யக் கூடாது என்பது மட்டுமே இந்த இத்தாவின் ஒரே விதியாகும்.
இத்தா குறித்த மேலதிக விபரங்களை அறிந்திட 360, 404, 424 ஆகிய குறிப்புகளைப் பார்க்கவும்.