20. தற்கொலை செய்யக் கட்டளையா?

 

உங்களையே கொன்று விடுங்கள் என்று மூஸா நபியவர்கள் தமது சமுதாயத்துக்குக் கூறியதாக 2:54 வசனம் கூறுகிறது. இதை நேரடிப் பொருளில் பெரும்பாலான விரிவுரையாளர்கள் விளங்கியுள்ளனர்.

 

காளைச் சிற்பத்தைக் கடவுளாக ஆக்கியதற்காக மூஸா நபியின் சமுதாயம் தம்மைத் தாமே கொன்று விட வேண்டும் என்று மூஸா நபி கட்டளையிட்டதாக அந்த விரிவுரையாளர்கள் கூறுகின்றனர்.

 

தமது சமுதாயத்தினர் ஏகத்துவக் கொள்கைக்கு எதிராக நடந்து கொண்டதைக் கண்டபோது மூஸா நபியவர்கள் கடுமையாகக் கோபம் கொண்டார்கள். தமது கையில் உள்ள வேதத்தையே அவர்கள் கீழே போடும் அளவுக்கும், தமது சகோதரரும் சக நபியுமான ஹாரூனைப் பிடித்து இழுத்து அடிக்கும் அளவுக்கும் அந்தக் கோபம் இருந்ததாக 7:150 வசனம் கூறுகிறது.

 

இவ்வாறு கடுமையாகக் கோபம் கொண்ட நிலையில் "செத்துத் தொலையுங்கள்'' என்று கூறுவது மனிதரின் இயல்பாக உள்ளது. "மரணித்து விடுங்கள்'' என்ற பொருளை நினைத்துக் கொண்டு யாரும் இவ்வாறு கூறுவதில்லை. கோபத்தை வெளிப்படுத்தவே இவ்வாறு கூறுகிறார்கள்.

 

மூஸா நபியின் இந்தக் கூற்றையும் இவ்வாறே நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் தற்கொலை செய்து கொள்ளுமாறு இறைத்தூதர்கள் கட்டளையிட்டிருக்க முடியாது.

 

"உங்கள் மரணத்திற்குப்பின் உங்களை உயிர்ப்பித்தோம்'' என்று இதன் தொடர்ச்சியாகக் கூறப்பட்டுள்ளது. இது அவர்கள் தற்கொலை செய்தார்கள் என்ற கருத்தைத் தரும் என்று இந்த விரிவுரையாளர்கள் விளங்கிக் கொண்டதே இதற்குக் காரணம்

 

ஆனால் இது தவறாகும்.

 

"உங்களையே கொன்று விடுங்கள்'' எனக் கூறும் 2:54 வசனத்தை மட்டும் கவனிக்காமல் அதைத் தொடர்ந்து வரும் இரு வசனங்களையும் கவனித்தால், அவர்கள் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்பதை அறிய முடியும்.

 

2:55 வசனத்தில் இறைவனைக் காட்டுமாறு அவர்கள் கேட்டதால் அவர்களைப் பேரிடி தாக்கியது என்று கூறப்பட்டுள்ளது.

 

2:56 வசனத்தில், "மரணத்திற்குப் பின் உங்களை உயிர்ப்பித்தோம்'' எனக் கூறப்பட்டுள்ளது.

 

இம்மூன்று வசனங்களையும் கவனித்துப் பார்க்கும்போது, இறைவனை நேரில் காட்டுமாறு அவர்கள் கேட்டதால், இறைவன் அவர்களைப் பெரும் சப்தத்தால் தாக்கினான். அப்போது தான் அவர்கள் மரணித்தனர்; இதன் பிறகு தான் "அவர்களை உயிர்ப்பித்தோம்'' என்று கூறப்படுகிறது.

 

எனவே அவர்கள் தற்கொலை செய்து கொண்டு சாகவில்லை; இறைவனை நேரில் காட்டுமாறு கேட்டதால்தான் சாகடிக்கப்பட்டார்கள் என்பது இதிலிருந்து தெரிகிறது.

 

 








free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2019 tamilquran.in. Designed by Ahadh Media.
You 're visitors No. 44610