252. சந்தேகமில்லாத மரணம்

 

இவ்வசனத்தில் (15:99) "யக்கீன் வரும் வரை உம் இறைவனை வணங்குவீராக!'' எனக் கூறப்படுகிறது.

 

யக்கீன் என்றால் உறுதியான ஒன்று எனவும் பொருள் உள்ளது.

 

மனதில் ஏற்படும் உறுதி எனவும் பொருள் உண்டு.

 

நாங்கள் மெஞ்ஞானிகள் எனக் கூறிக்கொண்டு மதகுரு வேஷம் போடும் சில ஏமாற்றுப் பேர்வழிகள் யகீன் என்பதற்கு இரண்டாவது பொருளைத் தான் கொடுக்க வேண்டும் எனக் கூறுகின்றனர்.

 

எங்களுக்கு உறுதி வந்துவிட்டதால் நாங்கள் வணங்கத் தேவை இல்லை என்று கூறி அப்பாவி மக்களை ஏமாற்றுகின்றனர். இஸ்லாத்தின் எந்த வணக்கத்தையும் செய்யாமல் இஸ்லாத்தின் எந்தக் கட்டளைக்கும் கட்டுப்படாமால் நடக்கின்றனர். இவ்வசனத்தைச் சான்றாகக் காட்டி தங்கள் செயலை அவர்கள் நியாயப்படுத்துகின்றனர்.

 

ஆனால் இவ்வசனத்திற்கு இவர்கள் கொடுக்கும் அர்த்தத்தைக் கொடுக்க முடியாது.

 

இந்தச் சமுதாயத்தில் அதிக உறுதியைப் பெற்றிருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடைசி மூச்சு வரை இறைவனை வணங்கினார்கள். அதுபோல் மிகச்சிறந்த சமுதாயத்தினரான நபித்தோழர்கள், மரணிக்கும் வரை இறைவனை வணங்கினார்கள். எங்களுக்கு உறுதி வந்து விட்டது; இனி நாங்கள் வணங்கத் தேவை இல்லை என்று அவர்களில் ஒருவரும் சொன்னதில்லை.

 

எனவே உறுதியான ஒரு நிகழ்வு அதாவது மரணம் வரும் வரை என்று தான் இதற்குப் பொருள் கொள்ள வேண்டும்.

 

உலகில் எந்த மனிதனும் மறுக்காத உறுதியான ஒரே விஷயம் மரணம் தான். எனவே மரணத்தைக் குறிக்கும் இன்னொரு சொல்லாகவே அரபுகள் யக்கீன் என்பதைப் பயன்படுத்தி வந்தனர். இன்றும் பயன்படுத்துகின்றனர்.

 

74:47 வசனத்தில் யக்கீன் வரும் வரை தவறில் மூழ்கிக் கிடந்தோம் என்று தீயவர்கள் கூறுவதாகச் சொல்லப்பட்டுள்ளது. இவ்வசனத்தில் யக்கீன் என்பதற்கு மரணம் என்பதைத் தவிர வேறு பொருள் கொடுக்க முடியாது.

 

உஸ்மான் பின் மழ்வூன் என்ற தோழர் இறந்தபோது இவர் மரணித்து விட்டார் என்று சொல்வதற்குப் பதிலாக இவருக்கு யக்கீன் வந்து விட்டது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (பார்க்க : புகாரி 1243)

 

 








free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2019 tamilquran.in. Designed by Ahadh Media.
You 're visitors No. 228323